சரவணகுமார்
எவ்வளவு தான் காசு பணம் இருந்தாலும் கலைமகள் வசிக்காத வீடு கலை இழந்த வீடே.
வசதியற்ற வீட்டில் கல்வி வளம் மிகுந்திருக்கிறது. ஆனால் செல்வ வளம் இல்லை. இதற்காக கவலைப்படத்தான் வேண்டுமா என்ன? கலைமகள் நுழைந்த வீடல்லவா! நிச்சயம் திருமகளும் வந்தே தீருவாள்!! என்றைக்கு இருந்தாலும் திறமை வீண் போகாது என்று கூறுகிறோமே, அது இதைத்தான். திறமையை அள்ளித்தரும் சரஸ்வதியின் அடிபற்றி நடந்து வருபவள் மகாலெட்சுமி.
சரஸ்வதி தேவி வெள்ளை உடையில் பளிச்சென தோற்றம் காட்டி, வெண் தாமரையில் வீற்றிருப்பதின் தாத்பரியம், நம் மன இருளாகிய அறியாமையை அகற்றி, அறிவை தருவதை குறிக்கிறது. நான்கு திருக்கரங்களில் பின்னிரண்டு ஜெப மாலையும், ஏட்டினையும் பிடித்திருக்க, முன்னிரண்டு திருக்கரங்கள் வீணையை வாசித்த வண்ணம் உள்ளன.
கலைமகளின் கையிலிருக்கும் ஜெப மாலைக்கு அட்சமாலை என்பது பெயர். சமஸ்கிருதத்தில் உள்ள மொத்த எழுத்துக்களை குறிக்கும் விதத்தில் அம்மாலையில் உள்ள மணிகளின் எண்ணிக்கை 51. மற்றொரு கரத்திலிருக்கும் ஏடு, அவள் நமக்காக வழங்க இருக்கும் அறிவினை குறிக்கும். வீணையை மீட்டுவதன் மூலம், கலைகளை தனது வசம் வைத்திருப்பதை தெரிவிக்கிறாள்.
இந்துக்கள் மட்டுமல்லாமல், பௌத்தர்களும் சமணர்களும் வழிபடும் தேவியாக சரஸ்வதி இருக்கிறாள். ஸ்ருதி தேவி, வாக் தேவி என்கிற பெயரில் சமணர்கள் கலைமகளை வணங்குகிறார்கள்.
மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் கலைமகள் பௌத்தர்களால் வணங்கப்படுகிறாள். ஆபுத்திரன் என்பவன் சரஸ்வதியிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்றதாக பௌத்த புராணமாகிய மணிமேகலை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கென தனிக்கோவில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்து வழித்தடத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது இவ்வூர். ஒட்டக்கூத்தர் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அதனாலேயே கூத்தனூர் என பெயர் பெற்றது.
நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் முதன்மையாக விளங்குவது ஸ்ரீரங்கம். இங்கு மூலஸ்தான மண்டபத்திற்கு எதிரில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அமர்ந்திருக்கிறாள் அன்னை சரஸ்வதி. அவளுக்கு அருள்பாலித்த வண்ணம் அருகிலேயே இருக்கிறார் லட்சுமி ஹயக்ரீவர். தனது குருவுடன் அன்னை அமர்ந்து காட்சி தருவது வேறு எங்குமில்லாத சிறப்பு.
திருக்கண்டியூர் திருத்தலத்தில் சரஸ்வதியும் பிரம்மாவும் தம்பதிகளாக காட்சி கொடுக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீருக்கு அருகிலுள்ள புஷ்கர் என்னும் ஊரில் சரஸ்வதி, பிரம்மாவுக்கு தனித்தனியே கோவில்கள் உள்ளன. இந்தியாவிலேயே பிரம்மனுக்கு தனிக்கோவில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே. இங்குள்ள மலையடிவாரத்தில், எப்பொழுதும் வற்றாத ஏரி ஒன்று உள்ளது. இதில் நீர் வடிவத்தில் ஸ்ரீமந்நாராயணனே இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ளது பாஸர் என்கிற சிற்றூர். இங்கு கூத்தனூரை போலவே சரஸ்வதிக்கு தனி ஆலயம் உள்ளது. வேத வியாசரால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு அன்னை அருள் பாலிக்கிறாள் என்கிறது தலபுராணம். வாஸரா, கௌமாரசல்வாசினி, வித்யா தாரிணி என்கிற பெயரால் இங்கே அழைக்கப்படுகிறாள் தேவி. கல்வியில் சிறந்து விளங்க அன்னையின் பிரசாதத்தை நாவில் தடவும் வழக்கம் இங்குள்ளது.
நவராத்திரியின் கடைசி மூன்று தினங்களும் இவளுக்கு உரியது. இறுதி நாளான நவமி திதியன்று சரஸ்வதி பூஜையாக கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய தினம் நம் தொழிலுக்கு உதவிகரமாய் இருந்த உபகரணங்களை போற்றி துதிப்பதாலேயே இது ஆயுத பூஜையாகவும் அழைக்கப்படுகிறது. கலைமகளின் கடைக்கண் பார்வைபட்டால் போதுமே, பெரும் காவியம் படைத்திடும் ஆற்றல் நமக்கு கிடைத்திடுமே! அப்பேற்பட்ட இன்றைய தினத்தில் அன்னையை வணங்கி அவள் அருள் பெறுவோம்.