ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவும், உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உணவு முறையும், உடற்பயிற்சி செய்வதும் ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்காகப் பெங்களூர் பாப்டிஸ்ட் மருத்துவமனையில் DNB எண்டோகிரினாலஜி மருத்துவர் சந்தோஷ் பி அணுகினோம். அவர் கூறுகையில், “நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சி செய்வது உள்பட உணவு முறையில் சிறிய மாற்றம் கொண்டு வருவதன் மூலம், ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க முடியும். ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதன் மூலம், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த கொலஸ்டிரால் அளவுகளில் நல்ல மாற்றத்தை காண முடிகிறது” என்றார்
நீரிழிவு நோயாளிகள் என்ன உணவுகளைச் சாப்பிடலாம்?
காய்கறிகள்: கேரட், கிரின்ஸ், பெப்பர்ஸ், தக்காளி, கீரைகள்
பழங்கள்: ஆரஞ்ச், முலாம்பழம், பெர்ரி, ஆப்பிள்கள், பப்பாளி
தானியங்கள்: முழு தானியங்கள், கோதுமை, அரிசி, ஓட்ஸ், கார்ன்மீல், பார்லி, குயின்னா
புரதம்: சிக்கன், மீன், நட்ஸ், வேர்க்கடலை, முட்டை, பீன்ஸ், உலர்ந்த பீன்ஸ்.
கொழுப்பு அல்லாத பால் பொருட்கள்: ஓட்ஸ் பால், பாதாம் பால், தயிர், குறைந்த கொழுப்பு பால், வெண்ணெய்

எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள் வறுத்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் முக்கியமாகத் தவிர்க்க வேண்டும். அதேபோல, சர்க்கரை அளவு அதிகம் கொண்ட மிட்டாய்கள், பேக்கரி உணவுகள், ஐஸ் கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் தவிர, நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
ஏன் உடற்பயிற்சி அவசியம்?
நீரிழிவு பாதிப்பைத் தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அந்நபர்களின் மனச்சோர்வை போக்குகிறது. கண்டிப்பாகத் தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சேர்ந்து, சிறிய உடற்பயிற்சிகளைச் செய்வது கூடுதல் பலனாகும். உடற்பயிற்சி போல யோகா பயிற்சிகளையும் நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்
அவ்வப்போது தண்ணீர் குடித்து, உடலில் நீரேற்றத்தை அதிகரிக்க வேண்டும்.
ரத்த சர்க்கரை அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடுமையான உடற்பயிற்சி, ரத்த சர்க்கரை அளவை குறைத்திடக்கூடும்.
உடற்பயிற்சியின் பாதத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு, கம்பர்ட்டபுளான ஷூவை அணிந்துகொள்ள வேண்டும்.
“ஆரோக்கியமாகச் சாப்பிடுவதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும், நீரிழிவு நோயாளிகள் இன்சூலின் மற்றும் மருந்துகளை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து வெளியே வரமுடியும். அவர்கள் அதன் பயன்பாட்டை முற்றிலுமாக குறைத்திட முடியும். ஆரோக்கியான உணவுடன் மிதமான உடற்பயிற்சி மேற்கொள்ளுகையில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்” என மருத்துவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.