நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, காலை உணவுக்குப் பின் செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்களை இப்போது பார்ப்போம்.
நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது தங்கள் ரத்த சர்க்கரை அளவை கவனமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக காலை உணவுக்குப் பிறகு சர்க்கரை அளவு கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது தலை பாரமாக இருக்கும் அல்லது எதையும் தெளிவாக யோசிக்க முடியாமல் போகலாம். உங்கள் உடலின் சக்தியும் குறைவாக இருக்கும். பதட்டமாக உணர்வீர்கள். இதுவே சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் மயக்கம் ஏற்படும். நீண்டகால நோக்கில் இது இதய நோய்களையும் பக்கவாதம், சிறுநீரக நோய்கள் வரும் அபாயத்தையும் அதிகரிக்கும்.
எனவே ரத்த சர்க்கரை அளவை கவனமாக கண்காணிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. உணவிற்குப் பின் நாம் பின்பற்றக்கூடிய சில பழக்கங்கள் மூலம் நமது சர்க்கரை அளவு கூடவோ அல்லது குறையவோ செய்யும். எனவே கீழ்கண்ட 3 முக்கிய விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
காலை உணவு முக்கியம்
உடலில் உடனடியாக இரத்தச் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்க வேண்டுமென்றால் குறைவான க்ளைசைமிக் குறியீடு உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். முழு தானியம், மாவுச்சத்து இல்லாத உணவுகள், புரதச்சத்து ஆகியவற்றை காலை உணவுக்குப் பிந்தைய உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். அதிக கார்போஹைடரேட் நிறைந்த காலை உணவிற்கு பதிலாக புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சிறிதளவு கார்போஹைடரேட் ஆகியவை கலந்த சரிவிகித உணவை சாப்பிடுங்கள். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதோடு காலை முழுவதுக்கும் சக்தியை உடலுக்கு தருகிறது.
கோடை காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். அதனால் நிறைய தண்ணீர் பருகுங்கள். குறைவான கலோரிகள் கொண்ட மூலிகை டீ பருகுங்கள். இவை அனைத்தும் உடலில் நீர்ச்சத்தை குறையவிடாமல் பார்த்துக்கொள்ளும்.
உடற்பயிற்சி
வெயில் அதிகம் இல்லாத காலை உணவிற்கு பிந்தைய நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். அது நடைபயிற்சியாகவோ, ஜாக்கிங் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் பயிற்சிகள் உங்களை சுறுசுறுப்பாக இருக்க செய்வதோடு கோடைகாலத்தில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும்.
சர்க்கரை அளவை கண்காணித்தல்
நாள் முழுவதும், குறிப்பாக சாப்பாட்டிற்குப் பின் உங்கள் ரத்த சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை தீவிரமாக கண்காணியுங்கள். அடிக்கடி பரிசோதனை செய்வதால் அதற்கேற்ற வகையில் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும். இவற்றைக் கடைபிடிப்பதன் மூலம் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“