கோவையில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற மாணவர்கள் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி வழங்கும் விதமாக கோவையைச் சேர்ந்த பி.எஸ்.ஜி.அறக்கட்டளை சார்பாக ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையிலான பட்டாசுகளை வெடித்து மாணவர்கள் மகிழ்ந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பி.எஸ்.ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன்,
பி.எஸ்.ஜி. மேலாண்மை கல்லூரி இயக்குனர், முனைவர் ஸ்ரீவித்யா, பி.எஸ்.ஜி.கேர் இயக்குனர் முனைவர் ருத்ரமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, கடந்த 1995-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இல்லத்தில் தற்போது 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருவதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் சேர்ந்து கோவையை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்பினர், கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தீபாவளி கொண்டாடினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“