இனி வரும் நாட்களில் தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. இதன்பேரில், தேவஸ்தான நிர்வாகம் சார்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 7,500 தங்கும் அறைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த அறைகள் அனைத்தும் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பருகின்றன.
ஆனால், இடைத்தரகர்கள் மூலமாக அறைகள் ஒதுக்கப்படுவதில் மோசடி நடைபெறுவதாக அண்மை காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தேவஸ்தான நிர்வாகம் தரப்பில் இருந்து புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இனி வரும் நாட்களில் அறைகளை பயன்படுத்த வேண்டுமானால் ஆதார் அட்டையுடன் சேர்த்து தரிசன டிக்கெட்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை மூலம் தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக அறையை காலி செய்ய வேண்டும் எனவும், அதன் பின்னர் மற்ற பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த நடவடிக்கையின் வாயிலாக தேவஸ்தானத்தின் வருமானம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.