மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் மேடையிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. நீரிழிவு நோயாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் அனைவருக்கும் அவசியம் சில அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
புதுதில்லியில் உள்ள Fortis-CDOC நீரிழிவு நோய்க்கான சிறப்பு மையத்தின் தலைவர் டாக்டர் அனூப் மிஸ்ரா கூறும்போது, நீரிழிவு நோயாளிகளுக்கு குறுகிய காலத்தில் கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம் மற்றும் நோயாளிக்கு உடனடி மருத்துவ கவனிப்பு வழங்கப்படாவிட்டால் உடலைக் கடுமையாக காயப்படுத்தலாம் அல்லது மரணம் ஏற்படலாம்.
இவற்றில், மிகவும் பொதுவானது hypoglycaemia அல்லது ரத்த சர்க்கரை அளவு குறைவு. இது ஆபத்தானது மற்றும் எல்லா நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும். தீவிரமான ரத்த சர்க்கரை குறைவு, இதயப் பிரச்சினைகளைத் தூண்டும்
நோயாளியை மீட்க உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
3-5 குளுக்கோஸ் மாத்திரைகள், 2-4 டீஸ்பூன் தேன்/சர்க்கரை, 1-2 கப் பழச்சாறு, 5-6 சாக்லேட் அல்லது ஒரு சில இனிப்பு துண்டுகள் போன்ற எளிய வடிவிலான சர்க்கரையை உடனடியாக உட்கொள்ள வேண்டும்.
10-15 நிமிடங்களுக்குப் பிறகு, இரத்த சர்க்கரை அளவு இன்னும் பாதுகாப்பான அளவை எட்டவில்லை என்றால் (அதாவது 100 mg/dl க்கு மேல்) நோயாளி அதிக குளுக்கோஸ் மற்றும் சாக்லேட் சாப்பிட வேண்டும். பாதுகாப்பாக இருக்க, பாலுடன் இரண்டு ரொட்டித் துண்டுகளைச் சேர்த்து சாப்பிடலாம் அல்லது நோயாளியை இந்த நேரத்தில் அடுத்த உணவை எடுத்துக்கொள்ளச் சொல்லவும்.
நோயாளியால் விழுங்க முடியாமலும், சுயநினைவு இல்லாமலும் இருந்தால், தாமதிக்காமல் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவும். அங்கு பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரால், நரம்பு வழியாக குளுக்கோஸ் செலுத்தப்பட வேண்டும். குளுகோகன் ஊசி கொடுக்கப்பட வேண்டும், இது ஒரு இயற்கை ஹார்மோன், இது கல்லீரல் அல்லது தசைகளுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது, இது சேமிக்கப்பட்ட சர்க்கரையை இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது.
தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?
அடிக்கடி இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டால், நோயாளி இரத்த சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும் மற்றும் மருந்து அல்லது இன்சுலின் அளவை சரிசெய்ய மருத்துவரை அணுக வேண்டும்.
இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வுகள், இரவு உணவிற்கும் காலை உணவுக்கும் இடைப்பட்ட நீண்ட உணவு இடைவேளையின் போது பெரும்பாலும் இரவில் ஏற்படுவதால், நோயாளி தனது இரத்த சர்க்கரை அளவை அதிகாலை 3 மணிக்கு சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது, குறிப்பாக இரவு மருந்துகளை உட்கொள்பவர்கள்.
இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான காரணங்கள் என்ன?
1) தாமதமாக, கொஞ்சமாக சாப்பிடுவது அல்லது உணவைத் தவிர்ப்பது
2) இன்சுலின் அல்லது ஓரல் ஆன்டி டயாபட்டிக் மருந்துகளின் அதிகப்படியான அளவு
3) வழக்கமான உடற்பயிற்சியை விட அதிகம் செய்வது
4) அதிகப்படியான மது அருந்துதல்
5) சிறுநீரக நோயின் ஆரம்பம்
6) வாந்தி, வயிற்றுப்போக்கு
7) காசநோய், புற்றுநோய் மற்றும் கல்லீரல் நிலைமைகள் போன்ற நீண்டகால பலவீனப்படுத்தும் நோய்கள்
இரத்தச் சர்க்கரை குறைவு அறிகுறிகள் என்ன?
1) வியர்த்தல்
2) கைகால் நடுக்கம்
3) தலைச்சுற்றல் மற்றும் குமட்டல்
4) பலவீனம்
5) படபடப்பு
6) தலைவலி
7) குழப்பம், திசைதிருப்பல், வலிப்பு மற்றும் சுயநினைவின்மை
8) இரவு நேர இரத்தச் சர்க்கரைக் குறைவு, இரவில் வியர்வை, தலைவலி, அமைதியற்ற தூக்கம் மற்றும் கெட்ட கனவுகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
9) சில நேரங்களில் ரத்த சர்க்கரை குறைவு எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது, குறிப்பாக நரம்பு பாதிப்புடன் கூடிய நீண்டகால நீரிழிவு நோயில் என்று டாக்டர் அனூப் மிஸ்ரா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“