உணவுகளை பாதுகாக்கவும், அவை கெட்டுப்போவதை தடுக்கவும் ஃப்ரிட்ஜ் பெரிதும் பயன்படுகிறது. ஆனால், ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவுகள் அனைத்தும் பலன் அளிப்பது இல்லை. அவற்றின் அமைப்பு, சுவை மற்றும் ஊட்டச்சத்து ஆகியவை அனைத்தும் இதனால் சில நேரம் பாதிக்கப்படும். நான்கு முதல் பத்து டிகிரி செல்சியஸில், பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒரு வாரத்திற்கு வைத்தால், அதில் இருந்து வைட்டமின் சி போன்ற சத்துகளை இழக்க நேரிடும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Why that cut onion should not be refrigerated: Here’s how it loses its nutrition value
எட்டு நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட கீரையில் இருந்து ஏறத்தாழ 40 சதவீத சத்துகள் குறைந்து விடுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, குறிப்பிட்ட பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என பார்ப்போம்.
தக்காளி: தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபீன் போன்ற அன்டி ஆக்சிடென்ட்ஸ் இருக்கின்றன. இவற்றை குளிர்ந்த நிலையில் வைக்கும் போது, அவை இயற்கையாக பழுக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது. லைகோபீன் வளர்ச்சியும் இதில் குறைந்து விடுகிறது.
பாதுகாக்கும் முறை: தக்காளியை அறை வெப்பநிலையில் நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். அவை அதிகமாக பழுக்க ஆரம்பித்தால், அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்காமல், சாஸ்கள் அல்லது சூப்களில் பயன்படுத்தவும்.
வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு: இவற்றை அதிகமாக ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அவற்றின் வடிவம் மற்றும் தன்மை பாதிக்கப்படுகிறது. பூண்டில் வேதியியல் கலவை மாற்றம் உருவாகும். இதனால், அதில் இருக்கு நோய் எதிர்ப்பு சத்துகள் குறையத் தொடங்கும். மேலும், இதில் நச்சுத் தன்மை உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. வெங்காயத்தை பாதியாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, அதன் ஸ்டார்ச் சர்க்கரையாக மாறி நுண்ணுயிரிகளை கவர்கிறது.
பாதுகாக்கும் முறை: வெங்காயம் மற்றும் பூண்டை நன்கு காற்றோட்டமான, நேரடி சூரிய ஒளியில் இருந்து விலக்கி உலர்ந்த இடத்தில் வைக்கவும். அவற்றை பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது ஈரப்பதத்தை உருவாக்கி கெட்டுப்போவதை துரிதப்படுத்துகிறது.
வாழைப்பழம்: இவற்றில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இதை ஃப்ரிட்ஜில் வைத்தால், அவற்றின் பழுக்க வைக்கும் செயல்முறை குறைகிறது. மேலும், பழத்தின் சுவையும் குறைகிறது.
பாதுகாக்கும் முறை: வாழைப்பழங்களை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். இவை அதிகப்படியாக பழுத்தால், உடனடியாக உணவு வகைகளில் பயன்படுத்தி சாப்பிட்டு விட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.
- சுதீப் கன்னா