டெல்லி போறீங்களா… இதை படிச்சிட்டுப் போங்க!

Delhi Trip Tour to New Delhi guide Tamil News Travel அங்கே உள்ள அசோகா ஹாலில்தான் பிரதமர், அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும். ஆனால், சிறிய அரங்குதான். 300 பார்வையாளர்கள் மட்டுமே உட்கார முடியும். நான் அங்கே உட்கார்ந்து விருது வழங்குகின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து இருக்கின்றேன்.

Delhi Trip Tour to New Delhi guide Tamil News Travel
Delhi Trip Tour to New Delhi guide Tamil News Travel

மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ-வின் நாடாளுமன்ற செயலர் அருணகிரி எழுதிய இந்த கட்டுரை, டெல்லி பற்றிய முழுமையான தகவலை கொண்டிருக்கிறது. நிச்சயம் உங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

முதன்முறையாக தில்லி வருவோருக்கு உதவியாக சில தரவுகளைத் தருகின்றேன்.

1984-ல் முதன்முறை தில்லி வந்தேன். 1987 முதல், தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்றச் செயலராகப் பணி தொடங்கினேன். இன்றுவரை, 34 ஆண்டுகளாகத் தொடர்கின்றேன். இது, 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை. நான் நேரில் பார்த்த காட்சிகளை எழுதி இருக்கின்றேன். இதைப் படிக்கின்றபொழுது, நீங்கள் தில்லியை நேரில் பார்ப்பது போல இருக்கும். இரண்டு மூன்று சொற்களைச் சேர்த்து எழுதாமல், ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் தனித்தனியாக எழுதி இருக்கின்றேன். ப்பட, உடைய, கூடிய, ஆன, ஆகிய போன்ற, தேவை அற்ற இணைப்புகள் கிடையாது. எனவே, எளிமையாக இருக்கும்.

இதுபோன்ற ஒரு கட்டுரை, தமிழில் இது மட்டும்தான் இருக்கின்றது. படியுங்கள்..உங்கள் கருத்துகளை எழுதுங்கள்…உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள். தேவைப்பட்டால், பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பண்டைக்காலம் தொட்டு, சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும், தில்லி நகரம், ‘இந்திரப் பிரஸ்தா’ என்று அழைக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு பேரரசுகளின் தலைநகரமாகத் திகழ்ந்து வருகின்றது. இங்கு உள்ள பிரமாண்டமான செங்கோட்டை மற்றும் அதற்கு எதிரே இருக்கின்ற ஜூம் ஆ மசூதி ஆகியவற்றை பேரரசர் ஷாஜஹான் கட்டினார். குத்புதீன் ஐபக் என்பவர் ‘குதுப்மினார்’ கட்டினார். ‘புராண கிலா’ என்ற பழைய கோட்டை ஒன்றும் உள்ளது. பல்வேறு படையெடுப்புகளின்போது தில்லி எட்டு முறை முற்றிலும் அழிக்கப்பட்டது. தற்போது இருப்பது, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரித்தானியர்கள் முறையாகத் திட்டம் வகுத்துக் கட்டிய நகரம். ஒன்பதாவது தில்லி.

லுத்யேன் என்ற பிரெஞ்சுக் கட்டடக் கலைஞர்தான் புது தில்லி நகரத்தை வடிவமைத்தவர். அகன்ற வீதிகள், சாலையின் இருபுறமும் வரிசையாக நடப்பட்டு வளர்ந்து ஓங்கி நிற்கின்ற மரங்கள், தூய்மையான பராமரிப்பு என ஓர் ஐரோப்பிய நகரம் போலத் தோற்றம் அளிக்கின்றது. குடிஅரசுத் தலைவர் மாளிகை, ‘ரெய்சினா ஹில்ஸ்’  என்ற ஒரு சிறிய குன்றின் மேல் இருக்கின்றது. 330 அறைகள் உள்ளன. அங்கே உள்ள அசோகா ஹாலில்தான் பிரதமர், அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும். ஆனால், சிறிய அரங்குதான். 300 பார்வையாளர்கள் மட்டுமே உட்கார முடியும். நான் அங்கே உட்கார்ந்து விருது வழங்குகின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து இருக்கின்றேன்.


குடியரசு தலைவ்ர் மாளிகை, மேற்கில் இருந்து கிழக்குத் திசையை நோக்கி உள்ளது. இதன் நுழைவாயிலின் இருபுறமும் கம்பீரமாக இருக்கின்ற கட்டடங்கள் ‘நார்த் பிளாக்’ , ‘சௌத் பிளாக்’ என அழைக்கப்படுகின்றன. வடக்குத் தொகுப்பு, தெற்குத் தொகுப்பு. சௌத் பிளாக் கட்டடத்தில்தான் இந்தியத் தலைமை அமைச்சரின் அலுவலகம் இயங்குகின்றது. பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகமும் அங்கேதான் செயல்படுகின்றது. நார்த் பிளாக் கட்டடத்தில் நிதி, அயல் உறவு, உள்துறை ஆகிய மூன்று அமைச்சகங்கள் செயல்படுகின்றன.

இந்த இரண்டு கட்டடங்களுக்கும் முன்பாக குடியரசு தலைவர் மாளிகையின் முற்றமாக அமைந்து இருப்பதுதான் ‘விஜய் சௌக்’ என்று அழைக்கப்படும் ‘வெற்றிச் சதுக்கம்’ ஆகும். குடியரசு தலைவர் மாளிகையின் பின்புறம் உள்ள “மொகல் கார்டன்” என்ற புகழ்பெற்ற பூந்தோட்டத்தில், குளிர்காலத்தில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் இதனை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டும் பொது மக்கள் பார்க்கலாம். நூற்றுக்கணக்கான அரிய வகை மலர்களை, அங்கே பார்க்கலாம்.


நாடாளுமன்றம் வெற்றிச் சதுக்கத்திற்கு அருகில், வட்ட வடிவில் மிகப் பிரமாண்டமான முறையில், பெரியபெரிய தூண்களுடன் நாடாளுமன்றக் கட்டடம் இருக்கின்றது. இந்தியில் ‘சன்சத் பவன்’ (SANSAD BHAWAN) என்று அழைக்கப்படுகின்றது. நாடாளுமன்றம் அமைந்து உள்ள வீதி, நாடாளுமன்றத் தெரு (PARLIAMENT STREET) என அழைக்கப்படுகின்றது. அதன் மறுமுனையில், இரஜபுத்திர மன்னர்களால் கட்டப்பட்ட ‘ஜந்தர் மந்தர்’ என்ற, திறந்தவெளி வான் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. மக்கள் அவை, மாநிலங்கள் அவை ஆகிய இரண்டு அவைகளும் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு உள்ளேயே செயல்படுகின்றன.

