scorecardresearch

அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து மனிதம் போற்றும் தம்பதி!!

அனாதை பிணங்களை தத்தெடுத்து, இருந்து எல்லா சடங்குகளையும் செய்து அடக்கம் செய்வதில் தன் வாழ்நாளை செலவிட்டு வரும் தம்பதி!

Trichy couple
couple wins humanity by cremating orphan dead bodies in Trichy

செய்தி: க.சண்முகவடிவேல்

இந்த தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, பிழைப்பு தேடி சொந்த ஊரை விட்டு, நாட்டை விட்டு வேறு நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட பெற்றோர்கள், குடும்ப சூழல் கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள்’ இருக்க இடமின்றி சாலைகளில் சுற்றித் திரிவதையும், சாலையோரங்களில் அரவணைப்புக்கு ஆள் இல்லாமல் அனாதையாக படுத்து கிடப்பதையும் திருச்சி போன்ற பெருநகரங்களில் நாம் பார்க்க முடிகிறது.

இப்படி இடம் பெயர்ந்தவர்களில் சிலர் உடல் நலக்குறைவு காரணமாகவோ, விபத்து காரணமாகவோ, குடிப்பழக்கத்தாலோ இறந்து, அனாதை பிணங்களாக சாலையில் கிடக்கும் பல சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லது கண்டிருப்போம்…அப்படியான அனாதை பிணங்களை தத்தெடுக்கும் தாயாக, தந்தையாக இருந்து எல்லா சடங்குகளையும் செய்து அடக்கம் செய்வதில் தன் வாழ்நாளை செலவிட்டு வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார் – பெண் வழக்கறிஞர் சித்ரா தம்பதியரை திருச்சி சமூக ஆர்வலர்கள் பாராட்ட மறப்பதில்லை.

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் பெண் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் திருச்சி புத்தூர் பகுதியில் வசித்து வருகின்றார். இவர்கள் அமிர்தம் சமூக சேவை என்ற அறக்கட்டளை மூலம் அன்னதானம் முதல் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வது வரை பல்வேறு சமூகப்பணிகளை தூய்மையுள்ளத்தோடு செய்து வருகின்றனர்.

யோகா ஆசிரியர் விஜயகுமார் எழுத்தாளர், பழம்பொருள் சேகரிப்பாளர், சமூக சேவகர் என பன்முகம் கொண்டவர். வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியினை செய்து வருகிறார்.

இந்த சமூக ஆர்வலர்களை பாராட்டும் விதமாக திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்க 22வது ஆண்டு விழா மற்றும் சர்வதேச மகளிர் தின விழாவில், அனாதை பிரேதங்களுக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்யும் பெண் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமாருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

சமூகசேவையையே குறிக்கோளாக கொண்டிருப்பவர்களை நாம் சந்தித்தபோது, “அனாதை பிணங்களை அடக்கம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லங்க. அனாதை பிரேதம் அடக்கத்திற்கு மருத்துவமனை, காவல் துறையினர், அரசு அதிகாரிகள் என அனைவரின் பங்களிப்பும் தேவை. இந்த மூவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இதை  செய்ய முடியாது. இவர்களின் பார்வைக்கு அப்பால் நாம் ஏதாவது செய்தால் அது சட்டப்படி குற்றம்.

அதனால நாங்க தம்பதி சகிதமாக அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு காவலர்கள் துணையோடு கடந்த ஒரு சில ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்துள்ளோம். பெண்ணாக நானும் அனாதை பிரேதங்களை எனது வாகனத்திலேயே சில நேரங்களில் எடுத்து வந்து சம்ரதாயப்படி வாய்க்கு அரிசியிட்டு, மலர்மாலை அணிவித்து இறுதி சடங்கினை செய்து வருகின்றோம்.


இந்தியாவில் பெண்களுக்கு சம உரிமை என்பது இன்றும் கூட பல விஷயங்களில் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. பெண்கள் சில கோவில்களுக்கு செல்லக்கூடாது என்ற தடை இன்றும் இருப்பது வேதனை. அதேபோல் பெண்கள் சில கடவுள்களை வணங்கக்கூடாது, சில இடங்களுக்கு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

சில இடங்களில் பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவதுகூட இல்லைங்க. பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதையோ, பிணத்தை சுமந்து செல்வதையோ, ஏன் பிரேத ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு கூட பெரும் தடைகள் இருக்குங்க.

ஆதிகாலம் முதல் இப்போது வரை பெண்களின் இறுதிச்சடங்குகளை பொறுத்த வரையில் அழுவதுடனும், சில சடங்குகளை செய்வதுடனும் எங்களின் வேலை முடிந்துவிடுகிறது. சுடுகாட்டிற்கு வரவோ, கொள்ளி வைக்கவோ பெண்களுக்கு பெரும்பான்மையான இடங்களில் அனுமதி மறுக்கப்படுகின்றது.

முற்போக்கு சிந்தனை கொண்ட சில பகுதிகளில் மட்டுமே பெண்களுக்கும் சம உரிமை தொடர்கிறது. பெண்கள் வலிமையானவர்கள், எதையும் எளிதில் எதிர்கொள்ளும் மனதிடம் பெற்றவர்கள்.

அவ்வகையில், அரசு மருத்துவமனை மற்றும் காவல்நிலையங்களுக்கு அனாதை பிணம் இருப்பது குறித்த தகவல் வந்தவுடன் அவர்கள் என்னை தொடர்பு கொள்வார்கள். மரணத்துக்கு பிறகும் ஆதரவற்றோர் கவுரவமாக நடத்தப்படுவதில்லை என்று நினைக்கும்போது மனசுக்கு கவலையாக தான் இருக்கு.

இப்படி யாரும் ஆதரவற்ற நிலையில் கிடத்தப்படுபவர்களை ஜாதி, மத, இன வேறுபாடின்றி நான் எனது கணவருடன் தம்பதி சகிதமாக சில நேரங்களில் எங்கள் குழந்தைகளோடு குடும்பமாக, சம்பந்தப்பட்ட சரக காவல் துறையினர் முன்னிலையில் நம் சம்பிரதாய முறைப்படி வாய்க்கரிசி இட்டு, மாலையிட்டு, பால் தெளித்து இறுதி காரியங்களை மன நிறைவுடன் செய்து கொண்டிருக்கின்றோம் என்றார் சித்ரா.

அதோடு மட்டுமின்றி தங்கள் வாழ்நாளிற்கு பிறகு பார்வையில்லா உடன் பிறவா சகோதர, சகோதரிகள் யாருக்கேனும் தங்கள் கண்களை தானமாக வழங்குவதற்கு உறுதியேற்று தம்பதி சகிதமாக கண்தானத்திற்கும், யோகா ஆசிரியர் விஜயகுமார் படமாய் இருப்பதைவிட பாடமாய் இருப்போம் என தன் வாழ்நாளிற்கு பிறகு உடலை தானமாக வழங்குவதற்கு திருச்சி கிஆபெ விசுவநாதன் மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையில் பதிவு செய்துள்ளார்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Couple wins humanity by cremating orphan dead bodies in trichy

Best of Express