ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் சார்பாக, உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் இருந்து சென்னை மற்றும் ஹைதராபாத்திற்கு நேரடி விமான சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை, ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-ஆம் தேதிவரை ஏர் இந்தியா நிறுவனமும், பிப்ரவரி 1 முதல் 26-ஆம் தேதிவரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் வழங்குகின்றன. இதனடிப்படையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலமாக பிரயாக்ராஜில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை முதன் முறையாக செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு வசதியாக இந்த நேரடி விமான சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு விமான நிறுவனங்களும் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி முதல் தங்கள் பயணிகளுக்கு விமான சேவையை வழங்கி வருகின்றன. இதனால் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஒரே நாளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பமேளாவிற்காக விமான சேவையை பயன்படுத்தியது, இதற்கான தேவையை சுட்டிக்காட்டுகிறது.