ஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா?

Post lockdown anxiety : உங்களின் அச்சத்தை மூடி மறைப்பது உதவாது. எனவே உங்களின் பிரச்னைகள் குறித்து யாரிடமாவது பேசிவிடுங்கள். அது உங்களின் நண்பர் அல்லது...

அந்த சூழ்நிலைகளை தவிர்ப்பதற்கு வழிகள் இருக்குமா? இல்லை, ஏனெனில், நாம் வாழ்வதற்கு சம்பாதிக்க வேண்டும் மற்றும் நாம் எப்போதும் தனித்திருக்க முடியாது.

இந்த நான்காவது கட்ட ஊரடங்கில் தற்போது போதிய அளவு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இலகுவாக செல்லும் நிலை அதிகரித்துள்ளது, குறிப்பாக மக்கள் அலுவலகங்களுக்குச் செல்லவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்ப்பதற்குச் செல்லவும் துவங்கியுள்ளனர். இதுதான் நாம் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. நமது வாழ்க்கை முறையே மாற்றியமைக்கப்பட்ட பின்னர், நம் வீடுகளிலிருந்து நாம் வெளியே வரும்போது, சில அச்சங்களும், பதற்றங்களும் இருக்கத்தான் செய்கிறது.

இதுபோன்ற அச்சங்கள் பல்வேறு பிரச்னைகளால் ஏற்படுகின்றன. முக்கியமாக நமக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமும், மற்றொருபுறம் நமக்கு பணியில் உள்ள பிரச்னைகள், எதிர்காலம் பற்றிய பிரச்னைகள் மற்றும் புதிய சூழ்நிலையை உடனடியாக ஏற்றுக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவை நமக்கு அதிகளவில் அழுத்தம் கொடுக்கும் காரணிகளாகும். இது ஊரடங்கிற்கு பிந்தைய அச்ச உணர்வு என்று பிரிட்டனின் மன நல அமைப்பு கூறியுள்ளது.

இது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது மற்றும் ஊரடங்கிலிருந்து விடுபதிலிருந்து ஏற்படும் அச்சம் அல்லது கவலையாகும். நிறைய இடங்களில் இருந்து இது தோன்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. உடல் நலம் அல்லது தேவையற்றதெற்கெல்லாம் அச்சம் கொள்வது போன்றவை அதன் பொதுவான அறிகுறிகளாகும். பொது இடங்களுக்கு செல்வதில் ஏற்படும் அச்சம் முதல் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு ஏற்படும் அச்சம் வரை இருக்கும் என்று அவ்வமைப்பைச்சேர்ந்த சாமுவேல் லெட்ஜர், வோக் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அந்த சூழ்நிலைகளை தவிர்ப்பதற்கு வழிகள் இருக்குமா? இல்லை, ஏனெனில், நாம் வாழ்வதற்கு சம்பாதிக்க வேண்டும் மற்றும் நாம் எப்போதும் தனித்திருக்க முடியாது. நமது அச்சங்களை போக்கிக்கொள்ளும் வழிகளை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும் அல்லது அதனுடன் வாழ பழக்கிகொள்ள வேண்டும்.

ஊரடங்கு முடிந்த பின்னர் வெளியே செல்லும்போது ஏற்படும் அச்சங்களை கையாள்வது எப்படி?

ஏற்றுக்கொள்ளுங்கள்:

இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் மூத்த மனநல மருத்துவர் சந்தீப் வோக்ரா கூறுகையில், முதலில் இந்த தொற்று ஏற்படுத்தியுள்ள பிரச்னையின் கோரத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். மக்கள் நாம் கொரோனா வைரசுடன்தான் வாழவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நீங்கள் மறுக்க முடியாது. அதிக பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, அச்சம் நம்மிடத்திலிருந்து விலகியிருக்கும்.

முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்:

நாம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே கோவிட் -19 தொற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகள். போர்டிஸ் மருத்துவமனையின், மனநலன் மற்றும் நடத்தை அறிவியல் துறை இயக்குனர் மற்றும் தலைவர் டாக்டர் சமீர் பாரிக், நாம் ஊரடங்கில் வீட்டிலிருந்தபோது ஏற்பட்ட அதே அச்சம்தான் வெளியில் செல்லும்போதும் ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறார். நமக்கு அச்சம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் என்னவெனில், நமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னவாகும் என்பதுதான். அதனால்தான் நாம் வீட்டில் இருந்தாலும், வெளியே சென்றாலும் அச்சத்துடனே வாழ்கிறோம். அச்சத்தை தவிர்ப்பதற்காக நாம், இதுவரை கடைபிடித்து வந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். நாம் நிச்சயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வேலைக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கைகளை நன்றாக சுத்திகரித்துக்கொள்ள வேண்டும். செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி வைரஸ் தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.

 

உங்களுக்கு பணி வழங்கியவர் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் பேசுங்கள்:

கோவிட் – 19க்கு பின்னர் உங்கள் நிறுவனத்தின் கொள்கைகள் குறித்து உங்களுக்கு அச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்களுக்கு வேலை வழங்கியவரிடம் நீங்களே பேசி, உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் கோவிட் – 19க்கு பின்னர் எவ்வித கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் என்ற விளக்கத்தை கேட்டுப்பெறுங்கள். அவை, பணியிடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், மாற்றப்பட்டுள்ள இருக்கை வசதிகள், சுத்திகரிப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பணி நிமித்தமான மற்ற மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கட்டும் என்று டாக்டர் வோக்ரா அறிவுறுத்துகிறார். நீங்கள் அலுவலகம் வரத்துவங்குவதற்கு முன் இருந்து பணிக்கு வருபவர்களிடம், உங்கள் நிறுவனத்தில் தற்போதைய சூழல் குறித்து விவாதித்து தெரிந்துகொள்ளுங்கள் என்று மேலும் அவர் கூறுகிறார்.
நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு அதிக நெருக்கடிகள் கொடுக்கக்கூடாது. ஏனெனில், அவர்கள் வாழ்க்கையையும், வேலையையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டும். அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. நமது ஊழியர்கள் மீது கருணை கொண்டு, அவர்கள் அமைதியான வாழ்க்கை மேற்கொள்வதற்கு வழிவகுக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் குறித்த விவாதங்களை தவிர்க்க வேண்டும்: ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள். இறப்பு எண்ணிக்கை என்ன என விவாதிப்பதை குறைக்க வேண்டும். நல்ல மனநலனை பேணுவதற்கு கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை தெரிந்துகொள்ளாமல் இருப்பது சிறந்தது என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே அதிகளவில் நீங்கள் செய்யும் கொரோனா வைரஸ் குறித்த விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களை தவிர்ப்பது நல்லது என்று டாக்டர் வகோரா கூறுகிறார்.

 

மன ஆரோக்கியத்தை பராமரியுங்கள்:

நாளொன்றுக்கு சரியாக 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமாகிறது. யோகா அல்லது மற்ற உடற்பயிற்சிகள் தினமும் கட்டாயம் செய்ய வேண்டும். இது உங்களை ஓய்வாக உணரச்செய்யும். மது, புகை பழக்கங்களை குறைத்துக்கொள்ளுங்கள்.

யாரிடமாவது பேசுங்கள்:

மிக முக்கியமாக நாம் நேர்மறையான சிந்தனைகளை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில், மனநல வெளிப்பாடுகளும் தொற்றின் முக்கிய காரணியாகும் என்று டாக்டர் பாரிக் குறிப்பிடுகிறார். உங்களின் அச்சத்தை மூடி மறைப்பது உதவாது. எனவே உங்களின் பிரச்னைகள் குறித்து யாரிடமாவது பேசிவிடுங்கள். அது உங்களின் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது உடன் பணிபுரிபவர் அல்லது சிகிச்சையாளர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தமிழில்: R.பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close