கொரோனாவைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும் குழப்பங்களும் நிலவி வருகிறது. உங்களின் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் உலக சுகாதார நிறுவனத்தின் பதில்களை தருகின்றோம்.
கொரோனாவைரஸ் வயதானவர்களை மட்டும் தாக்குகின்றதா?
கொரொனாவைரஸ் அனைத்து பிரிவினரையும் தாக்குகிறது. ஆஸ்துமா, நீரிழிவு நோய் மற்றும் இதய கோளாறு உள்ளவர்களை வெகு சீக்கிரமாக தாக்குகிறது. எனவே அனைவரும் வருமுன் காக்கும் பணிகளை செய்வதே சிறப்பு.
கொரோனாவைரஸை தடுக்க மருந்துகள் உண்டா?
இதுவரை கொரோனாவைரஸை தடுக்க மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோயின் அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு அதில் இருந்து விடுபட மட்டுமே மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாக்கம் தீவிரமாக இருப்பவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சில சிகிச்சைகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. க்ளினிக் ட்ரையல்கள் மூலமாக அந்த சோதனைகள் வெற்றி பெற்றால் உலகம் முழுவதும் அவை செயல்படுத்தப்படும்.
ஆன்ட்டிபையோடிக்ஸ் மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியுமா?
இல்லை. ஆன்ட்டிபையோடிக்ஸ், பாக்டீரியாவை அழிக்கவே பயன்படுத்தப்படுகிறது. COVID19 வைரஸ் என்பதால் இந்த மருந்துகள் மூலம் பலன் ஏதும் இல்லை. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படால், உங்களுக்கு ஆன்ட்டிபையோடிக்ஸ் அளிக்கப்படும். பாக்டீரியா தொற்றுகளுக்கான வாய்ப்புகள் இருப்பதால் இவை வழங்கப்படும்.
செல்லப் பிராணிகள் மூலம் கொரோனாவைரஸ் பரவுகிறதா?
இதுவரை செல்லப் பிராணிகள் மூலம் கொரோனாவைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. அந்த உயிரினங்களுக்கும் கொரோனாவைரஸ் பரவுவதாக ஒரு தகவலும் இல்லை. ஆனாலும் நீங்கள் உங்களின் செல்லப் பிராணிகளுடன் விளையாடி முடித்த கையோடு, கைகளை சோப்பினால் கழுவுவது நலம்.
சீனாவில் இருந்து வரும் கடிதங்கள், பேக்கேஜ்கள் பாதுகாப்பானவையா?
சீனாவில் இருந்து வரும் கடிதங்கள் மற்றும் பேக்கேஜ்கள் பாதுகாப்பானவையே. இந்த பொருட்கள் மூலம் கொரோனா பரவாது. மேலும், இது போன்ற பொருட்களில் கொரொனா வைரஸ் உயிர் வாழாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்கஹால், க்ளோரின்களை உடலில் தெளிப்பதால் நோய் தொற்றில் இருந்து தப்பிக்க முடியுமா?
உடலில் ஆல்கஹால் மற்றும் க்ளோரின்களை தெளிப்பதனால் நோய் பரவல் தடுக்கப்படுகிறது என்பதும் பொய். இவை இரண்டும் தரைகளில் இருக்கும் நோய்கிருமிகளின் பரவலை தடுக்கவே உதவும். கண்கள், வாய், மூக்கு போன்ற பகுதிகளில் பட்டால் தேவையில்லாத எரிச்சல் மட்டுமே உருவாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.