diwali nombu 2019 : தீபாவளி - அமாவாசை நோன்பு இந்து குடும்பங்களின் தவறாமல் கடைப்பிடிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. யாரெல்லாம் நோன்பு இருக்க வேண்டும்? நோன்பு இருப்பதால் என்ன பயன்? தீபாவளி நோன்பை எப்படி கொண்டாட வேண்டும்? மொத்த விவரமும் இதோ
தீபாவளி நோன்பு மூலம் குடும்பம் வளம் பெறும் என்பதை ஐதீகமாக கருதி பெரும்பாலான இந்துக்கள் தீபாவளி நோன்பை கடைப்பிடிக்கிறார்கள்.
diwali nombu எப்படி கொண்டாட வேண்டும்?
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படும் நோன்பு கவுரி நோன்பாகும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுவாமியை அலங்கரித்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. நோன்பு எடுக்கும் பெண்கள் அதிகாலையிலேயே வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து விரதத்தை தொடங்குவார்கள்.
முக்கியமான விஷயம் நோன்பு முடியும் வரை அவர்கள் ஒருபொழுது இருப்பார்கள். அதாவது விரதம் இருப்பார்கள். அதிரசம் தயார் செய்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். அதன் பின்னர் வீட்டில் சாமிக்கு படையலிட்டு விரதத்தை முடிப்பார்கள். அது வரையில் உணவு எதுவும் சாப்பிட மாட்டார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். சாமிக்கு படையலிட அதிரசம் தயார் செய்வதற்கு என்று புதிய விறகு அடுப்பு, சட்டி, பானை என அனைத்தும் புதிதாகவே பயன்படுத்துவார்கள்.
மேலும் கோவிலுக்கு செல்லும்போது புத்தாடைகளை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பூஜை பொருட்கள் வாங்க செல்லும் போது குளித்து முடித்து சுத்தமாக சென்று பூஜை பொருட்களை வாங்கி வருவார்கள்.
பல வண்ணங்களில் நோன்பு கயிறு விற்கப்படும். அவரவர்கள் குல மரபுப்படி கறுப்பு இல்லாத நோன்பு கயிறு, சுங்கு வைத்த நோன்பு கயிறு, மணி வைத்த நோன்பு கயிறு என பல விதங்களில் விற்கப்படும்.
அதுபோல் எண்ணிக்கை அடிப்படையிலும் பூஜை பொருட்களை வாங்கி பூஜை செய்வார்கள். மேலும் காய்கறி வகைகளையும் எண்ணிக்கை அடிப்படையிலேயே வாங்கி சமையல் செய்வார்கள். அதிரசம் செய்ய முடியாதவர்கள் பூஜை பொருட்களுடன் வாழைப் பழங்களை வைத்து வழிபடுவார்கள்.
அதுபோல் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த வருடத்தில் நோன்பு கொண்டாட மாட்டார்கள். வருடம் முடிந்த பின்னரே நோன்பை கொண்டாடுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
யாரெல்லாம் நோன்பு இருக்க வேண்டும்?
ஆண், பெண் இருபாலாரும் இருக்கலாம். மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை தொடங்குவார்கள். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் விரதம் இருக்கலாம்.
விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.