உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்:
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக டாக்டர் சிங்லா குறிப்பிடுகிறார். குளிர்ந்த நீரின் அதிர்ச்சியானது ரத்த அழுத்தத்தை திடீரென அதிகரிக்கச் செய்யும், இது ஏற்கனவே உயர் ரத்த அழுத்த அளவுகளைக் கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. ரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் அதிகரிப்பு, பக்கவாதம், மாரடைப்பு அல்லது பிற இதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.
பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்கள்:
பக்கவாதம் அல்லது பெருமூளை ரத்தநாள நோய்களின் (cerebrovascular diseases) வரலாறு கொண்டவர்கள், குளிர்ந்த நீரில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சிங்லா கூறினார். திடீர் வெப்பநிலை மாற்றம் ரத்த அழுத்தத்தில் ஒரு கூர்மையான உயர்வை தூண்டுவதன் மூலம் மீண்டும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இந்த காரணத்திற்காக, பக்கவாதத்திலிருந்து மீண்டவர்கள், குளிர்ந்த நீரில் குளிப்பதை தங்கள் வழக்கத்தில் சேர்ப்பதற்கு முன்பு, மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
ரேனாட் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள்:
ரேனாட் நோய் என்பது விரல்கள் மற்றும் கால்விரல்கள் போன்ற உடலின் நுனிப் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்கள், குளிருக்கு எதிர்வினையாக அதிகமாகச் சுருங்குவதற்குக் காரணமான ஒரு நிலையாகும். ரேனாட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குளிர்ந்த நீர் வெளிப்பாடு கடுமையான வலி, உணர்வின்மை மற்றும் அதீத அசௌகரியத்தை ஏற்படுத்தும். டாக்டர் சிங்லா சுட்டிக்காட்டுவது போல, குளிர்ந்த நீரில் குளிப்பது இந்த அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும் என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.
வயதானவர்கள்:
வயதானவர்களின் உடல் வெப்பநிலையைச் சீராக்கும் திறன் பொதுவாகக் குறைவாக இருப்பதால், அவர்கள் இருதய நோய்களின் அபாயங்கள் மற்றும் உடல் வெப்பநிலை குறைதல் (hypothermia) போன்ற பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாகக்கூடும். டாக்டர் சிங்லாவின் அறிவுரைப்படி, முதியவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உடலுக்கு ஏற்படும் திடீர் அதிர்ச்சி, இதயச் சிக்கல்கள் அல்லது தலைச்சுற்றல் காரணமாக கீழே விழும் அபாயத்தை அதிகரிப்பது போன்ற பாதகமான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கக் கூடும்.