இரண்டு அவைகளுக்கும் நடுவில் மைய அரங்கம் (CENTRAL HALL) உள்ளது. அங்கேதான், இந்திய அரசு அமைப்புச் சட்ட வரைவு மன்றம் (CONSTITUENT ASSEMBLY) கூடியது. அதன்பிறகு, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் அங்கே நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற வளாகத்தில் மிகப் பெரிய நூலகம் உள்ளது. கேபினெட் அமைச்சர்களுக்கான நாடாளுமன்ற அலுவலக அறைகள், அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள அறைகள் இருக்கின்றன.


நாடாளுமன்றம் நடைபெறுகின்றபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து பொதுமக்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். அதற்கு, ஏதேனும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையுடன், நாடாளுமன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமச் சீட்டு பெறலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அருகில் இருப்பவரிடம் பேசக்கூடாது. கைகளால் குறிப்பு எதுவும் காட்டக் கூடாது. நாம் அமர்ந்து இருக்கின்ற வரிசையிலேயே, பத்துப் பேருக்கு ஒருவர் வீதம் நாடாளுமன்றக் காவலர்கள் சபாரி உடை அணிந்து நமக்கு இடையே அமர்ந்து இருப்பார். அவர், உங்கள் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பர். அவைக்குள் ஏதேனும் முழக்கங்கள் எழுப்புவது, துண்டு அறிக்கைகள் வீசுவது கடும் குற்றமாகக் கருதப்படும். அவ்வாறு செய்பவர்களை உடனடியாகக் கைது செய்து விசாரணைக்காகச் சிறையில் அடைத்து விடுவார்கள். எனவே, அமைதியாக அமர்ந்து அவை நடவடிக்கைகளைக் கவனியுங்கள்.


வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடர், மாரிக்காலக் கூட்டத் தொடர், குளிர்காலக் கூட்டத் தொடர் என நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் சுமார் 100 நாள்களுக்கும் மேல் கூடுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 26-ஆம் நாள் தொடரித்துறையின் நிதிநிலை அறிக்கையும், 28-ஆம் நாள் மாலை ஐந்து மணிக்கு, பொது நிதிநிலை அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பட்ஜெட் கூட்டத் தொடர் 70 நாள்கள் நடைபெறுகின்றது. அதாவது லண்டனில் பகல் 12 மணியாக இருக்கும்பொழுது, அவர்கள் வானொலியில் கேட்பதற்காக, இந்திய நிதிநிலை அறிக்கையை மாலை ஐந்து மணிக்கு வாசித்து வந்தார்கள்.


ஆங்சில அரசின் அந்த நடைமுறைகளை வாஜ்பாய் அரசு மாற்றியது. இப்போது, நரேந்திரர் தலைமையிலான அரசு, பிப்ரவரி 1 ஆம் தேதி, வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்கின்றது. ஒரு நிதிநிலை ஆண்டு என்பது, ஏப்ரல் 1 தொடங்கி, அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் நிறைவு அடைகின்றது அல்லவா. அதையும் மாற்றி, ஜனவரி முதல் நாளில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கருத்தும் நிலவுகின்றது.
இந்தியா கேட்-போட் கிளப்

குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்து இருக்கின்ற வீதி ‘இராஜபாட்டை’ (ராஜ்பத்) என அழைக்கப்படுகின்றது. சரியாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ‘இந்தியா கேட்’ இருக்கின்றது. இரண்டாம் ஆப்கன் போரில் உயிர்நீத்த வீரர்களின் பெயர்கள் அந்தக் கற்சுவரில் செதுக்கப்பட்டு இருக்கின்றன. இராஜபாட்டையில் ஆண்டுக்கு ஒருமுறை பலநூறு  கோடிகளைச் செலவிட்டு நடத்தப்படுகின்ற ஜனவரி 26 குடியரசு நாள் அணிவகுப்பு கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று. தொலைக்காட்சியில் நீங்கள் பலமுறை பார்த்து இருந்தாலும் நேரில் சென்று பார்ப்பது தனி மகிழ்ச்சி.


அதே நாளில், மாநிலத் தலைநகரங்களிலும்  அணிவகுப்புகள் நடைபெற்றாலும், தில்லி அணிவகுப்புக்கு இணையாக இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறுவது இல்லை. இராஜபாட்டையின் இருபுறமும் அமைந்து இருக்கின்ற புல்வெளி ‘போட் கிளப்’ என அழைக்கப்படுகின்றது. இதன் இரண்டு ஓரங்களிலும் இருக்கின்ற மூன்று அடி ஆழமே உள்ள சிறிய கால்வாயில் சிறிய படகுகள் மிதக்கின்றன. மக்கள் பயணிக்கலாம். எனவே, இதற்கு இப்பெயர் வந்தது.

சென்னை மெரீனா கடற்கரையில் மக்கள் குவிவது போல், இந்தியா கேட் பகுதியைச் சுற்றிலும் அமைந்துள்ள புல்வெளி, மாலைநேரப் பொழுதுபோக்கு இடமாகக் களைகட்டுகின்றது. போட் கிளப் புல்வெளித் திடலில்தான் அரசியல் கட்சிகளின் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. அருகில்தான் தலைவர் வைகோ அவர்களின் வீடு என்பதால், நான் நாள்தோறும் அந்த ஆர்ப்பாட்டங்களைப் பார்த்து இருக்கின்றேன்.


90-களின் தொடக்கத்தில், மகேந்திரசிங் திகாயத் என்பவர் தலைமையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து இங்கு பேரணி நடத்தினர். பேரணியின் முடிவில் உரை ஆற்றிய திகாயத், அரசு நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, நாம் இந்த இடத்தை விட்டுப் போகக் கூடாது என அறிவித்தார். எனவே, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், பத்து நாள்களுக்கும் மேலாகத் தங்கி விட்டனர். வெட்டவெளியில் மலம் கழித்தனர். அவர்களுடன் ஒன்றிய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி பல சலுகைகளை அறிவித்ததற்குப் பின்னர்தான் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, போட் கிளப்பில் பேரணி பொதுக் கூட்டங்கள் நடத்துவதை, முழுமையாகத் தடை செய்து விட்டார்கள். தற்போது, வடக்குத் தில்லியில் ‘தார்யா கஞ்ச்’ பகுதியில்  உள்ள ராம் லீலா திடலில்தான் பிரமாண்டமான பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ‘ஜந்தர் மந்தர்’ அருகே இடம் ஒதுக்கப்படுகின்றது. இந்த இடம், நாடாளுமன்றத் தெருவின் மறுமுனையில் இருக்கின்றது. இந்திரா சௌக், ராஜீவ் சௌக் அருகே தில்லியின் மையமான இடம் ஜந்தர் மந்தர். ஒவ்வொரு நாளும் இங்கே பல்வேறு வகையான ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டே இருக்கும்.


இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருந்து ஏதாவது ஒரு அமைப்பு, ஏதேனும் ஒரு கோரிக்கையை முன்வைத்து, முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம். அங்கே, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், ஈழத்தமிழர்களின் நலனுக்காகவும், தலைவர் வைகோ அவர்கள் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள். புது தில்லி நகரின் மையமான பகுதியில் அமைந்து உள்ள ‘லோதி தோட்டம்’ பரந்து விரிந்தது. தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் நாள்தோறும் நடைபழகும் இடம் இது. இதற்கு நேர் எதிர் வீட்டில் 15 ஆண்டுகள் இருந்தோம்.
அரசு அலுவலகங்கள்

நம்முடைய தலைநகர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டைக்குள் ‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ என்ற பெயரில் தலைமைச் செயலகக் கட்டடம் இருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். அதுபோல, இந்திய அரசின் தலைமைச் செயலகம் சென்ட்ரல் செக்ரடேரியட் ஆகும். ஆயினும் இங்கு சில அமைச்சங்கள் மட்டுமே உள்ளன.

மத்திய அரசின் அமைச்சரகச் செயலாளர் (கேபினெட் செக்ரட்டரி) குடியரசுத் தலைவர் மாளிகையில் இயங்குகின்றது. ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் புது தில்லி நகரின் பலவேறு பகுதிகளில்  பிரமாண்டமான கட்டடங்களைக் கட்டி இருக்கின்றார்கள். இராஜபாட்டையின் குறுக்காகச் செல்லும் சாலைக்கு ‘ரஃபி மார்க்’ என்று பெயர். (ரஃபி அகமது கித்வாய் மார்க் என்பதன் சுருக்கம்). இந்தச் சாலையின் வடக்கு முனையில் இரண்டு பெரிய கட்டடங்கள் உள்ளன. மேற்குப் பகுதியில் இருப்பது ‘இரயில் பவன்’ ஆகும். இரயில்வே அமைச்சகம் இங்கு செயல்படுகின்றது. கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ள கட்டடம் ‘கிருஷி பவன்’ ஆகும். வேளாண் அமைச்சகம் இங்கு செயல்படுகின்றது.

இந்தச் சாலையின் தெற்கு முனையிலும் இரண்டு பெரிய கட்டடங்கள் இருக்கின்றன. மேற்குப் பகுதியில் அமைந்து இருப்பது ‘ஏர் ஹெட் குவார்ட்டர்ஸ்’; இந்திய வான் படைத் தலைமை அகம். கிழக்குப் பகுதியில் உள்ளது ‘உத்யோக் பவன்’. இங்கு தொழில் துறை, வணிகம் (காமர்ஸ்), நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல அமைச்சரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒவ்வொரு அமைச்சரகமும் செயல்படுகின்ற கட்டடங்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. சில கட்டடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் செயல்படுகின்றன.

தில்லியில் அமைச்சரகங்கள்

வடக்குத் தொகுப்பு (NORTH BLOCK)-  உள்துறை, நிதி, அரசு ஊழியர்கள் மற்றும் பயிற்சித்துறைகள்.
தெற்குத் தொகுப்பு (SOUTH BLOCK ) இந்தியத் தலைமை அமைச்சர் அலுவலகம், அயல் உறவு மற்றும் பாதுகாப்புத் துறைகள்.
சேனா பவன் (SENA BHAVAN) – பாதுகாப்பு அமைச்சகம்
சஞ்சார் பவன் (SANCHAR BHAVAN) – தொலைத் தொடர்பு அமைச்சகம்
லோக் நாயக் பவன் (LOK NAYAK BHAVAN) – உள்துறை அமைச்சகப் பிரிவுகள், பல்வேறு அமைச்சகத்தின் பிரிவு அலுவலகங்கள்
ஷ்ரம் சக்தி பவன் (SHRAM SHAKTI BHAVAN ) – தொழிலாளர் நலத்துறை, மின்சாரம், நீர்வளத்துறை
யோஜனா பவன் (YOJANA BHAVAN) – திட்டம், திட்டக்குழு
நிர்மாண் பவன் (NIRMAN BHAVAN) – நகர்ப்புற வளர்ச்சித் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒன்றிய பொதுப்பணித் துறை
சாஸ்திரி பவன் (SHASTRI BHAVAN) – சட்டம், பெட்ரோலியம், மனதவள மேம்பாட்டுத்துறை, பழங்குடியினர் நலன், மருந்துகள் உரங்கள், செய்தி ஒலிபரப்புத் துறை
பர்யாவரன் பவன் (PARYAVARAN BHAVAN) – சுற்றுச்சூழல் அமைச்சரகம்,  சிறுபான்மையினர் நலன்,
டிரான்ஸ்போர்ட் பவன் (TRANSPORT BHAVAN) – தரைவழிப் போக்குவரத்து, கப்பல், சுற்றுலா
மௌஸம் பவன் (MOUSAM BHAVAN) – அறிவியல் தொழில்நுட்பத்துறை
ராஜீவ் காந்தி பவன் (RAJIV GANDHI BHAVAN) – வான் ஊர்திப் போக்குவரத்துத் துறை
கிருஷி பவன் (KRISHI BHAVAN) – விவசாயம், உணவு, நுகர்வோர் நலன், கிராமப்புற வளர்ச்சித் துறை
உத்யோக் பவன் (UDYOG BHAVAN) – வணிகம், தொழில்துறை, துணிநூல் துறை
சி.ஜி.ஓ. வளாகம் (CENTRAL GOVERNMENT OFFICE COMPLEX) – மரபுசாரா எரிசக்தித் துறை, ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம், மத்திய சிறப்புப் பாதுகாப்புப்படை உள்ளிட்ட பல அலுவலகங்கள்
பஞ்சசீல் பவன் (PANCHSHEEL BHAVAN) – உணவு பதப்படுத்துதல் துறை

இவ்வாறு, புது தில்லி பகுதியில், சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கின்ற பெரும்பாலான கட்டடங்கள் அரசுக்குச் சொந்தமானவையே! எனவே, இந்தியாவிலேயே மிகவும் உயர் பாதுகாப்புப் பகுதி ஆகும். மாலை ஏழு மணிக்குப் பிறகு இந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் கிடையாது. மிகக்குறைவு. நான்கு உருளை ஊர்திகள் மட்டுமே செல்லும். ஒருசில இரு உருளை ஊர்திகள் மட்டுமே ஓடும்.

உத்யோக் பவனுக்கு நேர் எதிரே, தலைவர் வைகோ அவர்களுடைய மீனாபாக் 2 ஆம் எண் வீட்டில் 1987 முதல் 89 வரை இரண்டு ஆண்டுகள் வசித்ததால், இந்தப் பகுதியை நன்கு அறிவேன். தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அருணாசலம் அவர்களுடைய அலுவலகம் உத்யோக் பவனில் இயங்கியதால், அடிக்கடி உள்ளே சென்று வர வாய்ப்புகள் கிட்டின.

