புறாக்கூண்டு கருத்தரிப்பு மையங்கள் : ஒரு பார்வை

செயற்கை முறைக் கருத்தரிப்பு விஷயத்தில் மருத்துவத் துறையின் வேகத்திற்குத் தகுந்த மாதிரி சமூகம் மெல்ல மேலேறுவது இருக்கட்டும். மருத்துவத் துறையே மேலேற வேண்டிய அபாயக் கட்டத்தில்தான்...

சரவணன் சந்திரன்

செயற்கை முறைக் கருத்தரிப்பு விஷயத்தில் மருத்துவத் துறையின் வேகத்திற்குத் தகுந்த மாதிரி சமூகம் மெல்ல மேலேறுவது இருக்கட்டும். மருத்துவத் துறையே மேலேற வேண்டிய அபாயக் கட்டத்தில்தான் இருக்கிறது. அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கும் காப்பீடு திட்டத்தில் வழியுண்டு. ஆனால் இங்கே இல்லை.

ஏற்கனவே இருக்கிற பல நோய்களுக்குக் காப்பீட்டில் இடம் இல்லை என்கிறபோது, செயற்கைக் கருத்தரிப்பு முறை குறித்தெல்லாம் யோசிப்பார்களா என்ன? தனியார் காப்பீட்டு நிறுவனங்களை விடுங்கள். அரசு மருத்துவமனைகள் பலவற்றில் இன்னமும் இந்த முறை பின்பற்றப்படுவதில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. எய்ம்ஸ், புனே ராணுவ மருத்துவமனை உள்ளிட்ட நான்கு பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே குழந்தையின்மைக்கான இதுபோன்ற சிகிச்சை முறைகள் இருக்கின்றன.

ஏழைகளுக்கு எட்டாக்கனி

இதுமாதிரியான மருத்துவமுறைகளுக்கு லட்சங்களில் செலவாகிறது எனச் சொல்கிறார்கள். உபகரணங்கள் துவங்கி மருந்து மாத்திரைகள் வரை எல்லாமும் வெளிநாடுகளில் இருந்தே தருவிக்கப்படுகின்றன. அதனால்தான் அந்தச் செலவு என்கிறார்கள். தவிர, இதன் வெற்றி என்பது ஐம்பது சதவீத அளவில்தான் இருக்கிறது. இது சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சிகளும் இந்தியாவில் பெரிய அளவில் நடக்கவில்லை. ஆராய்ச்சிகள் வளர்ந்தால் வெற்றியின் சதவீதமும் அதிகரிக்கலாம்.

அதனால்தான் இன்னமும் அது வழக்கம்போல ஏழைகளுக்கு எட்டாத தூரத்திலேயே இருக்கிறது. அரசு மருத்துவமனைகளிலும் இது போன்ற சேவைகள் வந்துவிட்டால் அவர்களும் பயன்பெற வாய்ப்பிருக்கிறதே? பணக்கார வியாதிகள் என்று சொல்லப்படும் வியாதிகள் ஏழைகளுக்கும் வருகின்றன. வாழ்க்கை முறை சார்ந்த நவீன நோய்க்கூறுகள் ஏழை-பணக்காரன் என வித்தியாசமில்லாமல் சம அளவில் பாய்கின்றன. பணம் படைத்தவர்களுக்கு மருத்துவ வாய்ப்புகள் இருக்கின்றன. ஏழைகளுக்கு இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

போலிகளின் ஊடுருவல்

எல்லா மட்டங்களுக்கும் சென்று சேர்வதற்கான விழிப்புணர்ச்சி பிரச்சாரம் தேவை என்பதை இந்தத் துறை சார்ந்த மருத்துவர்கள் அழுத்தமாகச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். கூடவே மருத்துவ ஆராய்ச்சி என்று வந்தால் அதில் போலிகளும் ஊடுருவுவார்கள். தமிழகமெங்கும் புறாக் கூண்டுகள்போலச் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் பெருகிவருகின்றன. அறியாமையில் இருக்கும் மக்களைக் குறிவைத்து பணம் பார்க்க ஆட்கள் இறங்கிவிட்டார்கள்.

அப்படிப் பெருகியவற்றுள் நுழைந்திருக்கிற சில போலிகளை நம்பி பணத்தை மன அமைதியை இழந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாக இருக்கின்றன. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதிலும் ஆணா பெண்ணா என்கிற பகடையாட்டங்கள் காசுக்காக நடப்பதாகவும் சொல்கிறார்கள். களைய வேண்டியதும் கண்டிக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

கோயில் குளங்களைச் சுற்றினோம். மண்சோறு சாப்பிட்டோம். செய்யாத வேண்டுதல்களையெல்லாம் செய்தோம். அறிவியலின் வழியாக வழி பிறந்துவிட்டது. ஆனாலும் வழிநடை பார்க்க மறுக்கிறோம். எதனால் என்று கேள்வி எழுப்பினால் புரையோடிப் போயிருக்கிற சமூக மூட நம்பிக்கைகளைத்தான் காரணம் காட்ட வேண்டி யிருக்கிறது. அது மாறாத வரைக்கும் எதுவும் மாறாது. உடல் சம்பந்தங்கள் அடிப்படையில் பிறக்கிற குழந்தைகள் மட்டும்தான் இயற்கையின் குழந்தைகளா? இதுபோல அறிவியல் வழிமுறைகள் வழியாக பூமியில் படும் பிஞ்சுப் பாதங்களும் பிரபஞ்சத்தின் கொடைதான்.

அது பிரபஞ்சத்தின் கொடையா இல்லையா என்பதை பூங்குழலி ரவிச்சந்திரனைக் கேட்டுப் பாருங்கள் அவர் சொல்வார். ஏனெனில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதற்காகவே இவர்கள் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டவர்கள். ஏனெனில் இவர்கள் பல ஆண்டுகளாக இந்தப் பாக்கியத்திற்காகத் தவம் கிடந்தவர்கள். பல்வேறு முறைகளில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்காக அலைந்து திரிந்தவர்கள். அதனால்தான் அதை அவர்கள் பிரபஞ்சத்தின் கொடை என்று வர்ணிக்கிறார்கள்.

பூமி படாத பிஞ்சின் பாதங்கள் ஆண்டாண்டு காலத் துயரங்களை எட்டி உதைக்கின்றன. பூரிப்பில் மனித இதயங்கள். இதயங்களில் இருந்து நேரடியாக வரும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். நாங்கள் இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறோம் என பேபி கிஷோர் தம்பதி சொல்வது மருத்துவ உலகத்திற்கான வெகுமதி. அந்த வெகுமதி அவர்கள் வார்த்தைகளில் மட்டுமல்ல, துள்ளி விளையாடும் இக்குழந்தைகளின் சிரிப்பிலும் இருக்கிறது.

*

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close