இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்று தான் சர்க்கரை நோய் (நீரிழிவு). இரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால் இதனை உணவு முறை கொண்டு கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். அதற்கு அந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனுடன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள்ளவும்.
1)சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய கீரை
வெந்தயக்கீரை, அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாகவோ அல்லது ஏதேனும் ஒருவகையில் தினம் உட்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதன் மூலம் அவர்களின் உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதோடு சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.
2) கோதுமை ரொட்டி
சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும். கோதுமை ரொட்டி சக்கரை நோயாளிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவாகும். இந்த கார ரொட்டியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
சின்ன வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு, உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும். மாவை சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் உருட்டி வைத்த சப்பாத்திகளை போட்டு எண்ணெய் தேவையான அளவு ஊற்றி, இரண்டு பக்கமும் புரட்டி எடுக்க, ரொட்டி நன்கு சிவந்து வரும். சூப்பரான கார கோதுமை ரொட்டி ரெடி.
3) பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்தத்தில் குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.