ரோஜாப் பூவை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக, நம் வீட்டு தோட்டத்தில் இருக்கும் ரோஜாச் செடியில் பூக்கள் அதிகமாக பூத்துக் குலுங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். பெரிய அளவில் தோட்டம் அமைக்க இட வசதி இல்லாதவர்கள் கூட, ஒரே ஒரு ரோஜாச் செடியாவது வளர்க்க வேண்டும் என விரும்புவார்கள்.
ஆனால், அவ்வாறு வளர்க்கும் ரோஜாச் செடிகளில் பூக்கள் சரியாக பூக்கவில்லை என்ற கவலை நிறைய பேரிடம் இருக்கிறது. இதற்காக, பல உரங்களை தயாரித்து பயன்படுத்தினாலும் சரியான வளர்ச்சி இல்லை என கருதுபவர்களும் ஏராளம். இன்னும் சிலருக்கு உரங்களை பிரத்தியேகமாக தயாரித்து பயன்படுத்த நேரம் இல்லாமல் இருக்கும். எனினும், ரோஜாச் செடி வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் காணப்படும்.
இதனடிப்படையில், மெனக்கெடல் இல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜாச் செடியில் எப்படி பூக்களை அதிகமாக பூக்கச் செய்வது என இப்பதிவில் நாம் பார்க்கலாம். இதற்காக டைஅம்மோன்னியம் பாஸ்ஃபேட் (Diammonium phosphate) என்ற உரம் இருந்தாலே போதுமானது. இந்த உரம் செடிகள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். இதனை எந்த அளவிற்கு, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
முதலில், வீட்டில் ரோஜாச் செடி இருக்கும் தொட்டியில் மேற்பரப்பில் உள்ள மண்ணை கிளறி விட வேண்டும். அதன் பின்னர், டைஅம்மோன்னியம் பாஸ்ஃபேட்-ஐ சுமார் 15 முதல் 20 உருண்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை வேர்ப்பகுதியை தவிர்த்து மணலை கிளறி விட்ட இடங்களில் போட வேண்டும். இதன் பின்னர், செடிக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்த 10 முதல் 20 நாள்களில் செடியின் வளர்ச்சி செழிப்பாக இருப்பதை நாம் உணர முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“