கடலூர், செம்மண்டலம் பகுதியில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் இன்று பார்வையிட்டு, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளவும், பிறர் துணையின்றி தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக 1968ஆம் ஆண்டு கடலூர், செம்மண்டலத்தில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 21 காது கேளாத மாணாக்கர்களும், 10 பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாணாக்கர்களும் பயில்கின்றனர். மேலும், இப்பள்ளியில் 2 தலைமையாசிரியர்கள், 4 இடைநிலை ஆசிரியர்கள், கைத்தொழில் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், விடுதி காப்பாளர், சமையலர் அலுவலக உதவியாளர் ஆகியோருடன் இப்பள்ளி இயங்கி வருகிறது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை, காதொலி கருவி, கண்ணாடி, பிரெய்லி கைக்கடிகாரம், ஊன்றுகோல், தொடுதிரை கைபேசி போன்றவை வழங்கப்படுகிறது.
மேலும், அரசின் சார்பில் வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெற்று அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் இங்கு 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
உயர்கல்விக்காக காஞ்சிபரம் அரசு காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவித்திடவும், பார்வைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு 5ஆம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கப்பட்டு, உயர்கல்விக்காக சென்னை பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
விடுதியுடன் இயங்கும் பள்ளியாதலால் முழு சுகாதாரத்துடனும், தூய்மையாக பராமரித்திடவும், மாணாக்கர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்திட வேண்டும் எனவும், ஏதேனும் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களையும் பள்ளியில் சேர்த்து கல்வி கற்பித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, தலைமை ஆசிரியை ரூபியா ஜெனட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.