தீபாவளி என்பது நமக்கு ஒருநாள் கொண்டாட்டம்தான். ஆனால், வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை ஐந்து நாள்கள் கொண்டாடப்படுகிறது.
அதில் முக்கியமானது கோவர்த்தன பூஜை.
கிருஷ்ணர் பிறந்த ஊரான மதுராவில் உள்ளது, கோவர்த்தன கிரி மலை. இப்பகுதி மக்கள், வளமையாக வாழவும் நல்ல மழை பெய்து பூமி செழித்து, விவசாயம் பெருகவும், ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா எடுப்பர்.
இது, கிருஷ்ணனுக்கு தெரிய வந்தபோது, மழையும், காலமும் இயற்கையின் நியதி. ஆக, இந்திரனுக்கு எதற்கு விழா? என தடுத்து விட்டார். இதனால், கடும் கோபத்துடன், ஒரு வாரம் மழையை கொட்ட செய்தான், இந்திரன்.
இதனால் எங்கு பார்த்தாலும் மழை. ஊரெங்கும் வெள்ளம். வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க குடை இருந்தால் நன்றாக இருக்குமே? மொத்த ஊரும் பாதுகாக்க வேண்டுமெனில் என்ன செய்வது? இறைவன் தான் ஏதாவது செய்ய வேண்டும்.
கண்ண பரமாத்மா, கோவர்த்தன குன்றைப் பெயர்த்தெடுத்து மக்கள் மற்றும் பசுக்களுக்குக் குடையாகப் பிடித்தான். மொத்த ஆயர்குல மக்களையும் காத்தான். அதனால்தான் கண்ணன் ‘கோவர்த்தன கிரிதாரி’ என்று அழைக்கப்படலானான்.
இதில் மகிழ்ந்த மக்கள், அடுத்த ஆண்டு முதல் இந்திர விழாவுக்கு பதில், கிருஷ்ணனுக்கு விழா எடுக்க ஆரம்பித்தனர்.
கோவர்த்தன் பூஜை என்பது கிருஷ்ண பகவானுக்கு நன்றி, பக்தி மற்றும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நேரமாகும்.
இந்த ஆண்டு கோவர்த்தன பூஜை நவம்பர் 14, 2023 அன்று வருகிறது.
அன்று கிருஷ்ணரை வணங்கும் மக்கள், வீட்டில் பசுஞ் சாணத்தை சிறு மலை போல் குவித்து, அதற்கு பூ போட்டு வைத்து அலங்காரம் செய்வர். ஒன்பது வகையான பண்டங்களை நைவேத்யமாக வைத்து, அதை உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழ்வதுண்டு.
/indian-express-tamil/media/media_files/tpVomScdd0zqT3P9nOz4.jpg)
இதேசமயம், கோவிலிலும் பண்டங்களை மலை போல் குவித்து, கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து, அதை பக்தர்களுக்கு விநியோகிப்பர்.
இதை அண்ணகூட் (அன்னக்குவியல்) எனக் கூறுவர். அந்த நாளில், கிருஷ்ணர் கோயில்களில் மொத்தம் 56 வகை உணவுகள் படைக்கப்படும். இதை ‘சப்பன் போக்’ என்கிறார்கள். ‘சப்பன்’ என்றால் 56 என்று அர்த்தமாம். ‘போக்’ என்றால் போஜனம், உணவு என்று அர்த்தம்.
மதுரா, பிருந்தாவன், கோகுலம், ராதா ஜென்மபூமி உட்பட, பல இடங்களில் இந்த கோவர்த்தன பூஜை சிறப்பாக கொண்டாடப்படும்.
த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு கோவர்தன் பூஜை பிரதஹகால முகூர்த்தம் நவம்பர் 14 அன்று காலை 6:43 முதல் 08:52 வரை வருகிறது. பூஜைக்கான பிரதிபத திதி நவம்பர் 13 அன்று மதியம் 2:56 மணிக்கு தொடங்கி நவம்பர் 14 அன்று மதியம் 2:36 மணிக்கு நிறைவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“