தீபாவளி பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது சந்தையில் புதிய ரக துணி வகைகள் குவிந்துள்ளன.இதனால் ஆடை வியாபாரம் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
தீபாவளி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது, புதிய ஆடை, இனிப்பு, பட்டாசு, புதுப்படம் இவையெல்லாம் தான். அதிலும் ஆடைக்கு தரும் முக்கியத்துவம் சற்று கூடுதலாகவே இருக்கும். இந்த வருடம், தீபாவளிக்கெனவே புதிய மற்றும் வித்யாச ரக ஆடைகள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன.
பெண் குழந்தைகளுக்கு இளவரசி தோற்றத்தை ஏற்படுத்தி தரக்கூடிய கவுன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இளம் பெண்களை கவரும் வகையில் ஓவியா, நயன்தாரா சுடிதார்கள், குட்டி சாரி ப்ராக், பட்டர்பினை ஸ்லீவ் டாப்ஸ் என சந்தையில் விற்பனைக்காக வந்துள்ளன.
ஆடவர் மற்றும் சிறுவர் ஆடைகளும் விற்பனைக்காக குவிந்துள்ளன. கடந்த தீபாவளியை விட இந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்கு சிறுவர், சிறுமிகளுக்கு அதிகளவில் ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. சர்கார் டிஷர்ட்கள், கோட் ஷூட்கள் இந்த வருடம் களத்தில் புதியதாக இறக்கப்பட்டுள்ளன. சர்கார் தீபாவளி என்பது படத்தில் மட்டுமில்லை ஆடையிலும் தான் என்று விஜய் ரசிகர்கள் மீம்கஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
பெண்கள் கம்பீரத்தையும், கண்ணியத்தையும் தரும் சேலைகளில் புதுவரவாக சானா சில்க், ஆர்கன்ஜா சேலைகள், லினேன் கார்ட்டன், டிஜிட்டல் பிரிண்ட் சேலைகள், சில்க் சேலைகள் மற்றும் டிசைனர் சேலைகள் பெண்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இவ்வாண்டு பட்டு ஜரிகையில் பனாரஸ் வேலைப்பாடு கொண்ட சட்டைகள் புதிதாய் வந்துள்ளன.
அதுமட்டுமல்ல....குடும்பத்தினர் அனைவரும் ஒரே நிறத்தில் புத்தாடை உடுத்தி குதூகலத்துடன் வலம் வர 'Family Theme ' கொண்ட சட்டைகளும் தீபாவளி ஷாப்பிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.