தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடுங்க... வயிறு நலமா வச்சிக்க கூடவே லேகியமும் சாப்பிடுங்க

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது இனிப்பு தான். இனிப்புகள் அதிகமாக சாப்பிட்டாலும் வயிற்றை நலமாக வைத்துக்கொள்ள உதவும் தீபாவளி லேகியம் செய்முறை உங்களுக்காக.

எல்லா ஆண்டும் எத்தனையோ பண்டிகை வந்தாலும், தீபாவளிக்கு இருக்கும் மவுசு தனி. புத்தாடை வாங்குவதில் இருந்து, புது வகையான பட்டாசுகள் வரை அனைத்துமே அந்த ஆண்டின் டிரெண்டுக்கு ஏற்றார் போல் இருக்கும்.

தீபாவளி லேகியம் செய்முறை

தீபாவளியன்று குடும்பமே ஒன்று கூடி, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு சிறப்பான நாள். நிறைந்திருக்கும் சந்தோஷத்தில், சுற்றி நடப்பதே மறந்துபோகும் அளவுக்கு மகிழ்ச்சி இருந்தால், சாப்பிடும் இனிப்புகளின் அளவில் மட்டும் கவனம் இருந்துவிடுமா என்ன? தீபாவளி முடிந்த பின் தான் அதிகமாக இனிப்பு சாப்பிடதன் விளைவு பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கும் ஒரு தீர்வு உள்ளது. ஸ்பெஷல் லேகியம். அதனால் தான் இது தீபாவளி லேகியம்

தேவைப்படும் பொருட்கள் : 

தனியா – கால் கப்
அரிசி திப்பிலி – 10 கிராம்
கண்டந்திப்பிலி – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
சீரகம் – அரை மேசைக்கரண்டி
மிளகு – ஒரு மேசைக்கரண்டி
வெல்லம் – 100 கிராம்
வெண்ணெய் – 100 கிராம்
தேன் – அரை கப்
ஓமம் – ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு – 4
சித்தரத்தை – 10 கிராம்

செய்முறை : 

அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலி, சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் வெண்ணெய், வெல்லம், தேன் இவற்றை தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வறுபட்டவுடன் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும் ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். வாணலியில் வெண்ணெயை போட்டு உருக விட்டு பின்னர் அதை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெண்ணெய் உருக்கிய அதே பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி 3 நிமிடம் வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு அதில் வெல்லத்தை நசுக்கி அதில் போட்டு வெல்லம் கரைந்து லேகியத்துடன் சேரும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இதைப் போல 20 நிமிடம் கிளறவும். கிளறும் போது கெட்டியானால் மேலே நெய்யை ஊற்றி விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும் போது நெய் மேலே மிதக்கும் பதம் வந்ததும் இறக்கி வைத்து விடவும்.

ஆறியதும் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து அதனுடன் தேனை சேர்த்து கிளறி பரிமாறவும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close