கோவை மாவட்டத்தி்ல் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், கடும் வெப்பம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோடை வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியான குடிநீர் வழங்கும் மண்பானைகள் விற்பனையும் அதிகரித்து வருகிறது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மண்பானைகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர் நவீன வரவுக்கு ஏற்ப பானைகளில் எளிதாக குடிநீர் பிடிக்க குழாய் பொருத்தி விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறியதாவது; முன்பைவிட மண்பாண்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்துள்ளதால் மண் பானைகளை வாங்க அதிக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் அதனை உற்பத்தி செய்ய போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தொழில் நலிவடைந்து வருகிறது. மேலும் தற்போது மண்பானைகளுக்கு தேவை அதிகரித்து இருந்தாலும் இந்த தொழிலை செய்ய யாரும் முன்வருவதில்லை.
எனவே மண் பாண்டங்கள் செய்ய போதுமான மண் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் போதுமான மண் கிடைத்து வந்த நிலையில், தற்போது மண் தட்டுப்பாடு அதிகரித்து விட்டது. இதனால் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் நலிவடைந்துள்ளது.
மண் எடுக்க அனுமதி இருந்தும், பானைகள் தயாரிக்க மண் அள்ள முடியாத நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், மண்பானைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும், மண்பாண்டங்கள் உற்பத்தி செய்ய முடியாது. வரும் காலங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்க எங்களுக்கு போதுமான மண் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“