உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி செய்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோவையில் சைக்கிளத்தான் மற்றும் வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.
இதயம், உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக உள்ளது.
தற்போது மாறி வரும் உணவு நடை முறைகளால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாக உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் சைக்கிளத்தான் மற்றும் வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.
உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவை கே.ஜி.மருத்துவமனை முன்பாக துவங்கிய இந்த பேரணியை மருத்துவர் பக்தவத்சலம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் பக்தவத்சலம், ’மாறி வரும் உணவு பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.
உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நீரிழிவு, உணவு பழக்கம் மற்றும் புகைத்தல், மது போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. தற்போதைய காலத்தில் குறைந்த வயதினருக்கு கூட மாரடைப்பு வருவதை காண முடிகிறது.
மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற் பயிற்சி, நடைபயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்’ என தெரிவித்தார்
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“