கருத்து: ரமேஷ் சரின்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்களிடம் மிகவும் அதிகமாகக் காணப்படுவது
மார்பகப் புற்றுநோயாகும். இது அவர்களைப் பாதிக்கும் பிற புற்றுநோய்களின் 28.2 சதவிகிதமாக இருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புள்ளி விவரப்படி, ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதிலும் சிகிச்சை வழங்குவதிலும் இங்கே குறைபாடுகள் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் 5-வருட உயிர்வாழ்தல் 66.4 சதவிகிதமமாக இருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இது 90.2 சதவீதமாகும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும், விழிப்புணர்வாலும், தக்க தருணத்தில் அவர்களிடம் தெரிவிக்கப்படுவதாலும் பரிசோதிக்கப்பட்ட சிகிச்சை முறையின்படி இந்த நோய் குணப்படுத்தப்படுகிறது, உயிர்வாழ்தலும் நீடிக்கப் படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Diet as a cancer cure: What Navjot Singh Sidhu didn’t tell you
மார்பகப் புற்றுநோய்களின் புள்ளி விவரங்களை நான் இங்கே மேற்கோள் காட்டியதின் காரணம், இந்த நோயால்தான் கிரிக்கெட்டர் (துடுப்பாட்டக்காரர்) நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி பாதிக்கப் பட்டார். ஆனால் அவர் மனைவி விரதம்; இனிப்பு, பால் போன்றவற்றைத் தவிர்த்தல்; வேம்பு மற்றும் எலுமிச்சை கசாயம் எடுத்தல் போன்ற மாற்றுச் சிகிச்சை முறைகள் மூலம் குணமடைந்தாகக் கூறுகிறார். இதுபோன்ற சிகிச்சை முறைகளால் புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமென்றால், அறிவியல் சான்றுகள் மூலம் இதற்கு நேரடித் தொடர்பிருந்தால், பின்பு நாம் இத்தனைப் பெண் நோயாளிகளைப் பார்த்திருக்க மாட்டோம். இந்த நோயால் பாதிக்கப்படும் வயது இன்னும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால்தான், பல தரப்பு மக்களினிடையே ஏற்கனவே அறிவியல் ரீதியான சிகிச்சை முறைகளின் மீது சந்தேகமும் நம்பிக்கை குறைந்தும் காணப்படும் நம் நாட்டில், நட்சத்திரங்களால் வெளிப்படுத்தப்படும் இது போன்ற செய்திகள் நன்மைகளைவிட தீமைகளையே அதிகம் தரும்.
இப்போது, அறிவியல் எப்படி புற்றுநோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது என்று கூற விரும்புகிறேன்.
கீமோதெரப்பி, இம்மியூனோதெரப்பி போன்ற சிகிச்சை முறைகளால், 5-வருட உயிர்பிழைக்கும் விகிதம் 20 சதவீதத்திலிருந்து நோயின் வகை மற்றும் தீவிரத்திற்குத் தகுந்தாற்போல் 70 முதல் 90 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. இரத்தப் புற்றிநோயிலிருந்து குழந்தைகள் உயிர் பிழைக்கும் விகிதம் நோயின் தீவிரத்திற்குத் தகுந்தாற்போல் 10 சதவீதத்திலிருந்து 50 முதல் 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவைகளெல்லாம் சாத்தியமாகக் காரணம் கடந்த 100 ஆண்டுகளாக தொடர்ந்து செய்யப்படும் ஆராய்ச்சிகளும், பரிசோதனைகள், மருத்துவ சோதனைகள், தவறுகளைத் திருத்துதல் மேலும் சிகிச்சையின் பலன்களை பல தசாப்தங்களாக ஆய்வு செய்வதாலுமே ஆகும். 1882-ல் வில்லியம் ஹால்ஸ்டெட் என்பவர் முதல்முறையாக மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சை செய்தார். முதல் கீமோதெரப்பி 1943-ல் செய்யப் பட்டது, கதிர்வீச்சு சிகிச்சை 1900-ல் நடந்தது. நூதனமான கார்ட்-டி (CART-T) செல் சிகிச்சை இரத்தப் புற்றுநோயிலிருந்து நிவாரணம் கிடைக்கக் காரணமாயிற்று. 2016-லிருந்து 2020 வரை, புற்றுநோய் ஆராய்ச்சிக்காக 24.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்) செலவு செய்யப்பட்டுள்ளது. பலன்கள் கிடைக்காவிட்டாலும், மக்களின் வாழ்வில் (சிகிச்சைக்குப் பிறகு) தகுந்த மாறுதல் கிடைக்கவில்லை என்றாலும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடைபெற உறுதியாகச் சாத்தியமில்லை.
மேலும், நாம் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். 5 முதல் 10 வருடங்கள் வரை உயிர் பிழைத்தவர்களை பூரண குணமடைந்தவர்களாக அறிவிக்க இயலாது. அடுத்து, மிகவும் கவனத்துடன் செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள். தொடர்பற்ற (random) அறிவியல் சார்ந்த சோதனைகளின் போது ஒரே மாதிரியான அளவில் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை இரண்டு குழுக்கலாகப் பிரித்து பரிசோதனை செய்து கண்காணிக்கின்றனர். ஒரு குழுவிற்கு தற்போது நடைமுறையில் உள்ள சிகிச்சை முறையும், அடுத்த குழுவிற்கு விலங்குகளின் சோதனையில் நிவாரணம் தந்த புதிய சிகிச்சை முறையும் கொடுக்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணிக்கப்படுகின்றது. வெற்றியடைந்தால் மட்டுமே, இந்தச் சோதனை அதிகப்படியான மனித நோயாளிகளுக்கு உலகின் பல பகுதிகளில் வாழும் வேறுபட்ட மரபணுக்கள் உடையவர்களுக்குக் கொடுக்கப் படுகிறது. இந்தச் சோதனை வெற்றியடைந்தால் மேலும் கண்காணிக்கப்பட்டு, ஒவ்வொரு சோதனைக் கட்டத்திலும் பரிசோதிக்கப்பட்டு பின்பு மருத்துவ சிகிச்சை நெறிமுறையாக தகுந்த ஆதாரங்களுடன் பரிந்துரைக்கப் படுகிறது.
