Diwali, Diwali snacks in tamil, Diwali sweets in tamil, தீபாவளி
Diwali Sweets And Snacks: தீபாவளி என்றாலே நாக்கில் எச்சில் ஊறும் பலருக்கு! காரணம், விதவிதமான ஸ்வீட்களுக்கு என்றே அவதாரம் எடுத்த நாள் இது. தீபாவளி ஸ்வீட்கள் சிலவற்றை செய்யும் முறைகளை இங்கு காணலாம்.
Advertisment
அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி. இந்தியா முழுக்க கோலாகலமாக கொண்டாட்டப்படும் ஒரு பண்டிகை, தீபாவளி. ஏன்? எதற்கு? என்கிற லாஜிக் பார்க்காமல் பலரும் வீடுகளை அலங்கரிப்பார்கள். காலையிலேயே எண்ணெய் தேய்த்துக் குளித்து, குழந்தை குட்டிகளுடன் புத்தாடை அணிந்து மகிழ்வர். அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப, இறைவனை வணங்கி, இனிப்புகளுடனும், பட்டாசுகளுடனும் அமர்க்களப்படுத்துகிற விழா இது.
ரொம்பவும் ஸ்பெஷல், தீபாவளியையொட்டி வீடுகளில் தயாராகும் ஸ்னாக்ஸ் வகைகள்! அதிரசம், வடை, முருக்கு என சாதாரண தொழிலாளர்கள் வீடுகள் முதல் செல்வந்தர்கள் வீடு வரை பலகாரங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் குறிப்பிட்ட சில பலகாரங்கள் செய்யும் முறையை இங்கு பார்ப்போம்.
Advertisment
Advertisements
கோதுமை அல்வா
அல்வாவுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. திருநெல்வேலிக்காரர்கள்தான் அதை செய்யவேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் சுலபமாக வீட்டில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், கேசரி கலர் (வண்ணத்திற்காக சிறிது), நெய் - 75 கிராம், எண்ணெய் - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் சிறிது, வறுத்த முந்திரி தேவையான அளவு, வெள்ளரி விதை ஒரு டீஸ்பூன்
செய்முறை: நெய்யையும், எண்ணெயையும் ஒன்றுசேர்த்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு புறம் கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு மாதிரி கரைத்துக் கொள்ளவும். ஏற்கனவே தனியாக எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையில் அரை கப் நீர் விட்டு கரைத்து கொதிக்க வைக்கவும். அது நுரையாக பொங்கி வரும்போது, கரைத்த கோதுமை மாவை சேர்த்து கைபடாமல் கிளறவும்.
பிறகு நெய் - எண்ணெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி விடுங்கள். பின்னர் ஏலக்காய் தூளை சேருங்கள். அதன்பிறகு நெய் தடவிய தட்டில் கொட்டி, அதற்கு மேல் வறுத்த முந்திரி மற்றும் வெள்ளரி விதையை தேவைக்கு ஏற்ப தூவுங்கள். ஓரளவு சூடு குறைந்ததும், துண்டுகளாக வெட்டினால் சுவையான கோதுமை அல்வா தயார்!
லட்டு
குழந்தைகளை குதூகலப்படுத்துகிற திருநாள் தீபாவளி. அப்படியென்றால் குழந்தைகளுக்கு பிடித்த லட்டு இல்லாமலா? லட்டு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: கடலை மாவு - 250 கிராம் (கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சுவையாக இருக்கும்), சர்க்கரை - 400 கிராம், தேவையான அளவு எண்ணெய், போதுமான அளவு முந்திரி, திராட்சை, டைமண்ட் கல்கண்டு - 20, இலவங்கம் - 7, பால் - ஒரு டீஸ்பூன், பச்சைக் கற்பூரம் சிறிதளவு, முழு ஏலக்காய் - 5, வண்ணத்திற்காக சிறிது கேசரி கலர்.
செய்முறை: முதலில் சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு நன்கு கொத்திக்க வைக்கவும். கொதிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்க்கவும். பிறகு கேசரி கலர் சேர்த்து பதத்தில் பாகு போல இறக்கி விடுங்கள்.
இன்னொருபுறம் கடலை மாவை நீர்விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி கொள்ளுங்கள். மாவை கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, லாவகமாக பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, இலவங்கம் இவற்றை பொரித்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். லேசான சூட்டில் லட்டு பிடிக்கவும். குழந்தைகளுக்கு பிடித்தமான லட்டு தயார்.
தேங்காய் பர்ஃபி
தேங்காய் பர்ஃபியும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான ஒரு இனிப்பு வகைதான். அதை செய்யும் முறையைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: உலர்ந்த தேங்காய்த் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 250 கிராம், சர்க்கரை - 350 கிராம், நெய் - 100 கிராம், பால் பவுடர் - 3 டீஸ்பூன், சிறிதளவு ஏலக்காய்த்தூள்.
செய்முறை: தேங்காய்த் துருவல், சர்க்கரை, நெய், பால் பவுடர் ஆகியவற்றை வாணலியில் போட்டு சூடாக்கவும். அவை கரைந்து, பக்குவமாக வேகவும் ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன் செய்யவும். இது இதமான சூட்டில் இருக்கும்போதே துண்டுகளாக கீறவும். சுவையான மிருதுவான தேங்காய் பர்ஃபி தயார்.