இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கும் போது, நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி தங்கள் விரல்களின் நுனிப்பகுதியை காயப்படுத்துகின்றனர். ஆனால், பலரும் அதனை தவறாக செய்யும் போது தேவையற்ற வலி மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Diabetics, here’s how to check blood sugar without hurting the tip of your fingers
ஃபுட்ஃபார்மர் என்று அழைக்கப்படும் ரேவந்த் ஹிமத்சிங்கா உடனான சமீபத்திய நேர்காணலில் மருத்துவர் ரோஷானி சங்கனி, நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரையை பரிசோதிக்கும்போது செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, அவர்கள் விரல்களின் மிகவும் உணர்திறன் வாய்ந்த பாகங்களை குத்துவது எனக் கூறினார். மேலும், இவை அதிகமான வலியை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "இவ்வாறு விரலில் குத்துவதை மக்கள் விரும்பவில்லை. ஏனென்றால், சரியாக குத்துவதற்கு அவர்களுக்கு தெரிவதில்லை" என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் தகவல்களை பெறுவதற்கு சர்க்கரை நோய் தொடர்பாக நிபுணுவத்துவம் வாய்ந்த கனிக்கா மல்ஹோத்ராவிடம், indianexpress.com விவரங்களை கேட்டறிந்தது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் விரல் நுனியில் குத்துவதை தவிர்க்க வேண்டுமா? இரத்த சர்க்கரை பரிசோதனையின் போது மக்கள் பொதுவாக என்ன தவறுகளை செய்கிறார்கள்?
"இரத்த சர்க்கரை பரிசோதனைக்காக விரல் நுனியில் குத்துவதை நான் பரிந்துரைக்க மாட்டேன். விரல்களின் பக்கவாட்டில் குறைவான நரம்பு நுனிகள் மற்றும் மேற்பரப்பிற்கு அருகில் அதிக இரத்த நாளங்கள் உள்ளன. இதனால், இப்பகுதியில் குத்தும் போது வலியும் குறைவாக இருக்கும், போதுமான அளவு இரத்தமும் கிடைக்கும்" என கனிக்கா மல்ஹோத்ரா வலியுறுத்துகிறார்.
"இரத்தத்தை எடுப்பதற்காக ஒரே உபகரணத்தை மீண்டும், மீண்டும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அந்த உபகரணமும் பழையதாகி இருக்கும். அதன் மூலம் வலியும் அதிகமாக வரும். ஆல்கஹால் அடிப்படையிலான சனிடசைர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை சருமத்தை வறட்சியாக்கி கூடுதல் வலியை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக சோப் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி கழுவலாம். ஒரே விரலில் அடிக்கடி இரத்தம் எடுப்பது வலியை அதிகப்படுத்தும். இரத்தம் எடுக்க பயன்படும் உபகரணம் சரியான ஆழத்தில் செலுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இரத்தம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால், உங்கள் கையை இடுப்புக்கு கீழ் இறக்கி விரலின் அடிப்பகுதியில் இருந்து மெலிதாக தேய்க்கலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.
விரல்களை காயப்படுத்தாமல் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதிக்க மாற்று வழிகள் இருக்கிறதா?
"ஆம், இதற்கென பிரத்தியேகமான மாற்று வழிகள் மற்றும் உபகரணங்கள் இருக்கின்றன. சில இரத்த குளுக்கோஸ் மீட்டர்களுக்கு குறைவான அளவு இரத்த மாதிரிகள் இருந்தால் போதுமானது. இது, விரல்களில் ஆழமாக குத்துவதை தவிர்க்க உதவுகிறது. Alternate site testing என்பதன் மூலம் முழங்கை அல்லது தொடைப் பகுதியில் இருந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். இவை வலியை குறைக்கின்றன. ஆனால், இதற்காக அங்கீகரிக்கப்பட்ட மீட்டர்களை தான் பயன்படுத்த வேண்டும். Continuous glucose monitoring என்கிற முறையும் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணிக்க சருமத்தின் கீழ்ப்பகுதியில் சென்சார் பொருத்தப்படும். இதன் மூலம் விரல்களை குத்தி இரத்தம் எடுப்பது தவிர்க்கப்படும். ஆனால், இந்த முறை எல்லோருக்கும் ஏற்றதாக இருக்காது" என மல்ஹோத்ரா விவரித்துள்ளார்.