நமது நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்தன, இதில் தமிழகத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.. ஆனால், காலப்போக்கில் இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. மக்கள் பாரம்பரிய அரிசியின் பயன்களை சரிவர தெரிந்து கொள்ளாமல் உள்ளனர்.
இந்நிலையில், கோவையில் நடந்த வளைகாப்பு விழா ஒன்றில் பாரம்பரிய அரிசிகளை கொண்டு இயற்கையாக வழங்கப்பட்ட வளைகாப்பு விருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது…
கோவை சூலூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் பூர்ண சந்திரிகா- ராஜ்குமார் . பூர்ண சந்திரிகாவின் வளைகாப்பு விழா,கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காலை சிற்றுண்டியாக வரகு அரிசி பொங்கல், தூயமல்லி அரிசி மற்றும் பூங்கார் அரிசியில் இட்லி, கறிவேப்பிலை பூரி, சாமை அவல் இனிப்பு, தூயமல்லி அரிசி கொழுக்கட்டை, நாட்டு சக்கரை, சுக்கு மல்லி, கொய்யா இலை தேநீர் மிளகு போண்டா என தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை பரிமாறி உள்ளனர்.
பழனியில் பழைய ஆயக்குடியில் உள்ள கவிதா என்ற இயற்கை விவசாயி இதை செய்து அசத்தி உள்ளார்.
இது மட்டும் அல்லாது வளைகாப்பில் முக்கிய விருந்தான மதிய உணவில், கருப்பு கவுனி அரிசியில் சர்க்கரை பொங்கல், தங்கச் சம்பா அரிசியில் கேரட் சாதம், சிவன் சம்பா அரிசியில் தேங்காய் சாதம், மிளகு சம்பா அரிசியில் எலுமிச்சை சாதம், பூங்கார் அரிசியில் கறிவேப்பிலை சாதம், வாசனை சீரக சம்பா அரிசியில் காய்கறி சாதம், சாமை அரிசியில் தயிர் சாதம், மாப்பிள்ளை சம்பா அரிசியில் அவல் பாயசம், தூய மல்லி அரிசியில் சோறு, புளிக்குழம்பு, ரசம்,என முற்றிலும் இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள். காய்கறிகள் மற்றும் மரச்செக்கில் பிழிந்த எண்ணெய் வகைகளையும், நாட்டுச் சர்க்கரையை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையே பரிமாறி அசத்தியுள்ளனர்…
மாறி வரும் உணவு பழக்க முறை, மேற்கத்திய மற்றும் வட இந்திய துரித உணவுகளால் புற்று நோய் போன்ற நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கிய உணவு முறையாக இருந்து வந்துள்ள நம் தமிழர் பாரம்பரிய முறை விருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil