கர்ப்பிணி பெண்கள், கொரோனாவை எதிர்கொள்வது எப்படி? A டூ Z சொல்கிறார் டீனா அபிஷேக்

Pregnancy and COVID-19: கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எழும் பொதுவான கேள்விகளுக்கு குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதல் பயிற்சியாளர் டீனா அபிஷேக் பதிலளிக்கிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. கொரோனா தொடர்பான செய்திகளை காட்சி ஊடகங்களில் பார்க்கும்போது நம்மை அறியாமல் நமக்கே ஒருவித மனபயம் தொற்றிக்கொள்கிறது. அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வந்தால் என்ன செய்வது என்கிற கவலை அதிகமாகியுள்ளது. அதோடு, கொரோனா காலத்தில் வெளியே சென்றால், அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் உள்ளது.


கொரோனா வைரஸ் பாதிப்பால், பல கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மாதாந்திர செக் அப், ஸ்கேன், உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணின் நோயெதிர்ப்பு அமைப்பானது கர்ப்ப காலத்தில் மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதால், கோவிட் 19 உள்ளிட்ட நோய்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முறையான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிக முக்கியமாகும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எழும் பொதுவான கேள்விகளுக்கு குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதல் பயிற்சியாளர் டீனா அபிஷேக் பதிலளிக்கிறார்.

ஒரு சாதாரண பெண்ணுக்கும், கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்பதில் என்ன வித்தியாசம்? கொரோனா பாதித்த கர்ப்பிணி என்றால் நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி மருத்துவரை அணுகுவது?

சாதாரண நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் தன்னை பார்த்துக்கொண்டால் போதுமானது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் தன் நலம் மற்றும் குழந்தையின் நலனையும் சேர்த்து பார்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தால் குழந்தையை நினைத்து உடனே பயப்படக்கூடாது, பதற்றமடையக்கூடாது. மனநலத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டால் ஆன்லைன் கன்சல்டேஷனை பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான வசதி இல்லையென்றால் கிராமப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உங்களுடைய மகப்பேறு மருத்துவரிடமும் ஆலோசனை பெறலாம்.

எனது ஸ்கேன் மற்றும் இரத்த பரிசோதனையை தவிர்க்கலாமா?

கர்ப்ப காலத்தில் எல்லா ஸ்கேன்களையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக கர்ப்பமடைந்து மூன்று மாதத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான ஸ்கேனை கண்டிப்பாக எடுக்க வேண்டும். 12 வாரத்தில் இல்லையெனில் 18-19 வாரத்தில் எடுக்க வேண்டும். பிறகு 21-24 வாரத்தில் Anomaly Scan எடுக்க வேண்டும். இதனை தவிர்க்கமுடியாது மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து இந்த ஸ்கேனை எடுக்கலாம்.

இரத்த பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க முடியும். தனியார் லேப் களில் ஆன்லைனில் பதிவு செய்தால் வீட்டிற்கே வந்து samples சேகரித்து செல்வார்கள். கிராமபுற பகுதிகளாக இருந்தால் போனில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்.

எனக்கு கொரோனா பாசிட்டிவ், என்னால் சுகப்பிரசவம் செய்ய முடியுமா? இல்லையென்றால் சிசேரியன் செய்யப்படுமா?

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்காக சிசேரியன் என கூற முடியாது. சில நேரங்களில் நார்மல் டெலிவரியின்போது வெளிவரும் தண்ணீர் அங்குள்ளவர்கள் மீது தெறித்தால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும். இது மருத்துவர் முடிவெடுக்க வேண்டிய விஷயம். ஒரு வேளை மருத்துவ ரீதியாக தேவைப்படாத பட்சத்தில், அதற்கான அவசியம் இல்லை.

கடைசி 8-9 மாதங்களில் இருக்கிறேன், நான் என்ன செய்ய வேண்டும்? மிகவும் பயமாக இருக்கிறது?

கடைசி 8-9 மாதங்களில் உள்ளவர்கள் முக்கியமாக நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டியது குழந்தையின் மூளை வளர்ச்சி . கருவுற்ற 6 மாதங்கள் வரை இருந்ததை விட 8 மற்றும் 9 மாதங்களில் குழந்தையின் மூளை வளர்ச்சி வேகமாக இருக்கும். அதனால் குழந்தையை நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை உணர வைக்க வேண்டும். அம்மாவின் உலகம் தான் குழந்தையின் உலகம். அம்மாவின் உலகத்தில் பயம், பதட்டம், கவலையான சூழல் இருக்கு என்பதை குழந்தை உணர ஆரம்பித்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறந்த பிறகு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகமாகும். எனவே கர்ப்பிணி தாய்மார்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னுடைய உலகம் தான் குழந்தையின் உலகம். என் குழந்தையை அற்புதமான உலகத்திற்கு வரவழைக்க தயாராக இருக்கேன் என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். வீட்டு மொட்டை மாடி அல்லது வீட்டிற்குள்ளேயே வாக்கிங் போகலாம்.

எங்கள் வீட்டில் அனைவருக்கும் பாசிட்டிவ்? நான் என்னை தனிமை படுத்திக்கொள்ள வேண்டுமா?

