Why not re-use syringe of insulin | நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பலர், தங்கள் இன்சுலின் அளவை நிர்வகிக்க பெரும்பாலும் ஒரு நாளைக்கு பல முறை இன்சுலின் ஊசிகளைப் பயன்படுத்துகின்றனர்.
டைப் 1 நீரிழிவு நோயில், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடலால் தானாக இன்சுலினை உருவாக்க முடியாது. அதேபோல டைப் 2 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினை திறமையாகப் பயன்படுத்தவோ அல்லது போதுமான அளவு உற்பத்தி செய்யவோ முடியாது. இது இன்சுலின் ஊசியைப் பயன்படுத்தத் தூண்டுகிறது.
Healthline.com படி, ஊசி, பேனா அல்லது பம்ப் என வெவ்வேறு வழிகளில் இன்சுலின் கொடுக்கப்படலாம். இது பொதுவாக ஒருவரின் இன்சுலின் டோஸ் மற்றும் செலவுக் காரணிகளைப் பொறுத்து மருத்துவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.
இருப்பினும் பல சமயங்களில், இந்த ஊசிகள் பல வாரங்கள் அல்லது மாதக்கணக்கில் மக்களால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஊசிகள் ஒருவரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டாலும், மீண்டும் பயன்படுத்தலாமா?
உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மருத்துவர் ஷுச்சின் பஜாஜ் கருத்துப்படி, இன்சுலின் பேனா ஊசிகளை மீண்டும் பயன்படுத்துவதால் ஊசியின் மீது பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கும், இது ஊசி போடும்போது வலியை ஏற்படுத்தும்.
இது, ஊசியைச் செருகும்போது அல்லது திரும்பப் எடுக்கும்போது காயம் அல்லது இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும், தோல் கடினமாகும். மேலும் ஊசியின் மிக நுண்ணிய முனை உடைந்துவிடும் அபாயம் அதிகரிக்கும்.
அதற்கும் மேலாக, இன்சுலின் ஊசியை மீண்டும் பயன்படுத்துவது குறிப்பாக பலவீனமான நோயாளிகளில், கடுமையான தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
2017- ஃபோரம் ஃபார் இன்ஜெக்ஷன் டெக்னிக் மற்றும் தெரபி நிபுணர் பரிந்துரைகளுக்கான மன்றத்தில் (Fitter) இந்தியாவில், ஊசியின் மறு பயன்பாடு "தொந்தரவு விளைவிக்கக்கூடியது" என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
42 நாடுகளில் 400 க்கும் மேற்பட்ட மையங்களில் இருந்து 14,000 நோயாளிகளிடையே நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வின்படி, மொத்தம் 55.8 சதவீத நோயாளிகள், இன்சுலின் பயன்பாட்டிற்காக தங்கள் ஊசிகளை மீண்டும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் செலவுகளைச் சேமிக்க அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். சுமார் 40 சதவீதம் பேர் தங்கள் பேனா ஊசிகளை ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தியதாகவும் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
சிறிய ஊசிகள் (தற்போது பேனாக்களில் 4 மிமீ மற்றும் ஊசிகளில் 6 மிமீ) பாதுகாப்பானவை, பயனுள்ளவை மற்றும் விலை குறைவு. இது அனைத்து நோயாளி வகைகளிலும், முதல் விருப்பமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.
தசையில் இன்சுலின் ஊசி போடுவது இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த சிறிய ஊசிகள் தசையில் செலுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பை அளிக்கும், என கொல்கத்தாவின் IPGMER மற்றும் SSKM மருத்துவமனையின், நாளமில்லாச் சுரப்பியின் பேராசிரியர் சுபங்கர் சவுத்ரி மன்றத்தில் தெரிவித்தார்.
கிருமி நீக்கம் செய்யப்பட்ட இன்சுலின் ஊசிகளை ஒரு நபர் மீண்டும் கிருமி நீக்கம் செய்யக்கூடாது, ஏனெனில் அது ஆபத்தானது மற்றும் ஊசி மூலம் புண் ஏற்படலாம் என்று மருத்துவர் அனில் போராஸ்கர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் கூறினார்.
இன்சுலின் ஊசிகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், பயன்படுத்திய பின் அதை அப்புறப்படுத்த வேண்டும்.
கூடுதலாக, ஊசிகளை மீண்டும் பயன்படுத்துவது விரும்பத்தகாதது, ஏனெனில் அவை மழுங்கி மேலும் காயப்படுத்துகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு முறை மட்டுமே ஊசி போட்டாலும், சிரிஞ்ச்கள் மற்றும் ஊசிகள் தொடர்ந்து மாற்றப்பட வேண்டும். இரண்டு வெவ்வேறு பிராண்டுகளின் இன்ஜெக்ஷனுக்கு ஊசிகளை மாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, என்று அவர் கூறினார்.
மருத்துவர் போராஸ்கர், ஒரே ஊசியை தொடர்ந்து பயன்படுத்துவது உடல்நலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று எச்சரித்தார்.
மேலும், ஒரே ஊசியை இரண்டு வெவ்வேறு நபர்களுக்கு ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம், இதனால் தொற்று பரவக்கூடும்.
ஒரு மழுங்கிய ஊசி ஹீமாடோமாவை (hematoma) ஏற்படுத்தும், எனவே நீரிழிவு நோயாளிகள் ஒரு முறைக்கு மேல் ஊசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், என்று அவர் கூறினார்.
ஊசிகள் மற்றும் லான்செட்டுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது எப்படி?
யுனைடெட் ஸ்டேட்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) படி
நீங்கள் இன்சுலின் ஊசி செலுத்திக் கொண்ட பிறகு, ஊசிகளை ஒரு வலுவான பிளாஸ்டிக் பை அல்லது மெட்டல் கன்டெய்னரில் போட்டு அதை இறுக்கமாக மூடி வைக்கவும்
ஊசியை வளைக்கவோ, உடைக்கவோ முயற்சிக்காதீர்கள்... கன்டெய்னர் நிரம்பியதும், கனமான டேப்பால் இறுக்கமாக சுற்றி, அதை குப்பையில் போடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“