ஆரோக்கியமான தலைமுடி, உடல் ஆரோக்கியத்தின் அடையாளம். இன்றைய அவசர உலகில் முடி உதிர்தல், பொடுகு, முடிப்பிளவு போன்ற பிரச்சினைகளை மக்கள் அதிக அளவில் சந்திக்கின்றனர். இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், முடி உதிர்வு, முகத்தில் பருக்கள், கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
பொடுகை விரட்ட உதவும் ஆயுர்வேத வழி இங்கே
4 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் கலந்து கொள்ளவும். தலைக்குக் குளித்த பிறகு, இதை உச்சந்தலையில் தடவி, 5 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். இது பொடுகை விரட்டும்.
பொடுகுப் பிரச்னைக்கு காஸ்மெட்டிக் வினிகரும் பயன்படுத்தலாம். வினிகர் வேண்டாம் என்பவர்கள், ஆப்பிளைத் துருவி சாறெடுத்து, அந்தச் சாற்றை உச்சந்தலையில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
கற்றாழை
கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து, நல்ல தண்ணீரில் போட்டு கழுவவும். தண்ணீரின் மேலாக வெள்ளைப் படலம் ஒன்று படியும். இது அமிலத்தன்மை கொண்டது என்பதால் அதைப் பயன்படுத்தக் கூடாது.
கீழே தங்கிவிட்ட ஜெல்லை மட்டும் எடுத்து, அதனுடன் கால் டீஸ்பூன் வால் மிளகு சேர்த்து அரைக்கவும். இதை தலையில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது, பொடுகை நீக்குவதுடன் முடிக்கும் நல்ல பளபளப்பு தரும்.
மருதாணி
கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும்.
இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின்னர் கழுவவும். நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“