தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை.
தீபாவளி எண்ணெய் குளியல்:
கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.
எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு.தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.
தீபாவளி அன்று அம்மாவாசை என்பதால் அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பே எண்ணெய் தேய்த்து உடலில் எண்ணெய் ஊறிய பின்பு குளிக்க வேண்டும்.
மற்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது சூரிய ஒளி 30 நிமிடங்களாவது நமது உடலில் பட வேண்டும். வெயில் உள்ள நாட்களில் மட்டுமே எண்ணெய் தேய்து குளிக்க வேண்டும்.
சோப்பு பயன்படுத்த கூடாது. சீகைகாய், அரப்பு, பயித்த மாவு போன்ற இயற்கை குளியல் பொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.