அப்போதெல்லாம் வாயிலில் இரண்டு காவலர்கள் மட்டும்தான் இருப்பார்கள். அவ்வளவுதான். மிக எளிதாக உள்ளே சென்று வரலாம். நாள்தோறும் போட் கிளப் பகுதியில் நடக்கின்ற கூட்டங்களைப் பார்ப்பேன். பேச்சுகளைக் கேட்பேன். நடுவண் அரசு அலுவலகங்களில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருப்பதால் வேலைப்பளு இல்லை. சுற்றிலும் இருக்கின்ற அமைச்சகங்களின் ஊழியர்கள், நண்பகல் உணவு இடைவேளையில் வெளியே வருவார்கள்.


போட் கிளப்பில் உட்கார்ந்து சீட்டு ஆடுவார்கள். அரட்டை அடித்துப் பொழுதைக் கழிப்பார்கள். குட்டித் தூக்கம் போடுவார்கள். அதைப்பார்க்கும் எங்களுக்கெல்லாம் கடும் கோபம் வரும். ஆனால், அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், உடனே எல்லோருமாகச் சேர்ந்துகொண்டு கொடி பிடித்துப் போராட்டம் நடத்துவார்கள். எனவே, உயர் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வது இல்லை.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, நிலைமை மாறத் தொடங்கியது. நரேந்திரர் ஆட்சியில் கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்கள். அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு விட்டது. எளிதாக யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது. அடையாள அட்டை வேண்டும். ஊழியர்களின் வருகை நேரம், கைவிரல் பதிவு செய்யப்படுகின்றது. அவர்கள் பகல் முழுமையும் அலுவலகத்திற்கு உள்ளேதான் இருக்க வேண்டும். முன்பு போல போட் கிளப்புக்கு வர முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள்

நாடாளுமன்றத்தின் வடக்கு, தெற்குப் பகுதியில் ‘நார்த் அவென்யு’, ‘சௌத் அவென்யு’ என்ற இரு சாலைகளில் சுமார் 500 வீடுகள் உள்ளன. ஆங்கிலேயர்கள் கட்டியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கே வசிக்கின்றனர். “லோதி கார்டன், லோதி எஸ்டேட், பண்டாரா பார்க், வித்தல்பாய் இல்லம், மீனா பாக்” ஆகிய இடங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடி இருப்புகள் உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.

முதல்முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு பெறுபவர்களுக்கு நார்த் அவென்யு, சௌத் அவென்யுவில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. தலைவர் வைகோ அவர்கள் ஆறாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு வகிப்பதால், கேபினெட் அமைச்சர்களுக்கு உரிய பெரிய மாளிகை வீடு ஒதுக்கி இருக்கின்றார்கள். ஆனால், இங்கே உள்ள மாளிகைகளில் தரைத்தளம் மட்டும்தான். முதல் மாடி கூடக் கிடையாது. தலைமை அமைச்சர் நரேந்திரர் வசிக்கின்ற வீட்டிலும்கூட மாடி கிடையாது.

புது தில்லியின் பல்வேறு சாலைகளில் அமைந்து உள்ள மாளிகைகள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாளிகையும் சுமார் அரை ஏக்கர் முதல் இரண்டு ஏக்கர் வரையிலும் பரந்து விரிந்து இருக்கின்றன. அந்த மாளிகைகளின் பிற்புறம் பணியாளர்களுக்கான குடி இருப்புகள் உள்ளன. கேபினெட் அமைச்சர்களுக்கு மிகப்பெரிய மாளிகைகள் உள்ளன. அரசின் உயர் அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கும் அதே போன்ற பெரிய மாளிகைகள் ஒதுக்கப்படுகின்றன. இந்தக் கட்டடங்களை ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை பராமரிக்கின்றது.

ஹைதராபத் பவனில்தான், இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் மற்றும் அயல்நாட்டுத் தலைவர்கள் சந்திப்புகள் நிகழ்கின்றன. சௌத் அவென்யுவின் தெற்கு முனையில் ‘தீன்மூர்த்தி பவன்’ இருக்கின்றது.
பண்டித ஜவஹர்லால் நேரு தலைமை அமைச்சராக இருந்தபோது 17 ஆண்டுகள் இந்த இல்லத்தில் வசித்தார். இப்போது அவரது  நினைவு இல்லமாக ஆக்கப்பட்டு விட்டது.

இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது, சப்தர்ஜங் சாலை, அக்பர் சாலை ஆகியவற்றின் இணைப்பில் உள்ள இரண்டு வீடுகளை ஒன்றாக இணைத்து இல்லம் மற்றும் அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். அந்த வீட்டில் அவர் படுகொலை செய்யப்பட்டபின்பு, அந்த இரண்டு இல்லங்களையும் நினைவு இடமாக ஆக்கி விட்டார்கள். அதற்குப் பின்னர் ரேஸ் கோர்ஸ் சாலை 7-ஆம் எண் இல்லமும், அதை ஒட்டி அமைந்து இருக்கின்ற மேலும் இரண்டு இல்லங்களும் தலைமை அமைச்சரின் குடி இருப்பு மற்றும் அலுவலகமாகச் செயல்பட்டு வருகின்றன. 12 ஏக்கர் நிலப்பரப்பு. அந்தச் சாலையின் ஆங்கிலப் பெயரை மாற்றப்போவதாக, ஒன்றிய அரசு அறிவித்தது.

அந்த அறிவிப்பு வெளியான அன்று மாலையே, தில்லி மாநில அரசு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அங்கே வந்து, அந்தச் சாலையின் பெயரை, லோக் கல்யாண் மார்க் எனப் பெயர்ப்பலகை வைத்துத் திறந்து விட்டார். தில்லி தெருக்களுக்குப் பெயர் சூட்டுவது என் அதிகாரம் என அவர் அறிவித்தார். அந்தப் பெயரை பாஜக அரசால் மாற்ற முடியவில்லை. காரணம், அந்தப் பெயரின் பொருள், மக்கள் முன்னேற்றச் சாலை என்பதாகும்.


லண்டன் நகரில் ‘10, டௌனிங் தெரு’ என்பது இங்கிலாந்து நாட்டின் முதன்மை அமைச்சர் இல்லம். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பென்சில்வேனியா வீதியில் அமைந்து உள்ள ‘வெள்ளை மாளிகை’ என்பது அமெரிக்கக் குடி அரசின் தலைவர் இல்லம் என்பது போல், ‘இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சருக்கு எனத் தனி மாளிகை எதுவும் இல்லை. புது தில்லியில் அதற்குப் பொருத்தமான ஒரே இடம் ‘தீன்மூர்த்தி பவன்’ மட்டும்தான். அது இப்போது நினைவு இல்லம். எனவே, இப்போது, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், குடியரசின் துணைத்தலைவர், தலைமை அமைச்ருக்கு, புதிய  வீடுகளை, நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே கட்டப் போகின்றார்கள்.  

