New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/04/whatsapp-image-2025-2025-08-04-14-07-08.jpeg)
Cuddalore
ஆடி 18 அன்று, காவலர் குடும்பங்களைச் சேர்ந்த 80 நபர்கள் வேன் மூலம் பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நிலக் காடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Cuddalore
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் ஆடி 18 திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் இந்த விழா கோலாகலமாக நடந்தேறியது. ஆனால், கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் சரகத்தினர் இந்த ஆண்டு ஆடி 18-ஐ சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் கொண்டாடினர்.
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின்படி, அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கர் மேற்கொண்ட முயற்சியால், சிதம்பரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆடி 18 அன்று, காவலர் குடும்பங்களைச் சேர்ந்த 80 நபர்கள் வேன் மூலம் பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நிலக் காடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் படகுகள் மூலம் மாங்குரோவ் காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். இது காவலர் குடும்பத்தினருக்கு ஒரு புதிய அனுபவமாகவும், புத்துணர்ச்சி அளிக்கும் நிகழ்வாகவும் அமைந்தது. இந்நிகழ்வை ஆய்வாளர் அம்பேத்கர், உதவி ஆய்வாளர் மகேஷ், காவலர்கள் விவேக், கஜேந்திரன், சதீஷ்குமார், கிருஷ்ணகுமார் மற்றும் வனச்சரகர் இக்பால் ஆகியோர் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழ்நாட்டில் ஆடி 18 திருவிழா காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் குடும்பத்தினர் வித்தியாசமான முறையில் இந்த விழாவைக் கொண்டாடினர்.#Cuddalore pic.twitter.com/T0bYv6wWwm
— Indian Express Tamil (@IeTamil) August 4, 2025
பிச்சாவரம் பற்றிய அரிய தகவல்கள்
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, வனச்சரகர் இக்பால், பிச்சாவரம் காடுகள் குறித்து குழந்தைகளுக்கு பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார். அவர் கூறுகையில், பிச்சாவரம் உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடாகும். சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில், 4,500-க்கும் மேற்பட்ட கால்வாய்களுடன் இந்தக் காடுகள் அமைந்துள்ளன.
இந்தக் காடுகளுக்கு 'அலையாத்தி காடுகள்' எனப் பெயர் வரக் காரணம் என்னவென்றால், அவை கடலிலிருந்து வரும் அலையின் சீற்றத்தைத் தடுத்து, ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்டவை. சுரபுன்னை, வெண்கண்டல், கருங்கண்டல் போன்ற சுமார் 60 வகையான மரங்களைக் கொண்ட இந்தக் காடுகள், மருத்துவ குணமும் கொண்டவை.
அலையாத்தி காடுகளின் தனிச்சிறப்பே, அதன் சுவாச வேர்கள்தான். சதுப்பு நிலப் பகுதிகளில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால், இங்குள்ள மரங்களின் வேர்கள் பூமிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இந்த வேர்கள் ஆக்சிஜனை உள்ளிழுத்து மரங்கள் வாழ்வதற்கு உதவுகின்றன. மேலும், இந்தச் சதுப்பு நிலக் காடுகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்களின் வாழ்விடமாகத் திகழ்கின்றன.
2004-ல் ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு பிறகுதான் அலையாத்தி காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்தது. அலையாத்தி காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள், மண் அரிப்பைத் தடுப்பதுடன், புயல் காற்றையும் தடுத்து நிறுத்தும் வலிமை கொண்டவை என வனச்சரகர் இக்பால் விளக்கினார்.
இந்த தனித்துவமான ஆடி 18 கொண்டாட்டம், காவலர் குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியையும், நமது சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காவல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து, அவர்கள் பிரியாவிடை பெற்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.