தீபாவளி என்பது, தமிழ்நாட்டில், ஒருநாள் கொண்டாட்டம்தான். ஆனால், வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை, ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் நாம் தீபாவளி கொண்டாடும் நாளில் அவர்கள் சின்ன தீபாவளி கொண்டாடுகிறார்கள். `நரக சதுர்த்தசி' என்று அழைக்கப்படும் அன்றுதான், பகவான் கிருஷ்ணர், நரகாசுரனை சம்ஹாரம் செய்தார். அவன் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டுக்கொண்டபடி, அன்றைய தினம் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். மறுநாள் அமாவாசையன்று பெரிய தீபாவளி கொண்டாடப்படுகிறது.
முதல்நாள்: தந்தேரஸ் எனப்படும் உலோகத் திருவிழா
இரண்டாவது நாள்: சின்ன தீபாவளி என்னும் நரகசதுர்த்தசி
மூன்றாவது நாள்: பெரிய தீபாவளி
பெரிய தீபாவளி
மூன்றாவது நாளான அமாவாசையன்று அவர்கள் பெரிய தீபாவளி கொண்டாடுகிறார்கள். தங்கள் வீட்டுக்கு வந்த, மகாலட்சுமிக்கு, மாலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்கிறார்கள். மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களில் காளி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
கோவர்த்தன பூஜை
நான்காவது நாள் பண்டிகை, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து வருணன் மற்றும் இந்திரனின் செருக்கை அடக்கிய கிருஷ்ணரைப் போற்றும் வகையில்,கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில், மகாவிஷ்ணு வாமனராக வந்து மகாபலிச் சக்கரவர்த்தியை வெற்றிகொண்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இன்னும் சில மாநிலங்களில் ராவணனை சம்ஹாரம் செய்து ராமர் அயோத்திக்குத் திரும்பிய நாளாகவும் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் ராமபிரானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள்.
குஜராத்தில் இந்த நாளைத்தான் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். வியாபார நிறுவனங்களில், அன்றுதான் புதுக் கணக்கு துவங்குகிறார்கள்.
பய்யா தோஜ்
ஐந்தாவது நாளை, பய்யா தோஜ் என .கொண்டாடுகின்றனர். அனைத்து வீடுகளிலும் `சகோதரிகளைக் கொண்டாடும் நாள்’ இது. நாம் பொங்கல் சீர், கொடுப்பதைப் போன்றே, அங்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பரிசு கொடுத்து அசத்துவார்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே அன்பை வளர்க்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
ஆக மொத்தம், ஒருநாள் கொண்டாட்டத்திற்கே, நமக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்போது, வடமாநிலங்களில் 5 நாட்கள் கொண்டாட்டத்திற்கு மக்களிடையே ஏற்படும் மகிழ்ச்சி பற்றி சொல்லியா தெரிய வேண்டும். சான்சே இல்ல.என்ஜாய் பண்றாங்க
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.