பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக திமுக எம்பி தயாநிதி மாறன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திமுவின் ‘ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ்’ பெறப்பட்ட மனுக்களை, அப்போதைய தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து திமுக எம்.பி.க்கள் வழங்கினர்.
பின்னர் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்க பாண்டியன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தயாநிதி மாறன், கொரோனா காலத்தில் மனு அளிக்கச் சென்ற தங்களை, முதன்மைச் செயலாளர் சண்முகம், உரிய மரியாதை இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அடுத்த ஒரே நாளில் தான் பேசியதற்காக தயாநிதி மாறன் எம்பி வருத்தம் தெரிவித்தார்.
அப்போது கோயம்புத்தூர் சி.எம்.சி காலனி வெரைட்டி ஹால் சாலை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் காவல் நிலையத்தில் தயாநிதி மாறன் மீது புகார் அளித்தார்.
அதில்,"தாழ்த்தப்பட்ட மக்களை எம்பி தயாநிதி மாறன் இழிவுபடுத்தியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தயாநிதி எம்பி மீது, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு விசாரணையின் சம்பவ இடம் சென்னை என்பதால் இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோர்ருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விரைவில் இந்த வழக்கு தொடர்பாகத் தயாநிதி மாறன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“