புது தில்லியில் உள்ள தலைவர்களின் வீடுகளில் தரைத்தளம் மட்டுமே உண்டு. மாடி கிடையாது. முதன்மையான சாலைகளின் இருமருங்கிலும் உள்ள வீடுகளின் பெயர்ப் பலகைகளைப் பார்த்துக் கொண்டே சென்றால், அந்த வீட்டில் யார் வசிக்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அயல்நாட்டுத் தூதரங்கள்

‘சாணக்கியபுரி’ என்ற பகுதியில் உள்ள அமைதி வழியில்தான் (சாந்தி பத்) அயல்நாட்டுத் தூதரகங்கள் வரிசையாக இருக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள சாலைகளுக்கு ‘நீதி வழி (நீதி மார்க்), நியாய வழி (நியாய மார்க்), சத்திய வழி’ (சத்ய மார்க்), தர்ம மார்க் என்றும், அயல்நாட்டுத் தலைவர்களின் பெயர்களும் சூட்டி இருக்கின்றார்கள். சாணக்கியபுரியின் தெற்குப் பகுதியில் ‘இரயில் மியூசியம்’ உள்ளது. இந்தியாவில் ஓடிய பல்வேறு வகையான இரயில் என்ஜின்கள் இங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.


கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!

குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி வருகின்ற சாலையின் ஒரு இடத்தில், காந்தி அடிகள் தலைமையில் ‘தண்டியில் உப்பு அள்ளும் அறப்போர் அணிவகுப்பு’ செல்கின்ற காட்சியைச் சிலையாக வடித்து இருக்கின்றார்கள். உங்கள் கையில் உள்ள 500 ரூபாய் நோட்டின் பின்பகுதியில் அந்தச் சிலைதான் உள்ளது.


தமிழ்நாடு இல்லம்

சாணக்கியபுரியிலேயே, இந்தியாவில் உள்ள மாநில அரசுகளின் விருந்தினர் இல்லங்கள் அமைந்து உள்ளன. அங்கே மாநில அரசுகளின் தூதர்கள் இருக்கின்றனர். தமிழ்நாடு இல்லம், கர்நாடகா இல்லம், ஆந்திரா பவன், குஜராத் பவன் எனப் பல்வேறு இல்லங்கள் இருக்கின்றன. அங்கு உள்ள உணவகங்களில் தென் இந்திய உணவுகள் கிடைக்கின்றன. தமிழ்நாடு அரசு இல்லம், பழைய கட்டடம், புதிய கட்டடம் இரண்டும் ஒரே பகுதியில் சிறிய தொலைவு இடைவெளியில் இருக்கின்றன.

பழைய கட்டடத்தில் 40 அறைகளும், புதிய கட்டடத்தில் 75 அறைகளும் உள்ளன. எல்லாமே இரண்டு படுக்கைகள் கொண்ட ஏ.சி. அறைகள்தாம். இதர விடுதிகளை ஒப்பிடுகையில் குறைந்த வாடகைதான். அங்கே உள்ள உணவகத்தில் தரமான உணவு கிடைக்கும். இங்கே தங்குவதற்கு, சென்னையில் உள்ள தமிழக அரசின் பொதுத்துறை அலுவலகத்தில்தான் அறைகளை முன்பதிவு செய்ய வேண்டும். கூட்டம் அதிகம் இல்லாத காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின்பேரில் அறைகளை ஒதுக்குவார்கள். சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னையில்தான் முன்பதிவு செய்ய வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ. 70/- மட்டுமே வாடகை. பழைய கட்டடத்தை இடித்துவிட்டு ஒன்பது மாடி புதிய கட்டடம் கட்டப் போகின்றார்கள்.
தில்லி சாலைகள்

தலைநகர் தில்லியில் சில சாலைகளுக்கு சுப்பிரமணிய பாரதி மார்க், காமராஜ் ரோடு, இராஜாஜி ரோடு எனத் தமிழகத் தலைவர்களின் பெயர்களும் சூட்டி இருக்கின்றார்கள். (இந்தியில் ‘பத்’ (பாதை), ‘மார்க்’ என்பன சாலைகளைக் குறிக்கும் சொற்கள் ஆகும்.) காமராஜ் சாலையில் காமராசரின் உருவச் சிலையும் உள்ளது. அக்பர் சாலை, ஒளரங்கசீப் சாலை, ஷாஜகான் சாலை, ஹூமாயுன் சாலை, ஷெர்ஷா சாலை என்று பேரரசர்களின் பெயர்களில் அமைந்து உள்ள சாலைகள்தாம் தில்லியின் முதன்மையான சாலைகள் ஆகும். அதுபோல் மௌலானா அபுல் கலாம் ஆசாத் சாலை, ஜன்பத் (மக்கள் வழி) என்பனவும் முதன்மையான சாலைகள் ஆகும்.


அசோகா சாலையில் உள்ள ‘நிர்வாசன் சதன்’ என்ற கட்டடத்தில்தான் இந்தியத் தேர்தல் ஆணையம் இயங்குகின்றது. நாடாளுமன்றத் தெருவில் இந்திய ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம் உள்ளது. இதே பகுதியில் அமைந்து உள்ள ‘குருத்வாரா பங்களா சாகிப்’ என்பது சீக்கியர்களின் புனிதத் தலம் ஆகும். சஃப்தர்ஜங் என்ற இடத்தில் சிறிய வான் ஊர்தித்தளம் உள்ளது. பயிற்சி வான் ஊர்திகள் இந்தத் தளத்தில் இருந்து பறக்கின்றன.


கூட்ட அரங்குகள்

மௌலானா அபுல் கலாம் ஆசாத் சாலையில் உள்ள ‘விஞ்ஞான் பவன்’ என்ற அரங்கத்தில்தான் குடிஅரசுத் தலைவர், ஒன்றிய முதன்மை அமைச்சர், அயல்நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கின்ற மாநாடுகள் நடைபெறுகின்றன. இதற்கு அருகில்தான் குடியரசுத் துணைத் தலைவர் மாளிகை உள்ளது. மேலும், நாடாளுமன்றத்தைச் சுற்றி உள்ள மாவ்லங்கர் அரங்கம், தால்கடோரா உள் அரங்கம், கான்ஸ்டிட்டியூசன் அரங்கம் மற்றும் தெற்கு தில்லியில் உள்ள ‘சிறி போர்ட் ஆடிட்டோரியம்’ ஆகிய உள் அரங்குகளிலும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. மாவ்லங்கர் ஆடிட்டோரியம் அருகில் உள்ள யு.என்.ஐ. கேண்டீன் எல்லோருக்கும் அறிமுகமான ஓர் இடம்.
தில்லி சட்டமன்றம்

தில்லி மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் 70; நாடாளுமன்றத் தொகுதிகள் 7. தில்லி சட்டமன்றம் வடக்கு தில்லியில் உள்ளது. ‘தில்லி நகர் பாலிகா’ நாடாளுமன்றத் தெருவில் ‘பாலிகா பவன்’ என்ற கட்டடத்தில் செயல்படுகின்றது. புது தில்லியில் பார்க்க வேண்டிய இடங்கள் செங்கோட்டை, ஜூம் ஆ பள்ளிவாசல், ஐந்தர் மந்தர், குதுப்மினார், தாமரைக் கோவில் லோட்டஸ் மந்திர், அக்சர்தாம் கோவில் என்பன ஆகும்.
தலைவர்களின் நினைவாக …

