கோவை சூலூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் புதூரில் இன்று அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகுமார் - சங்கீதா தம்பதியினர் வசித்து வந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணகுமார் தனது மனைவி சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து தனது சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வண்டாழி ஈரட்டுகுளம் என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது வீட்டின் முன்பாக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சங்கீதா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் கல்லூரிக்கு சென்ற பின்னர் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தகவலின் பேரில் பட்டணம் புதூரில் உள்ள ஆசிரியை சங்கீதா வீட்டுக்கு வந்த சூலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர். அதேபோல பாலக்காடு மாவட்ட போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சங்கீதாவை கிருஷ்ணகுமார் சந்தேகித்ததாகவும் இது குறித்து இருவருக்கும் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர் கேட்காததால் ஆத்திரமடைந்து சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு கிருஷ்ணகுமார் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
எனினும் மேலதிக விவரங்களுக்காக போலீசார் இரு தரப்பு உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.