கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இரண்டாவது அலையில் பல குழந்தைகளும் கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், குழந்தைகள் வீட்டு தனிமையில் இருக்கும்போது அவர்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்று பெற்றோர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையின் அளவையும், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சையையும் அடையாளம் காண சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. குறிப்பாக அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்போது எப்படி கையாள்வது என்று சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
அறிகுறி இல்லாத தொற்றுகள்
சுகாதார அமைச்சகம் கூறியுள்ளபடி, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் தொற்று பாதிப்பால் அடையாளம் காணப்பட்டால், அறிகுறியில்லாத குழந்தைகள் பொதுவாக உடல் வெப்பநிலை திரையிடும்போது தொற்று அடையாளம் காணப்படுவார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு அறிகுறிகளின் வளர்ச்சியைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பிடப்பட்ட நோய்த்தொற்றின் தீவிரத்தின் அளவைப் பொறுத்து அடுத்தடுத்த சிகிச்சை தேவைப்படும்.
லேசான தொற்றுகள்
லேசான தொற்று உள்ள குழந்தைகள் தொண்டைபுண், சளி அல்லது இருமல் போன்ற அறிகுறிகளைக் காட்டலாம். சில குழந்தைகளுக்கு இரைப்பை குடல் அறிகுறிகள் இருக்கலாம். அவர்களுக்கு எந்த விசாரணையும் தேவையில்லை.
அறிகுறி இல்லாத அல்லது லேசான கோவிட்-19 தொற்று உள்ள குழந்தைகளை வீட்டு தனிமைப்படுத்தலில் அறிகுறிக்கான சிகிச்சைகளை செய்யலாம். இதில் பிறவி இதய நோய், நாள்பட்ட நுரையீரல் நோய், நாள்பட்ட உறுப்பு செயலிழப்பு மற்றும் உடல் பருமன் போன்ற இணைநோய்கள் உள்ளவர்களும் அடங்குவார்கள்.
லேசான தொற்றுகளுக்கான சிகிச்சை
காய்ச்சல்:
காய்ச்சல் இருந்தால் பாராசிட்டமால் 10-15 மி.கி/ டோஸ், ஒவ்வொரு நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு கொடுக்க வேண்டும்.
இருமல்:
இருமல் இருந்தால் வளர்ந்த குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு தொண்டை இதமாக இருப்பதற்கு சூடான தண்ணீரை கொப்பளிக்கவும் குடிக்கவும் தர வேண்டும்.
நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து:
உடலில் நீர்ச்சத்து மற்றும் சத்தான உணவை பராமரிக்க வாய்வழி திரவ உணவுகள் அளிப்பதை உறுதி செய்யுங்கள்.
ஆண்டிபயாட்டிக்ஸ்: குறிப்பிடப்படவில்லை.
சுகாதார அமைச்சகம் குறிபிட்டுள்ளபடி, ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ஃபாவிபிராவிர், ஐவெர்மெக்டின், லோபினாவிர் / ரிடோனாவிர், ரெம்டெசிவிர், உமிஃபெனோவிர், டோசிலிசுமாப், இன்டர்ஃபெரான் பி 1 அ, கன்வெலசென்ட் பிளாஸ்மா உட்செலுத்துதல் அல்லது டெக்ஸாமெதாசோன் உள்ளிட்ட நோய்த்தடுப்பு மருந்துகளுக்கு பங்கு இல்லை.
பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர் ஒரு நாளைக்கு 2-3 முறை சுவாச அளவை கணக்கிடுவதற்கான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். ஒரு குழந்தை அழாதபோது, மார்பு வீக்கம், உடல் நீல நிறமாக மாறுதல், சிறுநீர் வெளியேற்றம், நாடித் துடிப்பு ஆக்ஸிமீட்டர் வழியாக ஆக்ஸிஜன் செறிவு, அளவு, திரவ உணவு எடுத்துக்கொள்வது ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.
இது மட்டுமில்லாமல், மருத்துவருடன் வழக்கமான தகவல்தொடர்பில் இருக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.