/indian-express-tamil/media/media_files/pdYNBsjhCo83bLs1VrEm.jpg)
தீபாவளியன்று செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்... அள்ளிக் கொடுக்கும் பலன்கள் இதோ!
ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் தீபாவளி, இந்துக்களின் முக்கியமான பண்டிகை மட்டுமல்ல, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு கடைபிடிப்பதன் மூலம், இந்த திருநாளின் முழு பலன்களையும் பெற முடியும்.
தீபாவளியன்று செய்ய வேண்டியவை:
புனித நீராடல் (கங்கா ஸ்நானம்): அதிகாலையில் எழுந்து, அதிகாலை 05:02 மணி முதல் 06:11 மணி வரை நல்லெண்ணெய் மற்றும் சீகைக்காய் (நலுங்கு மாவு) தேய்த்துக் குளிக்க வேண்டும். இந்த குளியல் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும். குளிக்கும் நீரில் ரோஜா இதழ்கள், உப்பு, மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, நேர்மறை சக்தி அதிகரிக்கும். நீராடலைத் தொடங்கும் முன், கையில் சிறிது நீர் எடுத்து, "ஓம் நம சிவாயை நாராயண்யை தச தோஷ ஹராயை கங்காயை ஸ்வாஹா" என்ற மந்திரத்தைச் சொல்லிவிட்டு குளிக்கலாம்.
ஆசி பெறுதல்: குளித்து முடித்து புத்தாடை உடுத்திய பின்னர், வீட்டில் உள்ள பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுவது மிகவும் அவசியம். தீபாவளியன்று வீட்டில் கட்டாயம் மகாலட்சுமிக்கு காலையில் 06:00 மணி முதல் 10:30 மணிக்குள் பூஜை செய்து படையல் போடலாம். இது வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்க அருள்புரியும். காலையில் பூஜை செய்ய முடியாதவர்கள், மாலை 6 மணிக்கு லட்சுமி பூஜை செய்யலாம். பூஜை செய்யும் போது, விளக்கேற்றும் போதும் "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ரீம் ஸ்ரீம் லக்ஷ்மி கே நம" அல்லது "அஷ்டலக்ஷ்மியே நமஹ" போன்ற மந்திரங்களை உச்சரித்து வழிபட, மகாலட்சுமியின் அருள் கிட்டும்.
தீபாவளியின் முக்கியத்துவம், செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமி மற்றும் குபேரரை வழிபடுவதாகும். இது பொதுவாக அமாவாசை திதியில், மாலையில் பிரதோஷ காலத்தில் செய்யப்படுகிறது. அமாவாசை திதி அக்.20 அன்று மாலை 03:44 மணிக்குத் தொடங்கி அக்.21 அன்று மாலை 05:54 மணிக்கு முடிவடைகிறது. லட்சுமி பூஜைக்கான உகந்த நேரம் (பிரதோஷ காலம்) அக்.20 மாலை 07:08 மணி முதல் இரவு 08:18 மணி வரை. பூஜையின் மொத்த கால அளவு: தோராயமாக 1 மணி நேரம் 10 நிமிடங்கள்.
மாலை நேரத்தில் வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி ஒளிமயமாக்கி, இருள் நீக்கப்பட வேண்டும். லட்சுமி குபேரர் சிலைகளை வைத்து, மலர்கள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் படைத்து, தீப தூப ஆராதனை செய்து, செல்வமும் செழிப்பும் வீட்டிற்கு வர வேண்டி மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
தீபாவளிக்கு முந்தைய நாள் மாலையில் வீட்டின் வாசலில் யம தீபம் ஏற்றி முன்னோர்களை வழிபட வேண்டும். மேலும், முன்னோர்களை நினைத்து வீட்டிற்குள் தனியாக ஒரு அகல் தீபம் ஏற்றி வைப்பது அவர்கள் மோட்சம் அடைய வழிகாட்டும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் பசு மாட்டிற்கு பூஜை செய்வது (கோ பூஜை) மிகவும் விசேஷமானதாகும். லட்சுமி பூஜை முடிந்த பிறகு, சாத்வீக உணவை (எளிமையான, தூய்மையான சைவ உணவு) உண்ணலாம். இது ஆன்மீக உணர்வை மேம்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும்.
தீபாவளியன்று தவிர்க்க வேண்டியவை:
யாராவது தானம் கேட்டு வந்தாலோ, அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களையோ மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது. நாள் முழுவதும் வீட்டை அமைதியாகவும், ஒற்றுமை மற்றும் அன்பு நிறைந்ததாகவும் வைத்திருக்க வேண்டும். சண்டைகள், வாக்குவாதங்கள் மற்றும் சத்தங்கள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டை அசுத்தமாக வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் எந்த ஒரு பகுதியையும் இருளாக வைத்திருக்கக் கூடாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.