உங்க தீபாவளியே வேண்டாம்; டிக்கெட் புக் பண்றதுல எவ்ளோ பிரச்சனை!

விவரம் தெரிஞ்ச ஒருத்தனால, ஏசி ரூமுல உட்கார்ந்து, 10 பேருக்கு ஒரு நிமிஷத்துல டிக்கெட் புக் பண்ண முடியுது...

By: Updated: October 31, 2018, 7:22:44 PM

‘என்னப்பா ஒன்னோட நிறுத்திட்ட…? சூட்டோட சூடா இரண்டாவது குழந்தையையும் பெத்துக்க’ அப்டின்னு இனிமே யாராச்சும் உங்க கிட்ட சொன்னா, நின்னு ஒரு முறை முறைச்சிட்டு அப்டியே திரும்பி வந்துடுங்க.

ஏன்னு கடைசியா சொல்றேன்…

எண்ணி இன்னும் ஆறே நாள் தான் இருக்கு தீபாவளிக்கு. ஊருக்கு கிளம்பும் மூடுக்கு  ‘அந்த சிலர்’ இப்போது தான் லைட்டா வர ஆரம்பிச்சு இருப்பாங்க… யார் ‘அந்த சிலர்?’.. வேற யாரு, ஆன்லைன்-ல டிரெயினுக்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ணவங்க தான்.

தீபாவளிக்கு ஐஆர்சிடிசி புக்கிங் ஓப்பன் செய்த போது, இருந்த இடத்துல இருந்தே, ஆன்லைன்-ல டிக்கெட் புக்கிங் செஞ்சு எந்த டென்ஷனும் இல்லாம அவங்க வேலைய முடிச்சுக்கிட்டாங்க.. ஆனா, இன்னமும் ஆன்லைன் புக்கிங் சரிவராம, ரயில்வே கவுண்ட்டர்ல போய் டிக்கெட் புக்கிங் பண்றவங்க ஆயிரம் கணக்குல இருக்காங்க.

அவங்க பாடு இருக்கே.. அது கடவுள்ட்டயே சொல்லி மாளாது.

டிரெயின்-ல டிக்கெட் கிடைக்காம போகும் போது ஒரு வலி வரும் பாருங்க.. அது ஆம்பிளைங்களுக்குனே நேர்ந்துவிட்ட வலி. வயசான அப்பா, அம்மா, பொண்டாட்டி, குழந்தை-னு பல டிக்கெட்டுகள சுமந்துகிட்டு டிக்கெட் கிடைக்காம அல்லோலப்படும் அந்த கொடுமை எதிரிக்கும் வரக் கூடாது.

அப்பாவுக்கு சுகர் இருக்கும்.. அடிக்கடி சிறுநீர் கழிக்கனும். அம்மா, பொண்டாட்டி-னு ரெண்டு பொம்பளைங்களுக்கு டிரெயின் மட்டும் தான் எல்லாத்துலயும் வசதி. குழந்தையை தொட்டில் கட்டி தூங்க வைக்குறதுல இருந்து, அது அழுதுக்கிட்டே இருந்தா, தூக்கி தோளில் போட்டுக்கிட்டு இங்கயும், அங்கயும் நடக்க டிரெயின் தான் ஒரே வாய்ப்பு.

பஸ்சுல இதெல்லாம் பண்ண முடியுமா? அப்டியே பண்ண முடிஞ்சாலும், அரசு பஸ் டிக்கெட் விலையே, மண்டைக்குள்ள கத்தி பாயுற மாதிரி இருக்கு. இதுல வேற, ‘தீபாவளியை முன்னிட்டு 20 பெர்சன்ட் டிக்கெட் விலை ஏற்றப்படுகிறது-னு’ ஆம்னி பஸ்ஸுகாரன் அறிவிச்சுட்டான்.

நீயா, நானா-ங்கற ரேஞ்சுக்கு இருக்கு அரசு பஸ் டிக்கெட் விலையும், ஆம்னி பஸ் டிக்கெட் விலையும். இது அதிகாரப்பூர்வமா அறிவிச்ச 20% விலையேற்றம். அது இல்லாம டிக்கெட் விலைய, சில ஆம்னி பஸ்ஸுங்க டபுளா ஏத்துற சமாச்சாரம் வருசா வருசம் நடந்துக்கிட்டு தான் இருக்கு. இதுல எங்கிட்டு ஆம்னி பக்கம் போங்க… செவுத்துல அடிச்ச பந்து கணக்கா திரும்பி வந்துக்கிட்டு இருக்க வேண்டியது தான்.

டிரெயின்-லயும் டிக்கெட் கிடைக்கல, ஆம்னி பஸ்ஸுலயும் போக முடியல… அப்போ, கவர்மென்ட் பஸ்ல தான் என் மொத்த குடும்பத்தையும் நான் கொண்டுட்டு போனும்.. இல்ல!.

கவர்மென்ட் பஸ்-ல போகுறது-ல எனக்கு ஒன்னும் மானப் பிரச்சனை இல்ல. எவனோ ஒருத்தனுக்கு அழுவுற காச, என் அரசுக்கு நான் தாராளமா கொடுப்பேன். ஆனா, வசதி?

டிரெயின்-ல உள்ள அந்த வசதி இங்க கிடைக்குமா?

தீபாவளிக்கு நாளை காலை ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்-னு அறிவிச்சீங்க… கால 11 மணிக்கு  புக்கிங் பண்ண, 10.30 மணியிலிருந்து காத்துக் கிடந்தேன். மணியும் 11 ஆச்சு. அந்த ஐஆர்சிடிசி வெப்சைட்டை முண்டியடிச்சு தொறந்தா…. தொறந்தா… அஞ்சு நிமிஷமாச்சு, தொறக்கவேயில்ல… ஏதோ ஒன்னு சுத்திக்கிட்டே இருந்துச்சு…

இது என்னடா கருமம்-னு செம காண்டு ஆச்சு. 7 நிமிஷம் கழிச்சு, சுத்துறது நின்னு, உள்ளே போய்.. என் பேரு, என் அப்பன் பேரு-னு எல்லாத்தையும் பதிவுப் பண்ணிட்டு, மொபைல் நம்பர் வரைக்கும் கொடுத்திட்டு பார்த்தா, கடைசியா ஏதோ நாலஞ்சு சமாச்சாரத்தை டைப் பண்ண சொன்னுச்சு… நானும் டைப் பண்ணிட்டு ஓகே கொடுத்தா, நான் டைப் பண்ணது தப்பு-னு சொன்னுச்சு… இப்படியே, நாலு முறை டைப் பண்ணது தப்புன்னு சொல்லிட்டே இருந்தது, திடீர்னு லாக் அவுட்டே ஆகிடுச்சு!.

மறுபடியும் நான் லாக்-இன் பண்ணி, ஒப்பன் பண்ணி, மறுபடியும் எல்லாத்தையும் பதிவு செஞ்சு, அந்த நாலஞ்சு கருமத்தையும் டைப் பண்ணி ok கொடுத்தா, இ-வேலட்டில் பணம் சேமிக்கிறீர்களா?-னு கேட்குறான். அடங்… யோவ், இது இப்போ தேவையா? அவனவன் இடம் கிடைக்குமா-னு அல்லோலப்பட்டுக்கிட்டு நிக்குறான், இ-வேலட்கள் பணம் போடுறியா-னு கேட்க இதுதான் நேரமா?

வேண்டாம்-னு சொல்லிட்டு டிக்கெட் பதிவு பண்ண போனா… மறுபடியும் லாக் அவுட் ஆகிடுச்சு…

நொந்து நூலாகி மறுபடி ஓப்பன் பண்ணா, வெயிட்டிங் லிஸ்ட் 300.

நா மட்டும் பேச்சுலரா இருந்திருந்தேனு வச்சுக்க.. உம்ம ரயிலும் வேண்டாம், தீபாவளியும் வேண்டாம்-னு போயிருப்பேன். கல்யாணம் ஆச்சுல… என்ன பண்றது!.

ஒருசில நிமிஷத்துல, ஒட்டுமொத்த தீபாவளி புக்கிங்கும் ஆன்லைன்-லயே முடிஞ்சு போனா, நாங்கலாம் எப்படிங்க ஊருக்குப் போறது? எழுதப் படிக்கத் தெரிஞ்ச எங்களாலேயே, ஐஆர்சிடிசி சைட்டுல அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் பண்றதுல இவ்வளவு பிரச்சனை-னா எழுதப் படிக்கத் தெரியாதவன்-லாம் எப்படி ஒரு அவசரத்துக்கு ரயில்ல போறது?.

இதுக்கு ஏதாவது ஒரு தீர்வை யோசிக்க முடியாதா? ஆன்லைன்-ல டிக்கெட் புக்கிங் பண்றத குறை சொல்லல.. ஆனா, விவரம் தெரிஞ்ச ஒருத்தனால, ஏசி ரூமுல உட்கார்ந்து, 10 பேருக்கு ஒரு நிமிஷத்துல டிக்கெட் புக் பண்ண முடியுது… விவரம் தெரியாதவன், கால் கடுக்க கியூவில் நின்னு ஃபார்ம் வாங்கி ஃபில் பண்ணி டிக்கெட் எடுக்குறதுக்குள்ள தாவு கிழியுது.

மெத்த படிச்சவங்க சொல்றாங்க, ‘சர்வர் யாருக்கு முதல்ல ரீச் ஆகுதோ, அவங்களால உடனே டிக்கெட் புக் பண்ண முடியும், அப்படி சர்வர் ரீச் கிடைக்காதவங்களுக்கு டிக்கெட் புக்கிங் பண்றது சிரமம்-னு’. இந்த பிரச்சனைக்கு என்னங்க தீர்வு? சரி, நம்மால தான் புக் பண்ண முடியலன்னு எக்ஸ்டிரா 30 ரூவா கொடுத்து பிரவுசிங் சென்டருக்கு போனா, அங்கயும் சுத்திக் கொண்டே தான் இருக்கு. அப்போ நாங்கலாம் எப்படி தான் ரயில் டிக்கெட் புக் பண்றது?. அப்போ யாரு தான்யா டிக்கெட்லாம் புக் பண்றது? ஒண்ணுமே புரியல போங்க..

உடனே தட்கல்-னு சொல்வீங்க… அடப்போங்கயா காமிடி பண்ணிக்கிட்டு…

ஆனா ஒன்னு… என்னோட சிறு மூளைக்கு எட்டுனத மட்டும் சொல்றேன்… பெருகும் மக்கள் தொகை தான் இந்தப் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம்-னு நினைக்கிறேன். இன்னும் மக்கள் தொகை அதிகரிச்சா?

இப்போ புரியுதா, நான் ஏன் முதல் பாராவுல் அப்டி சொன்னேன்னு!!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Diwali ticket booking issue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X