புற்றுநோய் செல்கள் செல் வளர்ப்பு சோதனைக் குழாய் மூலம் பரிசோதிக்கப் படும்பொழுது பல தரப்பட்ட காரணிகள் செயல்படுத்தப்படுகின்றன. விலங்குகளில் சோதிக்கும் பொழுது நல்ல நிவாரணத்தைக் கொடுத்தாலும் சில சமயங்களில் மனிதச் சோதனையின் போது அதே அளவு நிவாரணத்தைக் கொடுப்பதில்லை. ஆகையினால், அறிவியல் சார்ந்த வெற்றியின் விகிதத்தைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது அவற்றுக்கு மாற்றாக உணவுமுறை போன்றவற்றைக் கொண்டு வர முடியாது. மேலும், இந்த நடைமுறைகள் (பத்தியம்) பெரிய அளவில் தொடர்பற்ற (random) முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டவை அல்ல. சிறிய அளவில் சில ஆய்வுகள் சில நோயாளிகளிடையே செய்யப்படுகின்றன. ஆனால் முடிவுகள் கொண்டாடப்படுகின்ற அளவுக்கு இல்லை என்பதால் அறிவியல் சார்ந்த சிகிச்சைக்கு மாற்றாக இதை பயன்படுத்தத் தேவை இல்லை.
உணவுமுறை வளர்சிதை மாற்றங்களைத் தூண்டுகிறது. அதனால் இது புற்றுநோய் செல்களில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இது முழுமையாகப் புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது. அறிவியல் ரீதியான மருத்துவ சிகிச்சை முறை மூலமே புற்றுநோய் செல்களைக் குறிவைத்து அழிக்க முடியும். ஆகையினால், முறையான உணவுப் பழக்கம் சுகாதாரமான வாழ்விற்கும், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் போன்ற வற்றை கட்டுப் படுத்தவும் உதவும் என்று கருதலாம், புற்று நோயால் பாதிக்கப்பட்டு (முறையான சிகிச்சை பெறுபவர்கள்) சீக்கிரம் குணமடைய உதவலாம். கீமோ தெரப்பி எடுப்பவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதால் விரதம் இருப்பதும் கலோரிகளைக் குறைப்பதும் நல்லதல்ல, குறிப்பாக எப்போதும் மெலிந்த உடல்பாகு கொண்டவர்கள், வயிறு மற்றும் உணவுக் குழாய் சம்பத்தப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதத்தைத் தவிர்க்க வேண்டும். இவர்களை விரதம் இருக்க வைத்தால் அவர்கள் தளர்ந்து போகவும் அவர்களின் தசை சிதைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.
புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறிப்பிட்ட நபருக்கு சூழலுக்கு ஏற்றவாறு வரையறுக்கப் படுகின்றன. ஒரு 40 வயது நோயாளியின் சிகிச்சை முறை, மற்ற பக்க விளைவுகளின் அபாயத்தில் உள்ள 70 வயது நோயாளியின் சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். ஒரு நபர் குணமடைந்த சிகிச்சை முறையை எல்லோருக்கும் பொதுவாக உபயோகப் படுத்த முடியாது.
புற்றுநோய் மருத்துவர்கள் மாற்று சிகிச்சை முறைகளுக்கு எதிரிகள் இல்லை ஆனால் அவற்றின் சோதனை முறைகள் நெறிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அதன் முடிவுகள் பல வருடங்களாகப் பதியப்பட வேண்டும், வெறும் 5 மாதங்கள் போதாது. ஆய்வாளர்களும், மருத்துவர்களும் சிகிச்சை முறைகளைப் பதிவு செய்கின்றனர். (நோயாளிகள் அவர்களுக்கு ஏற்படும் முன்னேற்றத்தைத் தெரியப்படுத்தத் தயாராக இருப்பதில்லை, அவர்கள் இறந்தால் உறவினர்கள், மருத்துவர்கள் மீது கோபப்படுகின்றனர்.) மேலும் முடிவுகள் மருத்துவ இதழ்களில் பிரசுரிக்கப்படுகின்றன, அவைகள் பொய்யாகச் சித்தரிக்கப்படுவதைத் தடுக்க மற்ற மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப் படுகிறது.
இது (உணவுமுறை/பத்தியம்) போன்ற முறைகள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்ற வருடம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோ நகரில் நடைபெற்ற அமெரிக்க மார்பகப் புற்றுநோய் மாநாட்டில் நான் பங்கேற்றேன். அதில், பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, உடற்பயிற்சி 30 சதவீதம் வரை புற்றுநோயைப் பழைய நிலைக்குப் போகவிடாமல் தடுப்பதாகக் கண்டறியப்பட்டு அதன் முடிவுகள் மாநாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதை (புற்றுநோயிலிருந்து) உயிர் மீண்டவர்களின் தாங்கும் திறனை எப்படி வகைப்படுத்துவது என்று அறிய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் இப்போது உணவுமுறை சம்பத்தப்பட்ட ஆய்வுகள் அளவிடப்படவில்லை.
(கட்டுரையாளர், புதுடில்லி இந்திரப்பிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மருத்துவர். மார்பகப் புற்றுநோய் நிபுணர்.)
மொழிபெயர்ப்பு: எம். கோபால்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.