தில்லி நகரம் முழுமையும் சமாதிகளும், நினைவு இல்லங்களும் இருக்கின்றன. காந்தி நினைவு இடம் (ராஜ்காட்), நேரு (விஜய் காட்), இந்திரா காந்தி (சக்தி ஸ்தல்), ராஜீவ் காந்தி (வீர் பூமி), லால்பகதூர் சாஸ்திரி, சரண்சிங், பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோருக்கும் நினைவு இடங்கள்  உள்ளன. மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிர்லா இல்லம் அமைந்து இருக்கின்ற சாலைக்கு “30 ஜனவரி சாலை” (இந்தியில் “தீஸ் ஜனவரி மார்க்”) என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அந்த நாளில்தான் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார்.


தில்லியில் தமிழர்கள்

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன். அமெரிக்காவின் நியூ யார்க். ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் ஆகிய மூன்று நகரங்களில் உலகின் அனைத்து நாடுகளையும் சார்ந்த மக்கள் வசிக்கின்றார்கள். அதுபோல தில்லியும் ஒரு பன்னாட்டு நகரம் ஆகும். சுமார் 150 நாடுகளின் தூதரகங்கள் இங்கே இருப்பதால், அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் தில்லியில் வசிக்கின்றார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தில்லி பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றார்கள். அண்டை மாநிலங்களான அரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையில் அடித்தட்டு மக்கள் இடம் பெயர்ந்து வந்து தில்லியில் வசித்து வருகின்றார்கள். இந்தியாவின் தென் கோடியில் இருந்து தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் இலட்சக்கணக்கில் வாழ்கின்றனர்.


தில்லியின் சுற்றுப்புறங்களில் சுமார் இரண்டு கோடி மக்கள் வசிக்கின்றார்கள். தமிழர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம் இருக்கலாம். கரோல் பாக், இராமகிருஷ்ணாபுரம், ஜனக்புரி, ஜல் விகார், திரிலோக்புரி, மயூர் விகார் போன்ற பகுதிகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பல்வேறு இடங்களில் பரவி வாழ்வதால் குறிப்பிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெறக் கூடிய அளவுக்கு வாக்கு வங்கி எதுவும் இல்லை.

இங்கு தமிழர்கள் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அறுபதுகளில் மும்பையில் நடந்தது போன்ற, தமிழர்களுக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்பு உணர்வு எதுவும் தில்லியில் இல்லை. நம்மை விடவும் கூடுதலாக மலையாளிகள் தில்லியில் வசித்து வருகின்றனர். ஆர்.கே. புரம் சட்டமன்றத் தொகுதியில் மலையாளி வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள்.


தில்லியில் வாழ்க்கைத் தரம் நாட்டின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் உயர்ந்து இருக்கிறது. வலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. வணிக நிறுவனங்களை நடத்துகின்ற வட இந்தியர்கள், அலுவல் அகப் பணிகளுக்குத் தமிழர்களைப் பணிக்கு அமர்த்துவதில் விருப்பம் காட்டுகின்றனர். ஏனெனில் அவர்கள் சங்கம் அமைத்துக் கொண்டு – கொடி பிடித்துப் போராடுவது இல்லை. மேலும் தென் இந்தியர்களைப் போல வட இந்தியர்கள் அலுவலகப் பணிகளில் சேருவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. வட இந்தியர்கள் வணிகத்திற்கே முதல் இடம் கொடுக்கின்றார்கள்.


தில்லி ஆர்.கே. புரம் பகுதியில் ‘தமிழ்ச் சங்கம் மார்க்’ என்ற வழியில், தில்லி தமிழ்ச் சங்கம் சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றது. கூட்ட அரங்கம் உள்ளது. தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் ஏழு பள்ளிகளை நடத்தி வருகின்றது. ஆர்.கே. புரம், லோதி எஸ்டேட், மந்திர் மார்க், பூசா ரோடு, ஜனக்புரி, மோதி பாக், லெட்சுமிபாய் நகர் ஆகிய தில்லியின் முதன்மையான இடங்களில் பெரிய கட்டடங்களில் இந்தப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

தில்லியில் அமைந்து உள்ள கல்வி அமைப்புகளில் இந்தப் பள்ளிகள் முதன்மையான இடம் வகித்து வருகின்றன. மேலும் பல இடங்களில் பள்ளிகளைத் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வட இந்தியர்கள் தமிழ்ப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதை விரும்புகின்றார்கள். தமிழர்களுக்கு இப்பள்ளிகள் நற்பெயரை ஈட்டித் தருகின்றன.


1950 முதல் 1985 வரையிலும் தமிழ்நாட்டில் இருந்து பெரும் அளவில் வேலைவாய்ப்புகள் தேடி இளைஞர்கள் தில்லிக்கு வந்தனர். நானும் அப்படித்தான் டெல்லி சென்றேன். அப்போதெல்லாம் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகின்ற தேர்வுகளில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக தமிழ் இளைஞர்களே வெற்றி பெற்று வந்தனர். முதன் முதலாக சென்னைக்கு வருகின்ற இளைஞர்கள் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள மேன்சன்களில் அடைக்கலம் புகுவதுபோல, ஐம்பதுகளில் தொடங்கி முதன்முதலாக தில்லிக்கு வருகின்ற இளைஞர்களின் புகலிடமாக கரோல் பாக் சரஸ்வதி மார்க்கில் உள்ள ‘இராமானுஜம் மெஸ்’ திகழ்ந்தது. இப்போது நிறைய உணவகங்கள் ஏற்பட்டு விட்டன.


ஒருகாலத்தில் ஒன்றிய அரசு அமைச்சரகங்களில் பெரும்பாலும் தமிழர்களே நிறைந்து இருந்தனர். ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பொறுப்புகளிலும் தமிழர்கள் பெரும் அளவில் இருந்தனர். அப்படி வந்தவர்கள் 30, 40 ஆண்டுகள் பணி ஆற்றி ஓய்வு பெற்றவுடன் இங்கேயே சொந்தத் தொழில் தொடங்கி வீடுகள் கட்டிக் குடியேறி விட்டனர். அண்மைக்காலமாக மருத்துவம், பொறி இயல், வாணிபத் துறைகளில் தமிழ் இளைஞர்கள் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டதால் முன்புபோல் ஒன்றிய அரசுப் பணிகளில் நாட்டம் கொள்வது இல்லை.

