/indian-express-tamil/media/media_files/2025/08/16/kalyani-rachitha-ram-2025-08-16-12-02-42.jpg)
Coolie movie Kalyani Rachitha Ram
கன்னட திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரச்சிதா ராம், இப்போது தமிழ் சினிமா ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான 'கூலி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கல்யாணி என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். கன்னட சினிமாவில் மட்டும் தனது முதல் பத்து ஆண்டுகளைக் கழிப்பேன் என உறுதியாக இருந்த ரச்சிதா, கூலி மூலம் தனது முடிவை மாற்றியதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உண்டு.
யார் இந்த ரச்சிதா ராம்?
'டிம்பிள் குயின்' என செல்லமாக அழைக்கப்படும் ரச்சிதா ராம், 1992-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பெங்களூருவில் பிந்தியா ராம் என்ற இயற்பெயருடன் பிறந்தார். கலைக்குடும்பத்தில் பிறந்தவர் இவர். இவரது தந்தை கே.எஸ். ராம் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர். ரச்சிதாவும் பரதநாட்டியத்தில் முறையாகப் பயிற்சி பெற்று, 50-க்கும் மேற்பட்ட மேடைகளில் நடனமாடியுள்ளார். 2012-ஆம் ஆண்டு 'அரசி' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 2013-ஆம் ஆண்டு 'புல்புல்' என்ற கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை, 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இவருக்கு நித்யா ராம் என்ற ஒரு சகோதரியும் உள்ளார், அவரும் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த நந்தினி என்ற வெற்றி தொடர் மூலம் தென் இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
கூலி பட அனுபவம்
'கூலி' திரைப்படத்தில் ரச்சிதா ராம் கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் இவருக்கு கன்னட திரையுலகிற்கு வெளியே ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில், கூலி திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரச்சிதா நடிக்கிறார் என வதந்திகள் பரவியபோது, அவர் அதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.
கூலி படத்தில் அவர் தனது 'ஐ லவ் யூ' படத்தில் இணைந்து நடித்த நடிகர் உபேந்திராவுடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார். ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் அமீர்கான் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14 அன்று வெளியான 'கூலி', பாக்ஸ் ஆபிஸில் ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' படத்துடன் போட்டியிட்டு வருகிறது.
ஒரு சிறந்த கன்னட நடிகையாக தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் திரையுலகிலும் வெற்றிகரமாக கால் பதித்திருக்கிறார் ரச்சிதா ராம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.