திண்டுக்கல் தனியார் தோட்டத்தில் அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் பத்தாம் ஆண்டு உலக அளவிலான மாபெரும் கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் நெல்சன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.
கிளி மூக்கு, கட்ட மூக்கு, கடி மூக்கு, கழுகு மூக்கு, மயில் நூலா, விசிறிவால், நீள வால் போன்ற வகையில் சேர்ந்த சேவல்கள் பங்கேற்றன. சேவலில் தரம் மூக்கு உடல் அமைப்பு கொண்டை உடல் பருமன் உயரம் வால் நீளம் சேவலின் நடை ஆகியவற்றின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக 10 சேவல்களுக்கு பெரிய ஏர்கூலர்கள், இரண்டாம் பரிசாக சிறிய அளவிலான ஏர்கூலர்கள், 70 சேவல்களுக்கு பெடஸ்டல் பேன்கள் வழங்கப்பட்டன.
இந்தக் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட சேவல்களை சேவல் வளர்ப்பு உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து இரண்டரை லட்சம் வரை மதிப்பிலான சேவல்கள் இடம் பிடித்திருந்தன. அனைத்திந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் செயலாளர் பிரபாத், பொருளாளர் உஸ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
"இந்த சேவல்கள் அழகுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றது. அழிந்து வரும் இந்த வகையான சேவல்களின் வளர்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த சேவல்களுக்கு கம்பு கேப்பை வெள்ளை சோளம் இரும்பு சோளம் ஆகிய தானியங்கள் உணவாக வழங்கி வருகிறோம். மேலும் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி தடுப்பூசி மற்றும் மருந்துகள் சேவல்களுக்கு கொடுத்து வருகிறோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.