/indian-express-tamil/media/media_files/2025/08/04/cold-cough-steam-inhalation-2025-08-04-13-07-22.jpg)
Dr Arun kumar
சளி, இருமல் என வந்தாலே உடனே மருந்துக்கடைக்கு ஓடி, ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை வாங்கிப் போடும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், இது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? சளி மற்றும் காய்ச்சல் பெரும்பாலும் 90% வைரஸ் தொற்றுகளால் தான் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாது என்கிறார் டாக்டர் அருண் குமார்.
ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைத் தவிர்ப்பது ஏன் அவசியம்?
வைரஸ் தொற்றுகள் பொதுவாக நான்கு முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு தானாகவே குணமாகிவிடும். வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்ட்டிபயாடிக்குகள் வேலை செய்யாது. நாம் சுயமாக ஆன்ட்டிபயாடிக்குகளைப் பயன்படுத்தும்போது, உடலுக்குத் தேவையில்லாத மருந்துகள் உள்ளே செல்கின்றன.
ஒருவேளை, சளி ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்து, அதன் தீவிரம் அதிகரிக்கும்பட்சத்தில், அது பாக்டீரியா தொற்றாக இருக்க வாய்ப்பு உண்டு. அப்போதுகூட, மருத்துவரை அணுகி, அவருடைய பரிந்துரையின் பேரில் மட்டுமே ஆன்ட்டிபயாடிக்குகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சுயமாக மருந்துக்கடையில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
சளித் தொல்லைக்கு பயனுள்ள சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன:
நீராவி பிடித்தல்: மூக்கு அடைப்பு, மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு நீராவி பிடித்தல் ஒரு சிறந்த தீர்வு. இதற்காக எந்த ஒரு சிறப்பு மூலிகையையும் சேர்க்கத் தேவையில்லை. சாதாரண வெந்நீரில் ஆவி பிடிப்பதே போதுமானது.
உப்பு நீர் கொப்பளித்தல்: தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை வலி இருந்தால், வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். இது தொண்டைக்கு இதமளித்து வலியைப் போக்க உதவும்.
இதமான பானங்கள்: சூடான டீ, காபி அல்லது சூப் போன்ற இதமான பானங்களை அருந்துவது தொண்டைக்கு இதமளித்து, சளியிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், மருந்துகளின்றி சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம். மேலும், எந்தவொரு தீவிரமான உடல்நலக் குறைவுக்கும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.