உங்கள் வீட்டில் அடிக்கடி யாரவது வெளியே சென்று வருகிறார்கள் அவர்களுக்கு இருமல், சளி , தொண்டை வலி இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். நமக்கே தெரியாமல் அவர்களுடைய எச்சில் பட்டாலோ, அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களை பயன்படுத்தினாலோ கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதனால் வீட்டில் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ பாதிப்பு கண்டறியப்பட்டாலோ நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனக்கு பாசிட்டிவ் என்றால் என் குழந்தைக்கும் வருமா?இப்போது குழந்தைகளுக்கும் பாதிப்பு என்கிறார்களே? எப்படி குழந்தைகளை பாதுகாப்பது?

உங்களுக்கு பாசிட்டிவ் என்பதற்காக குழந்தைக்கும் தொற்று என கூறமுடியாது. தற்போது நிறைய குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதால் தாய்மார்களுக்கு குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்வது என பயமாக உள்ளது. உங்க குழந்தைகளை வெளியில் விளையாட விடும்போது கவனமாக இருங்கள். சாலையில் விளையாடுகிற குழந்தைகளை கட்டுப்படுத்துவது கடினம்தான். அவ்வழியாக செல்வோரிடம் இருந்து பரவும் சூழல் உள்ளது. அதனால் கண்டிப்பாக மாஸ்க் அணிய வற்புறுத்துங்கள்.

முடிந்தவரை பார்க்கிங் மற்றும் மொட்டை மாடிகளில் விளையாட சொல்லுங்கள். குழந்தைகள் விளையாட செல்லும்போது நீங்கள் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் கண், மூக்கு, வாய் ஆகியவற்றில் கை வைக்கக்கூடாது என்று அன்பாக சொல்லுங்கள். மிரட்டி சொன்னால் நீங்கள் இருக்கும்வரை ஒழுங்காக இருந்து சென்றதும் அந்த பழக்கத்தை விட்டுவார்கள். அதனால் ஏன் கை வைக்கக்கூடாது என குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள்.

நான் எனது முதல் டோஸை எடுத்துள்ளேன், இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன், என்ன நடக்கும்? நான் ஒரு குழந்தைக்குத் திட்டமிடுகிறேன் என்றால், நான் தடுப்பூசி எடுக்கலாமா?

குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐடியாவில் உள்ளவர்கள் பர்ஸ்ட் டோஸ் எடுத்தப்பிறகு கர்ப்பமானால் இரண்டாவது டோஸை தவிர்க்கலாம் .அதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் நிறைய கேள்விகள் உள்ளன. செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன? பாதுகாப்பாக தாய்ப்பால் கொடுக்கும் வழிமுறை என்ன?

தாய்ப்பால் வழியே குழந்தைகளுக்கு தாய் வழியாக கொரோனா தொற்று பரவும் என்பதற்கான ஆதாரமும் இல்லை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், அடிக்கடி கைகளை சானிடைஸ் செய்ய வேண்டும். முக்கியமாக டபுஸ் மாஸ்க் அணிந்து பால் தரலாம். ஒருவேளை உங்களுக்கு பயமாக இருந்தால் கைகளை கழுவிய பிறகு நீங்கள் தாய்ப்பாலை வெளியே எடுத்து நன்றாக இருக்கும் ஒருவர் உங்கள் குழந்தைக்கு நீங்கள் எடுத்துக் கொடுத்த தாய்ப்பாலை பருக்க வேண்டும்.

குழந்தை உங்கள் அருகில் வரும்போது குழந்தையை கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவதை தவிர்க்கவேண்டும். உங்கள் குழந்தையோடு உங்களுக்கு நேரடி தொடர்பு இருக்க வேண்டாம். குழந்தை பக்கத்தில் இருந்தும் அவர்களுடன் நேரம் செலவிட முடியவில்லையே என மனகவலை கொள்ள வேண்டாம். அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மனநலம் முக்கியம். அதனை பார்த்துக்கொள்ளுங்கள்.

தாய்ப்பாலை தவிர்த்து பவுடர் பால் கொடுக்கலாமா?

நீங்கள் நிச்சயமாக தொடர்ந்தும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். உங்கள் தாய்ப்பால் உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், பொதுவாக அவரை நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும். . எனினும், கைகளை சுத்தம் செய்வது, மாஸ்க் அணிவது போன்ற நடைமுறைகளை தாய்மார்கள் பின்பற்ற வேண்டும்.வேறு வழியே இல்லையென்றால் பவுடர் பால் கொடுக்கலாம்.

கொரோனா பாதித்து நார்மல் ஆன பிறகு மறுபடியும் பால் கொடுக்க முடியாமா என கேட்டால் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கலாம். உடல்நிலை சரியாகிய பிறகு லேக்டேஷன் கவுன்சிலர் மூலமாக தாய்ப்பாலை திரும்ப கொண்டு வர முடியும். தாய்ப்பால் கொடுக்க பயமாக இருந்தால் அருகில் ஏதேனும் டோனர் மில்க் இருந்தால் அணுகலாம். இல்லையென்றால் பவுடர் பால் கொடுக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid positive during pregnancy symptoms treatment risks

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com