Immunity Boosting Foods - Sylendra Babu IPS Tips: உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தலை விரித்து ஆடுகிறது. இந்த சூழலை கட்டுப்படுத்த, மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கழிந்து விட்ட நிலையில் இந்த ஊரடங்கு முடிவுக்கு வருவதற்கு இன்னும் 10 நாட்கள் மீதமிருக்கின்றன. இதற்கிடையே தமிழக தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு, உடற்பயிற்சி செய்வதற்கான எளிய வழிமுறைகளை தனது ட்விட்டரில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவிற்கு ட்விட்டர் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக அவர் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்கிறார் என்ற வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.
காலை டிபன் என்னதான் சாப்பிடுவது? எனது காலை உணவு இதுதான். *தனித்திருப்போம்; விழித்திருப்போம்*. What to eat for breakfast? Well this is what I eat in the morning. STAY HOME; STAY SAFE. pic.twitter.com/aBUjQzLEES
— Sylendra Babu (@SylendraBabuIPS) April 3, 2020
”என்ன பிரேக் பாஸ்ட் சாப்பிடலாம்? என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். நான் என்ன சாப்பிடுகிறேன், என்பதை சொல்கிறேன். கொஞ்சம் ஃப்ரூட் சாலட், அதில் கிர்ணி பழமும், ஆப்பிளும் உள்ளது. முளைகட்டிய தானியங்கள், சில சமயங்களில் கொஞ்சம் நட்ஸ், இத்துடன் கொஞ்சம் வேகவைத்த கொண்டைக்கடலை, மூன்று வேகவைத்த முட்டையுடன், ஒரு கப் பால். இந்தக் கொரோனா சமயத்தில், சிக்கன், முட்டை, எல்லாம் சாப்பிடக்கூடாது, என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இவற்றை கட்டாயம் சாப்பிடலாம் என அறிஞர்கள் கூறுகிறார்கள். காரணம் இந்த சமயத்தில் நமக்கு நிறைய புரோட்டீனும், நோய் எதிர்ப்பு சக்தியும் தேவைப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, புரோட்டின் தேவை. ஆகையால் அசைவம் சாப்பிடுபவர்கள் நிச்சயம் முட்டை, சிக்கனை சாப்பிடலாம். இவற்றால் எந்த சைட் எஃபெக்ட்டும் கிடையாது. 20 வருடமாக நான் இதைத்தான் சாப்பிடுகிறேன்” பிரேக் பாஸ்ட் வீடியோவில் என்று கூறியுள்ளார்.
மதிய உணவு கொஞ்சம் இலகுவாக இருக்கணும். ஆனால் காய்கறி நிறய வேணும். Lunch should be light in rice, but should have lot of vegetables. pic.twitter.com/s6Rbkw9IjX
— Sylendra Babu (@SylendraBabuIPS) April 4, 2020
அடுத்ததாக, மதிய உணவை பற்றி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ், அதில் தான் உண்ணும் உணவுகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். ”உணவு என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். ஒரு மனிதனுக்கு கம்மியான கலோரி தான் தேவைப்படுகிறது. நான் சாப்பிடுவது கொஞ்சம் சாதம், மீன் குழம்பு, வீட்டில் வளர்ந்த கீரை, அவியல், கொஞ்சம் தயிர், ஊறுகாய். இவற்றில் எந்த அளவுக்கு சாதம் சாப்பிடுகிறோமோ, அந்த அளவுக்கு காய்கறியை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் மீன் சாப்பிடுகிறேன், அசைவம் சாப்பிடாதவர்கள் புரோட்டின் நிறைந்த பருப்பு வகைகளை நிறைய சாப்பிடலாம். காய்கறிகளையும் நிறைய எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சாதத்தின் அளவை மட்டும் குறைத்துக் கொண்டால் நல்லது. காரணம் இதனால் உடலில் எடை கூடும். சர்க்கரை நோய் எளிதில் வரும்” என்று கூறியுள்ளார்.
இரவு உணவு குறைவாக போதும். சீசனில் கிடைக்கும் பழம் சாப்பிட வேண்டும் . Night food is light, should include seasons fruit, and some protein. pic.twitter.com/o0HGqPQVej
— Sylendra Babu (@SylendraBabuIPS) April 5, 2020
இரவு உணவை பற்றி குறிப்பிட்டுள்ள சைலேந்திரபாபு, ”இரவு உணவு காலை உணவையும் மதிய உணவையும் அடிப்படையாகக் கொண்டது. ஒருவேளை இவ்விரு வேலைகளிலும் நன்றாக சாப்பிட்டு இருந்தால், இரவு கொஞ்சம் சாலட் மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் அந்தந்த சீசனில் என்ன பழங்கள் கிடைக்கிறதோ, அதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது எந்த பழமாக இருந்தாலும் சரி. அதோடு வேகவைத்த பாசிப்பயறு, வறுத்த மீன், ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருந்தால், வறுத்த மீனுக்கு பதிலாக வேக வைத்த மீனை எடுத்துக் கொள்ளலாம். நமக்கு ஒரு நாளைக்கு 1800 கலோரி போதுமானது. கொஞ்சம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு 2000 கலோரி போதும். அதற்கு மேல் போனால் உடல் எடை கூடும். ஆகையால் சாப்பிடும்போது உணவை பார்த்து சாப்பிடவும். அதுமட்டுமில்லாமல் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை, ஆகையால் நாம் அளவாக சாப்பிட்டால் அந்த உணவு, மற்றவர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். சைலேந்திரபாபு ஐபிஎஸ்-ன் இந்த வீடியோக்கள் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.