திருப்பதியில் எப்போதும் தரிசனம் கூட்ட நெரிசலுடனே இருந்த நிலையில், வியாழக்கிழமை திருப்பதியில் பக்தர்கள் நெரிசல் இல்லாத சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதற்கு காரணம், வெயிலின் வெப்பம் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்ததால், ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கோடை வெயில் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் சுட்டெரித்து வருகிறது. அந்திராவில் வெயிலின் வெப்பம் 105 முதல் 107 டிகிரி வரை பதிவாகி வருகிறது. இதனால், மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர்.
அதே போல, உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வெயில் காரணமாக அவதி அடைந்து வருகின்றனர். வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
இந்நிலையில், திருப்பதியில் வியாழக்கிழமை (26.04.2024) தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால், ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் 1½ மணி நேரத்தில் தரிசனம் முடித்து வெளியே வந்தனர். மிகவும் எளிதாக நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதியில் புதன்கிழமை 64,080 பேர் தரிசனம் செய்தனர். 25,773 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“