கொத்தமல்லி இலை நமக்கு எல்லாம் தெரிந்த வரை ரசம் சமைத்த பின், சிக்கன் அல்லது வேறு கிரைவி ரெசிபி சமைத்தப் பின் மேலே வாசனைக்கும், கூடுதல் சுவைக்கும் சேர்ப்பது தான் தெரியும். ஆனால் கொத்தமல்லி இலையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன. குறிப்பாக வயிறு மற்றும் வாய் புண் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.
இதில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ,பி போன்ற சத்துகள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்க உதவுவதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.
வாய்ப் புண் தீர்வு
ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலையை கழுவி சுத்தம் செய்து, மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைத்து அதை அப்படியே வாயில் போட்டு மெல்ல வேண்டும். இப்படி தினமும் 2 வேளை செய்து வர வாய்ப் புண், வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
அஜீரணம்
கொத்தமல்லி இலைகளைக் கழுவி அரைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் சாறு எடுக்கவும். சீரகப்பொடி 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் 1 டம்ளர் தண்ணீரில் போட்டு அதில் 1 சிட்டிகை அளவு ப்பு போட்டு நன்கு கலந்து குடிக்கவும். அஜீரணத்தை போக்கி, பசி எடுக்கச் செய்யும்.
ரத்த சோகை
ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், கொத்தமல்லிக் இலை உடன் உளுத்தம் பருப்பு வறுத்து சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரிக்க உதவும்.
முகப் பொழிவு
தினமும் இரவில் படுக்கும் முன் கொத்தமல்லி சாறும், எலுமிச்சை சாறும் கலந்து உதடுகளில் தடவிக் கொள்ளவும். கருப்பான உதடுகள் பளபளப்பாகும். மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால் அங்கும் இந்த கலவையை தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவலாம். தொடர்ந்து செய்து வர நன்மைகள் இருக்கும்.
காப்பி, டீ-க்கு பதிலாக...
1 டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் கொத்தமல்லி இலையுடன் ஒரு ஏலக்காய் தட்டி போட்டு கொதிக்க வைத்து கற்கண்டு அல்லது வெல்லம் கலந்து காப்பி, டீக்கு பதிலாக காலை, மாலை வேலைகளில் குடிக்கலாம். இதனால் பித்தம் தணியும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“