தமிழ்நாட்டில், திராவிட இயக்கம் படைத்த கல்விப்புரட்சியின் விளைவாக கிராமங்களைச் சேர்ந்த  இலட்சக்கணக்கான இளைஞர்கள் பொறிஇயல் படித்து விட்டு அயல்நாடுகளுக்குப் பறக்கின்றார்கள். உலகம் முழுமையும் சுற்றுகின்றார்கள்.


குளிரும், கோடையும்

தில்லியில் கடுங்குளிரும் வாட்டி எடுக்கும்; கோடை வெயிலும் சுட்டு எரிக்கும்!

இராஜஸ்தான் பாலைமணல் வெளியில் இருந்து கிளம்பி வருகின்ற மண்புழுதிக் காற்று மழையாகப் பொழியும். எல்லாமே உச்சம்தான்!

ஒரு ஒப்பீடு. தமிழ்நாட்டின் உயர்ந்த அளவு வெப்ப நிலை 39 டிகிரி; குறைந்த அளவு 17 டிகிரி. டெல்லியில் உயர்ந்த அளவு 45 டிகிரி; குறைந்த அளவு 2 டிகிரி ஆகும். குளிர் காலத்தில் பனிமூட்டம் சாலையில் ஐந்து அடி தொலைவில் எதிரே வருபவர்களைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மூடி  இருக்கும். வான்ஊர்தி ஓடுதளத்திலும் பனிமூட்டம் இருப்பதால், அடிக்கடி வான்ஊர்திகள் பறக்காமல் நின்று விடும்.

டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 15 வரை கடும் குளிர்காலம். குளிர் காலம் தொடங்கும்போது தில்லி மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். குளிருக்கு ஏற்றவாறு கனத்த உடைகளை அணிகின்றார்கள். குளிர்காலத்தில் தில்லிக்கு வருகின்ற தமிழர்கள் கட்டாயம் குளிருக்கு ஏற்ற உடை அணிந்து வர வேண்டும். பேண்ட், சர்ட், ஸ்வெட்டர் அணியலாம். குளிர்காலத்தில் நாள்தோறும் குளிக்க முடியாது. அது தேவையும் இல்லை. கோடைக் காலத்தில் ஒரே நாளில் பலமுறை குளிக்க வேண்டியது வரும். அப்படி வியர்த்துக் கொட்டும். அனல் பறக்கும்.


தில்லிக்கு வருகின்ற தமிழர்கள் ‘கரோல்பாக்’ சந்தையில் அமைந்து உள்ள அஜ்மல்கான் சாலைக்குக் கட்டாயம் வருவர். ஓரளவு தரமான பொருள்கள் மலிவான விலையில் சாலையின் இருபுறமும் குவிந்து கிடந்தன, இப்போது அந்த நிலைமை முற்றிலும் மாறி விட்டது. இப்போது நீங்கள் சரோஜினி நகர் சந்தைக்குத்தான் போக வேண்டும்.

தமிழர்கள் விருப்பம்போல் பொருள்களைப் பேரம் பேசி வாங்கிச் செல்வர்; நீங்களும் வாங்கலாம். பெரிய பேக் ஒன்றை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். மேற்கொண்டு வாங்குகின்ற சிறுசிறு பொருள்களை அதில் நிரப்பிக் கொள்ளுங்கள். சென்னைக்கு எடுத்து வருவதற்கு வசதியாக இருக்கும். முறையாகப் பராமரித்தால் நீண்டகாலம் உழைக்கும்.

கரோல்பாக் அஜ்மல்கான் சாலை, செங்கோட்டை அருகில் அமைந்து உள்ள சாந்தினி சௌக், தில்லியின் மையப் பகுதியில் கன்னாட் பிளேஸ் – கன்னாட் சர்க்கஸ் – பாலிகh பஜார் (தரையடிச் சந்தை), தெற்குத் தில்லியில் கான் மார்க்கெட், சரோஜினி நகர் மார்க்கெட் ஆகியவை தில்லியின் முதன்மையான சந்தைப் பகுதிகள் ஆகும்.

சென்னையில் வெளியாகின்ற அனைத்து நாள் இதழ்கள், வார இதழ்களும் கரோல்பாக் பகுதியில் கிடைக்கின்றன. ஆந்திரா பவன் மற்றும் சில இடங்களிலும் தமிழ் இதழ்கள், செய்தித்தாள்கள் கிடைக்கும். இப்போது, அச்சு இதழ்களுக்கான தேவை இல்லை.

25 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லி மீனாபாக்-கதவு எண் 18 வலம்புரி ஜான் எம்.பி. வீட்டில் நடைபெற்ற நடைபெற்ற தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகத்தின் தொடக்க காலக் கூட்டங்களில் பங்கு ஏற்றவர்களுள் நானும் ஒருவன்.

வடக்கு தில்லியில் செங்கோட்டைக்கு அருகில் ஜூம் ஆ மசூதி, சாந்தினி சௌக் சந்தை அமைந்து உள்ளன. இங்கே விலை மலிவான பொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கும். ‘தார்யாகஞ்ச்’ பகுதியில் புத்தகக் கடைகள் ஏராளம். இந்தியா முழுவதும் புகழ்பெற்ற பதிப்பகங்கள் இங்கே உள்ளன.

தில்லியில் போக்குவரத்து

தில்லியில் போக்குவரத்து வசதிகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. ஊர்திகளில் பெட்ரோல் பயன்பாடு பெரும் அளவில் தடை செய்யப்பட்டு விட்டது. எரிகாற்று மூலம் இயக்கப்படுகின்றன. மின்கலக் கார்களும் ஓடுகின்றன. எனவே கரிப்புகை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

2002 டிசம்பர் 24 முதல் தரைக்கு அடியில் தொடர்வண்டிகள் ஓடுகின்றன. புளு, பச்சை, மஞ்சள், கருநீலம், சிவப்பு  தடம் என 6 வழித்தடங்களில் ஏறத்தாழ 200 கிலோமீட்டர்கள் தொலைவிற்கு மெட்ரோ தொடர்வண்டிகள் ஓடுகின்றன. இப்போது ஒன்பது வழித்தடங்கள். மாநகரப் பகுதிகளில் 500 கிலோ மீட்டர் வரை ஓடுகின்றன.

புது தில்லி தொடரி நிலையத்தில் இருந்து வான் ஊர்தி நிலையத்திற்கு ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ஓடுகின்றது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 முதல் 50 லட்சம் மக்கள் பயணிக்கின்றார்கள்.

தில்லிப் பேருந்துகளில் மாதம் 800 ரூபாய் (1987 இல் 100 ரூபாய்) பாஸ் வாங்கி விட்டால், ஒரு மாதம் முழுவதும் அனைத்து வழித்தடங்களிலும் எந்தப் பேருந்திலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம். குளிர்பதனப் பேருந்துகளுக்கு மாதம் 1000 ரூபாய் கட்டணம். மூத்த குடிமக்களுக்கு மாதம் 250,350. பள்ளி மாணவர்களுக்கு மாதக் கட்டணம் ரூ.100 மட்டுமே. குளிர்பதனப் பேருந்துகளில் மாணவர்களுக்கு இடம் கிடையாது. இப்போது மாறி இருக்கலாம்.

