சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு காளான் நல்ல ஒரு உணவாகும். அதனுடைய வேறு பயன்களையும் தெரிந்துகொள்ளலாமே!
உடலில் அழற்சி அதிகரிக்கும்போது அது நீரிழிவு மற்றும் இதயநோய்கள் உருவாகக் காரணமாக மாறுகிறது. அளவுக்கதிகமான அழற்சியானது உடம்பில் இன்சுலினின் செயல்பாட்ட்டில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இதனால் புதிய பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டியதாகிறது. இதனால்தான் உணவுமுறையில் அழற்சியை உண்டாக்காத உணவுவகைகள் இன்றியமையாதவை என்கிறார்கள், மருத்துவர்கள். அப்படியான உணவுவகைகளில் ஒன்றுதான் காளான்.
காளான்கள் மாவுத்தன்மை அல்லாத ஒரு காய்கறி மட்டுமன்றி, எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துடையதும் ஆகும். இது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு அல்லது சர்க்கரை நோயானது, இன்சுலினுக்கு எதிர்வினை புரியாதபடி உடம்பை மாற்றச்செய்துவிடுகிற நீண்டகாலத் தன்மை கொண்டது என்பதை நினைத்துப்பார்த்தால், இதன் சாதகத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.
இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்!
மைய அரசின் நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆயுஷ் துறை மேற்கொண்ட ஓர் ஆய்வில், சிப்பிக்காளான் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு, கொழுமியங்கள் அதாவது கொழுப்பில் கரையக்கூடிய உயிர்ம மூலக்கூறுகளின் அளவு, சர்க்கரைநோய் எதிர்ப்புத்தன்மை ஆகியவற்றில் பலன் தரத்தக்கது எனக் கண்டறியப்பட்டது. காளான் பிஸ்கட்டுகளும் சிறப்பான முறையில் பயனளிப்பவை என்கிறது அந்த ஆய்வு.
மேலும், வெள்ளைக்காளானை தினமும் உட்கொள்வதால் குடல்நாளத்தில் நுண்ணுயிரியத்தை மேம்படுத்துவதில் ஒரு தூண்டுகோலாகச் செயல்படுகிறது; இதன் மூலம் கல்லீரலில் குளுக்கோசின் அளவை முறைப்படுத்துவதை இன்னும் மேம்படுத்துகிறது என்று ஆரோக்கியமான உணவுகள் ஆய்விதழ் வெளியிட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மிகை இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆபத்துக் குறைப்புக்கும் குறைந்த மாவுச்சத்துடைய
காய்கறிகளுக்கும் இடையிலான தொடர்பை, தொடர்ச்சியாக பதிவுசெய்து வருகின்றன. கார்போஹைட்ரேட் மிகையாக உள்ள மாவுச்சத்துக் காய்கறிகளைப் போல அல்லாமல், மாவுச்சத்தற்ற காய்கறிகள் மிகக் குறைவான அளவு கார்போஹைட்ரேட்டையே கொண்டுள்ளன. சர்க்கரைநோயாளிகளுக்கான ஊட்டமுறையில் பாதியளவுக்கு மாவுச்சத்தற்ற காய்கறிகளே இடம்பெற்றுள்ளன என்கிறது அமெரிக்க நீரிழிவுநோய் கழகம்.
* காளான்கள் குறைவான இரத்த சர்க்கரை அளவு கொண்டவை; அதாவது, அவற்றில் இரத்தசர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கச்செய்யும் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருக்கிறது. பிரட், பாஸ்தா போன்ற மிகை கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை ஒப்பிட இது குறிப்பிடத்தக்க அளவு குறைவானது ஆகும்.
* இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவது மட்டுமன்றி, உடல் எடையைக் குறைப்பதற்கும் காளான் நன்றாகப் பயனளிக்கிறது. குறைந்த அளவு கலோரி ஆற்றலை அளிக்கக்கூடியதாகவும் அதிகமான நீர்ச்சத்தையும் நார்ச்சத்தையும் கொண்டதாகவும் இருப்பதால், காளான்களை ஒரு முறை சாப்பிட்டுவிட்டால் நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதன் மூலம், கண்டபடி சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க முடியும்.
* மேலும், காளான்களில் வைட்டமின் ஏ, சி மற்றும் வைட்டமின் கே ஆகிய உயிர்ச்சத்துகள் உள்ளன.
* உணவில் அதிக அளவு காளான்களைச் சேர்த்துக்கொள்வதால், உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கவும் முடியும்.
தமிழில்: இர.இரா.தமிழ்க்கனல்