நல்ல ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
அதிக காய்கறிகளை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், கண்புரை, மாகுலர் சிதைவு, அறிவாற்றல் குறைபாடு போன்ற அபாயங்களை தடுக்கும் என்று பாராஸ் மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் நேஹா பதானியா கூறினார்.
காய்கறிகள் உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்கவும், ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கவும், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் பாதுகாப்பு கலவையின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும் என்று நிபுணர் கூறுகிறார்.
ஆனால் அது காய்கறிகளை சாப்பிடுவது மட்டுமல்ல, அவை சமைக்கப்படும் விதமும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் பங்கு வகிக்கிறது.
இருப்பினும், அனைத்து சமையல் நுட்பங்களும், காய்கறிகளின் ஊட்டச்சத்தை மாற்றும் போது, சில உண்மையில் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்கின்றன, மற்றவை சில கூறுகளை அழிக்கின்றன, என்று உணவியல் நிபுணர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
சமையல் என்று வரும்போது வைட்டமின் சி மற்றும் பி, மிகவும் நிலையற்ற ஊட்டச்சத்துக்கள் என்று நேஹா தெரிவித்தார்.
இந்த வைட்டமின்கள் நீரில் கரையக்கூடியவை என்பதால், அவை சமைக்கும் நீரில் கசிந்துவிடும். மேலும், காய்கறிகளை அதிக அளவு தண்ணீரில் வேகவைத்தால் அல்லது மைக்ரோவேவ் செய்தால், அதிலிருக்கும் தைமின், ஃபோலேட், வைட்டமின் பி 6, வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் சி கணிசமாக குறைந்துவிடும் என்று அவர் மேலும் கூறினார்.
எனவே காய்கறி சமைக்கும் போது தண்ணீர் மிகப்பெரிய எதிரி. ஆகவே, ஊட்டச்சத்தை பாதுகாக்க சிறந்த வழிகளில் ஒன்று ஸ்டீமிங் (steaming) செய்வது.
க்ரீல், ரோஸ்ட், ஸ்டீர் ஃபிரையிங் உள்ளிட்ட சமையல் நுட்பங்களை விட கொதிக்க வைப்பது அதிக ஊட்டச்சத்துக்களை அழிக்கிறது. காய்கறிகளை கொதிக்க வைக்கும் போது, ஊட்டச்சத்து நிறைந்த அதன் தண்ணீரை சேமிக்கவும். அதை சாஸ்கள் மற்றும் சூப்களில் பயன்படுத்துங்கள் என்று நேஹா பரிந்துரைத்தார்..
மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் நிதி சௌத்ரி, உணவை சமைக்க சில சிறந்த வழிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
வெப்பம், தீ மற்றும் தண்ணீரில் நீண்ட நேரம் சமைப்பது உணவில் இருந்து வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர கலவைகளை வெளியேற்றலாம். குறைந்த தண்ணீரைப் பயன்படுத்துதல், பிரஷர் குக்கரில் சமைத்தல், ஸ்டீமிங், ஸ்டீர் ஃபிரையிங் மற்றும் மைக்ரோவேவ் ஆகியவை சமைப்பதற்கு சில சிறந்த வழிகள்.
சமைக்கும் போது அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க பின்வரும் வழிகளையும் மருத்துவர் நிதி பரிந்துரைத்தார்:
காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டுவதற்கு முன் கழுவவும். முதலில் காய்கறிகளை நறுக்கி, பிறகு கழுவினால் அதிலிருந்து சத்துக்கள் வெளியேறும்.
காய்கறிகளை மிகச் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டாம், ஏனெனில் சமைக்கும் போது பெரும்பாலான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். எனவே காய்கறிகளை பெரிய துண்டுகளாக வெட்டுவதே சரியான வழி. மேலும், ஒளி மற்றும் காற்றின் வெளிப்பாட்டின் ஊட்டச்சத்தின் அளவு குறையும் என்பதால், காய்கறிகளை வெட்டிய உடனேயே சமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
காய்கறிகளை மிகக் குறைந்த அளவு தண்ணீரில் சமைக்கவும். அதிகப்படியான தண்ணீரில் சமைப்பதால் சத்துக்கள் குறைந்துவிடும்; மேலும் காய்கறிகளை ஒரு மூடிய பாத்திரத்தில் மிதமான தீயில் சமைக்க வேண்டும்.
அரிசி அல்லது காய்கறிகளை வேகவைத்த தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டாம். இது பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான ஆதாரமாக உள்ளது, மேலும் இது கிரேவி, சூப் அல்லது மாவு பிசைவதற்கு பயன்படுத்தலாம்.
சமைத்த உணவை மீண்டும் சூடாக்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் இயற்கையான பண்புகளை அழிக்கிறது. சமைத்த 4 மணி நேரத்திற்குள் சாப்பிடவும், ஏனெனில் இது ஊட்டச்சத்து இழப்பை மேலும் குறைக்க உதவுகிறது.
காய்கறிகளை சமைக்கும் போது பேக்கிங் சோடாவை பயன்படுத்த வேண்டாம். இது காய்கறிகளின் நிறத்தைத் தக்கவைத்து, சமையல் செயல்முறையை விரைவுபடுத்துகிறது என்றாலும், பேக்கிங் சோடாவைச் சேர்ப்பது கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது, இது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும் என்று மருத்துவர் நிதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“