தீபாவளி பண்டிகை என்பது, மக்கள் மனதில் உள்ள இருளையும், அகந்தை, ஆணவம், தீய எண்ணங்களை நீக்கி, தர்மம், நேர்மை, ஒழுக்கம், பகிர்தல் எனும் தீபத்தை ஏற்றுவதே ஆகும். சுருங்கச்சொன்னால் இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் தீப ஒளித்திருநாள் என்பர்.
புராணங்களின் படி, மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்த நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தார். அப்போது நரகாசுரன் இறக்கும் போது கிருஷ்ணனிடம், தான் இறக்கும் இந்த நாளை மக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அன்று முதல் மக்கள் தீபாவளியை , விளக்குகளால் ஒளி ஏற்றி பெரும் பண்டிகையாகக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை இந்திய மக்கள் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடுகின்றனர்.
தீபாவளி 2019 எப்போது கொண்டாடப்படுகிறது?
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ம் தேதி அதாவது விகாரி ஆண்டு ஐப்பசி 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அடுத்த நாளான அக்டோபர் 28ம் தேதி வட இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படுகின்றது.
அமாவாசை: ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்திலேயே தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படும் ஞாயிறு அன்று பிற்பகல் 12.10 வரை சதுர்த்தசி அதன் பின்னர் அமாவாசை வருகின்றது. எனவே தீபாவளி அன்று காலையில் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் புதிதாக வாங்கிய பொருட்களை வைத்து லக்ஷ்மி பூஜை செய்வது நல்லது.
இந்த ஆண்டு அமாவாசை தினம் பிற்பகல் 12.10 மணிக்கு வருவதால், மாலை நேரத்திலும் இறைவழிபாடு மிகவும் அவசியமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் சில ஆண்டுகளில் ஐப்பசி மாதத்தில் வரும் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கு அடுத்த நாளான சுக்கிலப்பிரதமை ஆகிய நாட்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அமாவாசை தின முந்தினம் அதாவது நரக சதுர்த்தசி தினத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.