‘குடும்பம், குழந்தை உண்டு; தமிழன் என்கிற மான உணர்ச்சியும் உண்டு’: பாவாணர்

தேவநேயப் பாவாணர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. என்றும் நினைத்து போற்றத்தக்கது.

By: Updated: February 7, 2020, 03:00:17 PM

தேவநேயப் பாவாணரின் பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 7). அதையொட்டி இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

அ.வியனரசு

தேவ நேயப் பாவாணார்… தமிழ் உணர்வாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு பெயர்! 1916-ல் மறைமலை அடிகள் முன்னெடுத்த தனித் தமிழ் இயக்கத்தை பின்னாளில் தலைமை நாங்கி நடத்தியவர் அய்யா தேவநேயப் பாவாணர்.

நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழ் அறிஞர். 27 மொழிகளில் புலமை பெற்றவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவரது மாணவர்களாக இருந்தவர்கள்தான் அய்யா பழ.நெடுமாறன், மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், தமிழறிஞர் க.ப.அறவாணன், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், ‘உலகின் முதல் மொழி தமிழ்’ என ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்து பேசினார் பாவாணர். அப்போது அங்கு பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் என்ற அடிப்படையில் வந்திருந்த வங்க அறிஞர் ஒருவர் அதை மறுத்தார். ‘வட மொழிதான் முதல் மொழி’ என்பது அவர் கூற்று.

தேவநேயப் பாவாணர் அதை ஏற்கவில்லை. பல்வேறு தரவுகளுடன், தமிழே முதல் மொழி என நிறுவுகிறார். ஆனாலும் பல்கலைக்கழக முக்கிய நிர்வாகிகளே, இவரை அடக்கி வாசிக்கச் சொல்கிறார்கள். ‘வேலையை விட வேண்டியிருக்கும். குடும்பம், குழந்தை இருக்கிறது’ என கூறுகிறார்கள். அதற்குப் பாவாணர், ‘குடும்பம், குழந்தை இருக்கிறது. கூடவே தமிழன் என்கிற மான உணர்ச்சியும் இருக்கிறது’ என்கிறார். அவரது வேலை பறிபோகிறது.

பிறகு தமிழறிஞர்கள் உதவியுடன் சேலத்தில் ஒரு கல்லூரியில் பணியில் சேருகிறார். அங்கு லேனா தமிழ் வாணன், பாவலேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் இவரது மாணவர்கள். பெருஞ்சித்திரனாரின் தென் மொழி இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார் பாவாணர்.

1969-ல் தமிழறிஞர்களை திரட்டி உலகத் தமிழ் கழகம் என்கிற அமைப்பைத் தொடங்கினார். அதை அரசியல் அமைப்பாக இல்லாமல், முழுக்க மொழி ஆய்வு தொடர்பான இயக்கமாக நடத்தினார். மொழி எங்கு தோன்றியது? அதன் மூலம் எது? என்கிற ஆய்வை நடத்த அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தார்.

முதல் முறை கலைஞர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அதை ஏற்று, அதற்கு திட்ட இயக்குனராக பாவாணரையே நியமித்தார். எனினும் ஆய்வுக்கு உரிய வசதிகள் செய்யப்படவில்லை. பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஆய்வுக்கான சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

1981-ல் மதுரை உலகத் தமிழ் மாநாட்டில், ‘மாந்தர் பிறந்தது குமரிக் கண்டமே’ என என்கிற தலைப்பில் உரையாற்றினார். உலக அறிஞர்கள் பலரது குறிப்புகளுடன் உயிரினம் முதலில் தோன்றிய இடமே குமரிக் கண்டம்தான் என நிறுவினார். மனிதர்கள் முதலில் தோன்றிய இடமும் அதுவே, எனவே மொழி தோன்றிய இடமும் அதுவே என குறிப்பிட்டார்.

மிக ஆழமான அந்த உரை நிகழ்த்தப்பட்ட வேளையில், முதல்வர் எம்.ஜி.ஆர். மேடை நோக்கி வந்தார். அப்போது உரைக்கு குறுக்கீடாக கூட்டத்தில் எழுந்த சலசலப்பு பாவாணரை வருத்தப்பட வைத்தது. உயிராக மதித்த தமிழை உலகின் மூத்த மொழி என அழுத்தமாக பேசிய அந்த மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார் பாவாணர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை எம்.ஜி.ஆர்., காளிமுத்து ஆகியோர் சென்று பார்த்தனர். மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

தேவநேயப் பாவாணர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. என்றும் நினைத்து போற்றத்தக்கது.

(கட்டுரையாளர் அ.வியனரசு, தமிழ்த் தேசிய உணர்வாளர். தமிழர் கொற்றம் என்கிற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்)

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Devaneya pavanar birth annivesary

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X