பாஸ் இல்லாதவர்கள் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் ஒரு நாள் பாஸ் வாங்கிக் கொண்டு அந்த நாள் முழுவதும் ஏறி இறங்கலாம். எண்பதுகளின் பிற்பகுதியில், நான் தில்லியில் பணிபுரிந்த போது, சில நாள்களில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது பத்துப் பேருந்து களில்கூட ஏறி இறங்கி இருக்கின்றேன். சென்னைப் பேருந்துகளில் பாஸ் முறை நீண்டகாலத்திற்குப் பின்னரே அறிமுகம் ஆனது. அதுவும் டெல்லியைவிடக் கூடுதலான கட்டணத்தில்.

தில்லியில் ப்ளஸ்-மைனஸ் (+,-) பேருந்துகள் இயங்குகின்றன. ப்ளஸ் + பேருந்தில் ஏறினால் சாலையின் இடதுபுறமாக தில்லி முழுவதும் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு சுற்றுச் சுற்றி வரும். மைனஸ் (-) பேருந்துகள் சாலையின் மறுபுறத்தில் எதிர்ப்பக்கமாக ஒரு சுற்று செல்லும். சென்னை நகரப் பேருந்துகளில்  A 27 B என்றும், அதிலும் குறுக்காக ஒரு கோடு போட்டும் எண்களை எழுதி பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

சென்னையில் ஒருவர் பதினைந்து ஆண்டுகள் வசித்தாலும் எந்தப் பேருந்து எங்கே செல்கின்றது என்பதை நினைவில் கொள்வது கடினம். எனக்கு இன்னமும் மனதில் பதியவில்லை. ஆனால் தில்லிப் பேருந்துகளில் அத்தகைய குழப்பம் இல்லை. ஒன்று முதல் 1000 வரை எண்கள் மட்டுமே உள்ளன. ஆங்கில எழுத்துகள் கிடையாது. இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது  தில்லி சென்றாலும், தில்லிப் பேருந்துகளின் தடம் மற்றும் எண்களை நினைவில் கொள்வது எளிதாக இருக்கிறது. அதில் மாற்றம் எதுவும் இல்லை.

தொலைபேசி எண்கள் 28இல் தொடங்கினால் அது எழும்பூர் பகுதி, 26 என்று தொடங்கினால் அது அண்ணா நகர் பகுதி என்று ஒதுக்கப்பட்டு இருப்பதுபோல, அண்ணா நகர் பணிமனையில் இருந்து இயக்கப்படுகின்ற பேருந்துகள் 1 முதல் 100, அடையாறு பகுதியில் இருந்து இயக்கப்படுகின்ற பேருந்துகள் 101 முதல் 200 என்று ஒதுக்கி விடலாம். அப்போது, 100 முதல் 200 வரையிலும் உள்ள எந்தப் பேருந்தில் ஏறினாலும் அது அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதிகளுக்குச் செல்லும் என்பதை எளிதாக மனதில் கொள்ளலாம். குழப்பம் ஏற்படாது.

தில்லியின் இதயம்

இந்தியாவின் இதயமான தில்லியின் இதயம் போன்ற பகுதி. ‘கன்னாட் பிளேஸ் – கன்னாட் சர்க்கஸ்’ ஆகியவை ஆகும். இங்கே, வட்ட வடிவில் வரிசையாகக் கடைகளைக் கட்டி இருக்கின்றார்கள். நாடாளுமன்றக் கட்டடத்தில் இருப்பதுபோன்ற பிரமாண்டமான தூண்கள் அழகு சேர்க்கின்றன. உலகிலேயே இதேபோன்ற வட்ட வடிவிலான தில்லி, ஹாங்காங் நகரங்களில்தான் இருக்கின்றது. இரண்டையும் வடிவமைத்தவர் லார்டு கன்னாட் ஆவார். அவரது பெயரிலேயே இந்தப் பகுதி அழைக்கப்பட்டது. இப்போது இந்திரா சௌக், ராஜீவ் சௌக் எனப் பெயர் மாற்றி இருக்கின்றார்கள்.

இந்தப் பகுதியில்தான், இந்தியாவிலேயே முதலாவது திரை அரங்கம் – ‘ரீகல்’ – முதலாவது அஞ்சல் நிலையம் – ‘கோல் மார்க்கெட்’ – அஞ்சல் நிலையம் தரைக்கு அடியில் பாலிகா பசார் கடைகள் உள்ளன. தில்லிக்குச் செல்பவர்கள் தவறாமல் இந்தப்பகுதியில் ஒருமுறை நடந்து சுற்றி வர வேண்டும்.

பயணத் திட்டம்

தில்லியில் உள்ளூர்ச் சுற்றுலாப் பேருந்துகள் நிறைய உண்டு. கட்டணங்கள் சராசரியான அளவில் இருக்கின்றன. தில்லிக்கு அருகில் உள்ள சுற்றுலா மையங்கள் ஆக்ரா-தாஜ்மஹால், ஜெய்ப்பூர், சிம்லா, அம்ரித்சர் பொற்கோவில் ஆகியன. ஒருமுறை தில்லிக்கு வந்து செல்வதற்கு ஏழு நாள்கள் பயணத் திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள்.
தில்லி உள்ளூர் சுற்றுலா ஒரு நாள்

தாஜ்மஹால், சிக்கந்தரா, மதுரா கிருஷ்ணன் கோவில் சென்று வர ஒரு நாள்; ஜெய்பூர் சுற்றுலா ஒரு நாள் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்ப்பதற்கும், கரோல்பாக், சாந்தினி சௌக், சரோஜினி சந்தைப் பகுதிகளில் சுற்ற ஒரு ஒருநாள்; சிம்லா, அம்ரித்சர், ஹரித்துவார் சென்று வர இரண்டு நாள்கள் என உங்கள் விருப்பம்போல் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.


கோடை காலத்தில் வராதீர்கள். நமது தமிழ்நாட்டில்  குளிரை நீங்கள் உணர முடியாது. எனவே, குளிர் காலத்தில்  தில்லிக்கு வாருங்கள். எவ்வளவு சுற்றினாலும், நடந்தாலும் வியர்க்காது. தில்லி சுற்றுலாவிற்கு ஏற்ற காலம்….நவம்பர் முதல் மார்ச் வரைதான். அந்தக் காலகட்டத்தில் வாருங்கள். பார்த்து மகிழுங்கள்!
சென்னையில் இருந்து தில்லிக்கு வருகின்ற தொடரிப்பயணங்கள் குறித்து, இதே அளவில் நீண்ட கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன். இந்திய நாடாளுமன்றத்தி வரலாறு எழுதி இருக்கின்றேன். குமுதம் பிரசுரம் வெளியிட்டு இருக்கின்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Delhi trip tour to new delhi guide tamil news travel

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com