சமையலில் குறிப்பாக தென்னிந்தியர்களின் சமையலில் சட்னி இல்லாத நாளே இருக்காது. காலை மற்றும் இரவு நேர உணவாக இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் என எதுவாக இருந்தாலும் அதற்கு சாம்பாருடன கட்டாயம் ஒரு சட்னி இருக்கும். தக்காளி சட்னி, தேங்காய் சட்னியே திரும்பத் திரும்ப செய்வதை விட விதவிதமான சட்னிகளை செய்து அசத்தலாம். குறிப்பாக, அந்த சட்னியை ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்றி செய்து கொடுக்கலாம். ஆரோக்கியம் நிறைந்த 5 வகை சட்னிகளை பற்றிதான் இங்கு பார்க்கப் போகிறோம்.
சின்ன வெங்காய சட்னி:
ரத்த கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது சின்ன வெங்காய சட்னி. ரத்தக் குழாய்களில் உள்சுவர்களில் படிகிற கொழுப்பை நீக்கும். சின்ன வெங்காயத்தை அதிகம் வதக்காமல் ரொம்ப காரம் சேர்க்காமல் குறைந்த அளவு காரமும் குறைந்த அளவு உப்பும் சேர்த்து அந்த வெங்காய சட்னி சாப்பிட அறிவுறுத்துகிறார் மருத்துவர் சிவராமன்.
கொத்தமல்லி (அ) புதினா சட்னி:
உடலில் ஜீரண மண்டலத்தை சரிசெய்யக்கூடியவைதான் இந்த கொத்தமல்லி அல்லது புதினா சட்னி. வாயுப் பிரச்னை, வயிற்றுப் புண்களைக் கூட குணமாக்கும் புதினா சட்னி. புதினா சட்னியும் கொத்தமல்லி சட்னியும் மாறி மாறி சாப்பிடலாம். ஓரளவு வதக்கி விட்டு சட்னியாக அரைத்து சாதத்தில் கூட கலந்து சாப்பிடலாம்.
பிரண்டை சட்னி:
வஜ்ரவல்லி என மருத்துவ உலகில் அழைக்கப்படும்பிரண்டையில அதிகளவில் கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தக்கூடிய தன்மை உள்ளது. பிரண்டை கொடியின் கணுக்களை சுத்தம் பண்ணிட்டு ஆவியில் வேக வைத்து, வதக்கி அதனுடன் சிறிதளவு புளி, காரம் சேர்த்து அரைத்து சட்னியாக சாப்பிடலாம்.
தேங்காய் சட்னி:
தேங்காயில் இருக்கக் கூடிய மோனோ லாரி என்ற பொருள், தாய்ப்பால் அளவுக்கு நோய் எதிர்ப்பாற்றலை கொண்டது. தேங்காய் சட்னியை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம் கிடைக்கும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
நிலக்கடலை சட்னி:
சிறுதானிய தோசைகளுக்கு சரியான பொருத்தமாக இருக்கும் நிலக்கடலை சட்னி. நிலக்கடலையை நன்றாக வதக்கி அதனுடன் தேவையான அளவுக்கு தேங்காய், மிளகாய் போட்டு அரைச்சு சட்னி எடுக்க வேண்டும். இயல்பாகவே நிலக்கடலையில் உடலுக்கு நல்லது தரக்கூடிய இரும்பு சத்து, புரதச்சத்து இருப்பதால், வாரத்திற்கு 2 நாள் சாப்பிடலாம்.