Diwali 2019 celebrations snacks Kaara thattai Garlic Murukku : தீபாவளி என்ற சொல்லை கேட்டவுடன் அனைவருக்கும் ஓர் உற்சாகம் பிறப்பது இயல்பு. இந்த உற்சாகத்திற்கு புத்தாடைகள், பலகாரங்கள், இனிப்புக்கள், மத்தாப்புக்களே காரணம். தீபாவளியை சிறப்பிக்கும் கார தட்டை, பூண்டு முறுக்கு எவ்வாறு தயாரிப்பதென்று பார்க்கலாம்.
கார தட்டை
தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு, வறுத்த பொறிக்கடலை, வறுத்து அரைத்த உளுந்து பொடி, நுணுக்கிய பூண்டு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு, எண்ணெய்.
செய்முறை
ஒரு கடாயில் அரிசி மாவை நன்கு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். அதே போல் உளுந்து பொடியை வறுத்து எடுக்கவும், பின் கடலை பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைக்க வேண்டும். இதையடுத்து ஒரு கப் அரிசி மாவிற்கு இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு உளுந்து மாவு சேர்க்க வேண்டும். வறுத்த மாவுகளை ஓர் தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த மாவுகளுடன் உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், பொறிக்கடலை மாவு, கறிவேப்பில்லை, நுணுக்கிய பூண்டு மற்றும் ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். தண்ணீர் மற்றும் சிறிது சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்தெடுத்தால். தட்டை மாவு தயார். இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து அதனை உள்ளங்கையில் வைத்து தட்டைபோல் அமுக்கவும். ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை நன்கு பொரிக்கவும். சிறிது நேரம் எண்ணெய் வடிய வைத்தால் காரமான தட்டை தயார்.
பூண்டு முறுக்கு
தேவைப்படும் பொருட்கள்
அரிசி மாவு, பூண்டு, சீரகம், எள், பெருங்காயம், வெண்ணெய், உப்பு, எண்ணெய்.
செய்முறை
முதலில் ஓர் அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், வெண்ணெய், எள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி முறுக்கு மாவை தயாரித்து கொள்ளவும். பின் பூண்டை விழுது போல் அரைத்து கொள்ளவும். பின் தயார் செய்து வைத்துள்ள முறுக்கு மாவுடன் அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
மாவுடன் தண்ணீர், சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும். இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதித்த பின், தயாரித்து வைத்துள்ள முறுக்கு மாவை முறுக்கு குழலில் வைத்து விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் பிழிந்து விடவும். பின்பு அதனை எடுத்து எண்ணெய்யில் பொரித்தது ஆறிய பின் பரிமாறவும்.
இந்த மதுர் வடை இருக்கே… மதுர் வடை… தீபாவளிக்கு அசத்தலாக சமைக்க ஒரு சூப்பர் பதார்த்தம்…